மாணவனின் திறமையை கண்டறிவதே கலைதான்

மாணவனின் திறமையை கண்டறிவதே கலைதான்
Updated on
1 min read

அந்த மாணவனை எனக்கு ஏழாம் வகுப்பில் இருந்தே தெரியும். அந்த வகுப்பிலேயே அவன் தான் உயரமானவன். அவனுக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். அவன் உயரம்விளையாட்டிற்கு ஏதுவாக அமைந்தது. திறமையால் உயர்ந்தவர்கள்எல்லாம் ஹீரோக்கள் என்றால் என்னைப் பொருத்தவரை அவனும் ஹீரோதான். விளையாட்டுத் திறமை அவனிடம் நிரம்பிக் கிடந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பத்தாம் வகுப்பில் அவனுக்கு நான் வகுப்பாசிரியர். அவன் இன்னும் வளர்ந்து இருக்கிறான் அனைவரும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு.

10-ம் வகுப்பு என்பதால் மதிப்பெண்கள் முக்கியம் என்ற பதற்றத்துடன் அவன் பெற்றோர் அவனை விளையாட அனுமதிக்காதீர்கள் படிப்பு முக்கியமல்லவா என்றனர். அவனை விளையாட விடாமல் தடுப்பதும் அவனைச் சுவாசிக்க விடாமல் தடுப்பதும் ஒன்றே என்று எனக்குத் தோன்றியது.

அவன் பெற்றோரிடம் நான் பேசிப் புரிய வைத்தேன். உங்கள் மகன் நல்ல மதிப்பெண் எடுப்பான். நான் பார்த்துக் கொள்கிறேன். விளையாட்டுத்துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். அரை மனதுடன் அவர்கள் சென்றனர் .

அவனது விருப்பத்திற்கு நான் முக்கியத்துவம் கொடுத்தது அவனுள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தீவிரமான பயிற்சியில் துள்ளித்துள்ளி விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விளையாடுவதை பார்த்துக் கொண்டே கடந்து போனேன். என்னைப் பார்த்தவுடன் வலைக்கு மேலே எழும்பி பந்தை அடிக்க உயர்ந்தவன் பந்தை விட்டுவிட்டு எனக்கு இரண்டு கைகளைக் கூப்பி வணக்கம் செலுத்தினான்.

கட்டை விரலை உயர்த்திக் காட்டி விட்டு சிரித்துக் கொண்டே கடந்து போனேன். அடுத்த நாள் உணவு இடைவேளையில் கைகளில் வெள்ளி பதக்கத்துடன் கண்கள் நிறைய மகிழ்வோடு என் முன்னால் வளைந்து நின்றான். அவன் உயரம் என்பது இதுவல்ல. எல்லை கடந்தது என என் சிந்தனை உணர்த்துகிறது. - கட்டுரையாளர் ஆசிரியர், எஸ்.ஆர்.வி சீனியர்செகன்டரிபப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி மாவட்டம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in