

இந்த ஆண்டு மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் மாநிலம் கடந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. உத்தரப் பிரதேசம் காசியில் பாரதியார் வாழ்ந்த இடத்தில் பாரதியாரின் சிலையைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இவற்றையெல்லாம் கவனித்த பிறகு தமிழ் ஆசிரியை என்கிற முறையில் பாரதியார் குறித்து எம் மாணவர்களிடம் ஆழமான கலந்துரையாடல் நடத்தும் ஆவல் உண்டானது.
வகுப்பறையில் பாரதி பற்றி மாணவர்கள் என்ன தெரிந்து வைத்துள்ளனர் என்ற ஆர்வத்தில் வினா எழுப்ப பாரதியார் எட்டையப்புரத்தில் பிறந்தார். ஓடி விளையாடு பாப்பா பாடலை எழுதினார். யானை மிதித்து இறந்தார் என்று பொதுவான பதில்களே மாணவர்களிடமிருந்து வந்தது. பாரதி திருவல்லிக்கேணி கோயில் யானை மிதித்து இறக்கவில்லை. யானை பாரதியை இடறியது அவ்வளவுதான். பாரதி அதன் பிறகும் பத்திரிக்கைப் பணியைத் தொடர்ந்தார்.
உடல் நலக்குறைவால்தான் இறந்தார் என்றதும் மாணவர்களின் முகங்களில் ஆச்சரியம். உலகளாவிய சிந்தனையும், தொலை நோக்கு பார்வையும் கொண்ட பாரதியைப் பற்றி ஒரு சிறு அசைவையாவது மாணவர்களிடம் எழச்செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு நம் பாரம்பரிய விளையாட்டுகள், பொருட்கள், ஐவகை நிலங்களையும் காட்சிப்படுத்தலாம் என்றவுடன் மாணவர்கள் மகிழ்ச்சியோடு ஆயத்த பணியில் இறங்கிவிட்டனர்.
பாரதி பற்றி அவர்கள் மனதில் பதிந்த உருவத்தைக் கவிதையோடு இணைத்துக் காட்சிப்படுத்தினர். பாரதியின் குடும்பம், அவரது மகள் தங்கம்மா, சகுந்தலா புகைப்படங்களோடு வந்துவிட்டனர். பாரதி கருத்துப்படங்களைக் கொண்ட ‘சிந்துவெளி’ என்ற பத்திரிக்கை தொடங்க விரும்பியதை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். ‘இந்து தமிழ் திசை’யில் வெளிவந்த கருத்துப்படங்களைக் கொண்டு இதழ் உருவாக்கி இருந்தனர்.
பாரதியின் நூல்களையும், பாரதி பணியாற்றிய பத்திரிக்கை பெயர்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். மறுபுறம் தமிழர்களின் நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையின் மாதிரிகளையும், நம் பாரம்பரிய விளையாட்டுகள் பல்லாங்குழி, தாயம், சொப்புசாமான் வைத்துக் கூட்டாஞ்சோறு சமைத்தல், கில்லிதட்டு, ஆடுபுலி ஆட்டம், ஏறுதழுவுதல், கயிறு தாண்டுதல், கண்ணாமூச்சி, பச்சக்குதிரை தாண்டுதல் போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
விளையாட்டுகள் வெற்றி தோல்வியை மட்டும் கணிப்பதல்ல. பல்லாங்குழி ஆட்டம் ஒருவர் பொருள் மற்றவரிடம் சென்றதும் பொருளை இழந்தவர் எவ்வாறு தன் பொருளை மீட்டெடுக்கிறார் என்பதைக் கற்றுக் கொடுக்கும் விளையாட்டு என்பதை மாணவர்கள் விளங்கிக்கொண்டு விளக்கிய விதம் அருமை.
இக்கண்காட்சி வழி என்ன அறிந்து கொண்டீர்கள் என்று கேட்டபோது பாரதி என்றால் கவிஞர் என்று தான் நினைத்திருந்தோம். அவர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரையாளர், கதைஆசிரியர் என்பதையும் அவரது மனைவி பெயர் கண்ணம்மா என்று நினைத்தோம் ஆனால் செல்லம்மா என்பதையும், அவரது மகள் பற்றியும் அறிந்தோம் என்று கூறினர்.
பாலை என்பது தனிநிலமல்ல குறிஞ்சியும் முல்லையும் தன்நிலை இழக்கும்போது உருவானது என்பது புதிய செய்தியாக இருந்தது. கற்றல் என்பது பாடப்புத்தகங்களைத் தாண்டி, காட்சி வழியாக இருந்தது கற்பனையைத் தூண்டியதை உணர்ந்தோமென்று மகிழ்வாகப் பகிர்ந்தனர். கட்டுரையாளர்: ஆசிரியர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.வி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, சமயபுரம்.