பொள்ளாச்சி | இந்தியாவில் முதல்முறையாக தமிழக சுற்றுலா துறையின் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா

பொள்ளாச்சி | இந்தியாவில் முதல்முறையாக தமிழக சுற்றுலா துறையின் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா
Updated on
2 min read

பொள்ளாச்சி: தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா வரும் ஜனவரி 12-ம் தேதி பொள்ளாச்சியில் தொடங்குகிறது.

கோவை மாவட்டத்தில் இயற்கை எழில் நிறைந்த சுற்றுலா தலங்களாக வால்பாறை, அக்காமலை புல்வெளி, ஆழியாறு அணை, டாப்சிலிப் மற்றும் பல ஆன்மிக தலங்கள் உள்ளன. ஆனால், இந்த சுற்றுலா பகுதிகள் உலக அளவில் பிரபலமடையவில்லை. ஆகையால் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை உலக அளவில் பிரபலப்படுத்தும் பணியில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது.

வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும் இந்த பலூன் திருவிழா, இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பலூன் திருவிழாவை காண கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வருவது வழக்கம்.

இம்முறை தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொள்ளாச்சி ஆச்சிபட்டி மைதானத்தில் சர்வதேச வெப்ப பலூன் திருவிழா நடைபெற உள்ளது.

10 பலூன்கள்: இதுகுறித்து தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா (TNIBF) நிறுவனரும் குளோபல் மீடியா பாக்ஸ் இயக்குநருமான பெனடிக்ட் சாவியோ கூறுகையில், “இந்த ஆண்டு 10 பலூன்கள் வருகின்றன. இவற்றின் சராசரி உயரம் 60 அடி முதல் 100 அடி. மூன்று பலூன்கள் ஒரு சிறப்பு வடிவத்தைக் கொண்டிருக்கும்.

அதில் ஒன்று, பிரேசில் நாட்டு ‘டினோ’ பலூன் டைனோசரைப் போலவும், பெல்ஜியத்தைச் சேர்ந்த ‘ஸ்மர்ப்’பலூன் கார்ட்டூன் போலவும், கனடாவைச் சேர்ந்த பலூன் ‘ப்ளூ பியர்’ கரடி போலவும் இருக்கும். இந்த பலூன்களை இயக்குவதற்கு ஒரு பெண் விமானி உள்பட உலகம் முழுவதும் இருந்து விமானிகள் பொள்ளாச்சிக்கு வருகிறார்கள்" என்றார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (டிடிடிசி) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "இந்த ஹாட் பலூன் திருவிழா குடும்ப திருவிழாவாக இருக்கும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பலூனையும் பார்வையாளர்கள் பார்க்கலாம்” என்றார்.

தமிழக சுற்றுலா துறை சார்பில்: இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறும்போது, “இதுவரை தனியார் சார்பில் பலூன் திருவிழா நடைபெற்ற நிலையில், தற்போது முதல்முறையாக சுற்றுலா துறை சார்பில் பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா ஜனவரி 12-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் அமெரிக்கா, நெதர்லாந்து, வியட்நாம், உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து ராட்சத வெப்பக்காற்று பலூன்களை கொண்டு வந்து, இங்கே பறக்கவிட உள்ளனர். இந்தியா சார்பில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறையின் பலூன் பறக்க விடப்படுகிறது. பலூன் திருவிழா நடைபெறும் திடலில் குறிப்பிட்ட உயரத்தில் வானில் பலூன்கள் நிலை நிறுத்தப்படும். சுமார் 150 அடி உயரத்தில் வானில் இருந்தபடி பொள்ளாச்சி நகரின் அழகை ரசிக்கலாம். மாலைநேரத்தில் இசை நிகழ்ச்சியும், குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் இடம் பெறுகின்றன” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in