

மணமான பின் அதிக அக்கறை இன்றி, ஐந்து முறை யூபிஎஸ்சி தேர்வு எழுதிய ஜி.உமா மகேஸ்வரிக்கு ஆறாவது முயற்சியில் 2019 இந்திய பெருநிறுவன சட்டப் பணி(ஐசிஎல்எஸ்) கிடைத்துள்ளது. இவர், மத்திய அரசின் நிறுவனங்கள் பதிவுத்துறையின் சென்னை அலுவலகத்தில் உதவிப் பதிவாளராக உள்ளார்.
திருநெல்வேலியின் நெல்லையப்பர் கோயில் தெருவில், குமரகுருபரர் நர்சரி அண்ட் பிரைமரி ஸ்கூல் நடத்தி வந்த தம்பதி கணேசன், கலா. இவர்களுக்கு கி.ருக்மணி, ஜி.உமா மகேஸ்வரி என இரு மகள்கள். இதில், மிகவும் சுட்டியான இளையவர் உமா, அந்நகரின் லயோலா கான்வெண்ட்டில் 5 வரையும், செயிண்ட் இக்னிஷியஸ் கான்வெண்ட்டில் -பிளஸ் 2 வரையும் படித்தார். அரசு உதவி பெறும் இந்த இரண்டு பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன.
பள்ளிக்கல்வியில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவியாகவே இருந்துள்ளார் உமா மகேஸ்வரி. ஆசிரியர்கள் தம் வகுப்பில் நடத்தும் பாடங்களை கவனமாகக் கேட்பதால், உமாவிற்கு வீடு திரும்பியும் படிக்கும் அவசியம் ஏற்படவில்லை. கிறித்துவக் கன்னியாஸ்திரிகள் நடத்தும் இந்த மகளிர் பள்ளிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் அனைத்து மாணவிகளுக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பு மாணவி உமாவிற்கும் கிடைக்கவே அதுவே அவரது எதிர்காலத்துக்கான அஸ்திவாரம் ஆனது.
தந்தைக்குப் பெருமை தேடித்தந்தவர்: உடனடியாகப் பணிசெய்யும் பொருட்டு உமா, திருநெல்வேலியின் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பிடெக் 2008-ல் முடித்தார். அதில் அண்ணா பல்கலைக்கழக கிளையின் முதல் மதிப்பெண் பெற்ற பட்டதாரியானார்.
படிக்கும்போதே நடத்தப்பட்ட வளாக நேர்முகத் தேர்வில் உமாவிற்கு மூன்று பெருநிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதில், உமாவின் திறமையை அவரது தந்தையை நேரில் அழைத்து கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பாராட்டியுள்ளார். அதனை அடுத்து தனியார் நிறுவனம் ஒன்றில் சென்னை அலுவலகத்தில் சேர்ந்தவர், 8 மாதகாலம் பணியாற்றினார்.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தந்தையின் மரணம் உமாவை மிகவும் வாட்டியது. அதன் பிறகு தந்தை விரும்பியபடி, எம்பிஏ படித்து முடித்தார். இம்முறையும் அண்ணா பல்கலைகழகக் கிளையின் முதல் மதிப்பெண் பெற்றார். எம்பிஏவை 2011-ல் முடிக்கும் போது யூபிஎஸ்சி பயிற்சிக்காக பயிற்சி பெறவும் தேர்வானார். அதேசமயம் வங்கித் தேர்விலும் தேர்ச்சி பெற்று, கரூர் வைஸ்யா வங்கி அதிகாரியானார். இதே வங்கிப்பணியில் யூபிஎஸ்சிக்காக 2012-ல் முதல் முயற்சி செய்தார் உமா.
இங்கு இரண்டாண்டுகள் பணி செய்துவந்த உமாவிற்கு, ஐ.டி பொறியாளர் சுப்பரமணியனுடன் 2013-ல் மணமானது. மகள் அனன்யாவை பெற்றெடுத்து சற்று வளர்ந்த பின் 2016-ல் மீண்டும் பணிக்கு செல்ல முடிவெடுத்தார் உமா. ஐடி நிறுவனமான ஒரக்கல் பைனான்ஸ் பணியில் சேர்ந்தவர், மாறி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியில் தொடர்ந்தார்.
இதனிடையில், யூபிஎஸ்சி-யையும் மறக்காமல் நான்கு முறை முயன்றார். எனினும் அவரால் முதல்நிலையான பிரிலீம்ஸில் கூடத் தேர்ச்சி பெற முடியவில்லை. அக்டோபர் 2017-ல் வங்கிப் பணியை ராஜினாமா செய்தார். பிறகு, தனக்கிருந்த கடைசி ஒரு முயற்சியில் முதன்முறையாகத் தீவிரம் காட்டியவருக்கு கிடைத்தது ஐசிஎல்எஸ்.
