

நமது ஆழ் மனதில் என்ன நினைக்கிறோமே அது நடப்பது உண்டு. அதை உணர்ந்தவர்களும் உண்டு. அதை உணராத பலரும் இருக்கிறார்கள். நேர்மறை ஆற்றல் எப்போதுமே ஒரு ஆரோக்கியமான ஒரு உணர்வு.
நம் மனதில் என்ன நினைக்கின்றோமோ அது நடக்கும். நமது மனதில் தோன்றும் நல்லது கெட்டது அனைத்திற்கும் ஒரு சக்தி உண்டு. இதைச் செய்தாக வேண்டும் என்று நீ திரும்ப திரும்ப சொல்லி பார், அது கண்டிப்பாக நடந்தே தீரும். அது எவ்வாறு நடக்கும் என்று தெரியாது. ஆனால் கண்டிப்பாக நடக்கும். நம்மை சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் கண்டிப்பாக உண்டாகும். எனவே, மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
கோபத்தால் அறிவு, உடல், நடத்தை என மூன்று வகையில் பாதிப்பு ஏற்படுகிறது. வில்லியம் டிஃபூர் எனும் கோப மேலாண்மை எழுத்தாளர், கோபத்தை உயர்அழுத்த சமையல் பாத்திரம் அதாவது அழுத்தச் சமையற்கலனுடன் (பிரஷர் குக்கர்) ஒப்பிடுகிறார். நமது கோபத்தின் மீது நாம் அழுத்தம் கொடுக்கலாம். ஆனால் அது வெடிக்கும் வரையே, இது மனிதருக்கு மட்டுமல்ல, இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.
வாழ்நாளில் நீ எதை சாதித்தாய்? என்ன செய்கின்றாய்? ஏன் பிறந்தாய்? என்பதை நீ உணர வேண்டும். பிறந்தவர்கள் எல்லோரும் சாதிப்பதில்லை? அதற்கு பதில் நீயே! ஆமாம் நீயே பதில் தேட வேண்டும். என்னால் ஏன் சாதனையாளராக திகழ முடியவில்லை என்றால், நீ முயற்சிக்கவில்லை என்பதே உண்மை.
வகுப்பறையில் குறிப்பிட்ட மாணவர்களே நன்றாக படிக்கின்றார்கள் என்றால் மற்றவர்கள் ஏன் படிக்கவில்லை? அதற்கு ஆசிரியர் காரணமா? என்றால் கிடையாது. படித்தவர்கள் கவனச்சிதறல் இல்லாமல் படித்தார்கள் என்பது மட்டுமே உண்மை. பெற்றோரும், ஆசிரியர்களும் முடிந்தவரை ஊக்குவிக்கின்றனர். ஆனால், நீங்கள் முயற்சிக்கவில்லை. அதை உணர்ந்து நம்மால் முடியும் என்று மனதை தயார்படுத்துங்கள். நேர்மறை ஆற்றலை உருவாக்குங்கள்.
கட்டுரையாளர்
டி.புவனா
ஆசிரியை
பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி
நாகமலை, மதுரை மாவட்டம்.