ஊக்கமும் சவாலும்: இதன் நினைவுகளை அதிகாரி உமா மகேஸ்வரி பகிர்ந்தபோது, “குடிமைப்பணி என்பது பிளஸ் 2 படித்தபோது ஒரு கட்டுரை போட்டியில் அறிமுகமானது. இருப்பினும் அந்த காலகட்டத்தில் பள்ளி அளவில் ஒரு இணையதளம் உருவாக்க முடிந்ததால் கணினித் துறை எனக்கானது என்றே நினைத்தேன். எம்பிஏ படிக்கும்போது பொருளாதார பேராசிரியரான அபுபக்கர் எனக்கு யூபிஎஸ்சி தேர்வு எழுத தொடர்ந்து ஊக்கமளித்தார். மணமான பின் எனது கணவர் மற்றும் மாமனார் லெப்டினட் கர்னல்.எல்.பி.நாரயாணன், மாமியார் சண்முகசுந்தரி, சகோதரி ருக்மணி உள்ளிட்டோர் அளித்த ஒத்துழைப்பும் என்னை ஐசிஎல்எஸ் அதிகாரியாக்கியது” எனத் தெரிவித்தார்.
கடைசி முயற்சிக்காக மட்டும் சென்னையில் தனியார் பயிற்சி மையம் ஒன்றில் உமா சேர்ந்தார். இதற்காக அன்றாடம், வேளச்சேரியில் இருந்து அண்ணாநகருக்கு பேருந்தின் நெரிசலில் வந்துசெல்வதே அவருக்கு போராட்டமாக இருந்துள்ளது. இங்கு பயின்றவர்களில் தம்மை விட இளம் வயதானவர்களின் போட்டியை சமாளிப்பதும் உமாவிற்கு பெரும் சவாலானது. இதனால், அவ்வப்போது மனம் தளர்ந்தவருக்கு, அவரது சக மாணவி இந்துமதி பயிற்சியில் சேர்ந்தது தோள் கொடுத்தது போல் ஆறுதலாக இருந்தது.
இது குறித்து அதிகாரி உமா மகேஸ்வரி கூறும்போது, “முதல் ஐந்து முறையும் அதிக அக்கறை காட்டாமல் வீணடித்தேன். கடைசி முயற்சியில், படிப்பதே அன்றாடப் பணியாக இருந்துவந்த குடிமைப்பணி போட்டியாளர்களுடன் நான் மணமான குடும்பப் பெண்ணாக இருந்தேன். 5 முயற்சிக்கு பின்பும் யூபிஎஸ்சி தேர்வை புதிதாக எழுதுவது போல் கற்க வேண்டியதாயிற்று. குழந்தையை பள்ளிக்கு அனுப்பி, கணவரை கவனித்தது போல மீதமுள்ள நேரத்தில் படித்தேன். அரசியல் அறிவியலை விருப்பப் பாடமாக எடுத்தாலும் அதை இரண்டே மாதங்களில் படிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. ஒரு வழியாக கடைசி வாய்ப்பில் ஐசிஎல்எஸ் பெற்றேன்” எனத் தெரிவித்தார்.
ஐசிஎல்எஸ் அதிகாரிகளுக்கு அடிப்படை பயிற்சியானது யூபிஎஸ்சியின் இதரப் பணி பெற்றவர்களுடன் இணைந்து ஐதராபாத்தில் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பயிற்சி பெற்ற உமா டெல்லி அருகிலுள்ள மானேஸரின் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் கார்பரேட் அஃபையர்ஸில் 2 வருடப் பயிற்சிக்கு பின் மத்திய பெருநிறுவனத்துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார். இத்துறையின் முக்கிய பிரிவுகளில் ஒன்று நிறுவனங்கள் பதிவு அலுவலகம்.
நாடு முழுவதிலும் புதிய நிறுவனங்கள் தொடங்க பதிவு செய்வது, அதன் சட்டப்படியான பணிகளை கண்காணித்தல், நஷ்டமடையும் நிறுவனங்களை மூடுதல் உள்ளிட்டவை இத்துறையின் பொறுப்பு. இதன் சென்னை அலுவலகத்தின் உதவி பதிவாளராக தற்போது பணியாற்றுகிறார் உமா மகேஸ்வரி. கல்வியிலும் குடும்ப வாழ்க்கையிலும் அடைந்த நிறைவை இந்த பணியிலும் பெறும் நம்பிக்கை கொண்டிருக்கும் அதிகாரி உமா மகேஸ்வரிக்கு வாழ்த்துகள். - கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in