

சின்ன சின்ன ஆசைகள் சிறியதொரு கனவோடு பணிக்கு வந்தேன். அதுவே என் வாழ்க்கை ஆனது. அதை ரசித்து வாழ ஆரம்பித்தேன். வீட்டில் என்ன நடந்தாலும், பேருந்து நிலையம் வந்து குழந்தைகளின் முகம் பார்க்கும் போது நான் பெற்ற பிள்ளையை மறந்து விடுவேன்.
அப்படி ஒரு பணிதான் ஆசிரியர் பணி. பணிச்சுமையாக இருந்தாலும் அதை நான் ஒரு பெரும் சுமையாக ஒரு நாளும் நினைத்தது இல்லை. கரோனா காலத்தில்கூட வீட்டிலிருந்து எடுத்த வகுப்பை விட எப்பொழுது பள்ளி திறந்து பள்ளிக்குச் செல்வோம் என்று ஏங்கிய நாட்களே அதிகம். அது ஒரு சூழ்நிலையும் கூட.
ஒவ்வொரு வருடமும் வகுப்பறையும் குழந்தைகளும் மாறிக்கொண்டே தான் இருப்பார்கள். புதிய வகுப்பறை புதிய சூழல் என்பதெல்லாம் இந்தப் பணியில் ஒன்றும் புதிதல்ல. அதே வகுப்பறை அடுத்த ஆண்டு புதிய மாணவர்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அவர்களை பாடத்தோடு நம் அன்பு கலந்து தயாரிக்க வேண்டும் இதுதானே ஆசிரியப் பணியாக இருக்கிறது.
அப்படியான ஒரு புதிய முகங்களுடன்கூடிய வகுப்பறையில் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறேன். நாட்கள் மெல்ல நகர மதிய உணவு சாப்பிடும் போது அவர்களுடன் வகுப்பில் இருக்கும் சூழல் உருவானது.அப்படி வகுப்பைச் சுற்றி வரும்போது என்னுடைய கவனத்தை அந்தக் குழந்தை ஈர்த்தாள்.
அப்போதிலிருந்தே அவ்வகுப்பில் அனைவரிடமும் ஒரு விதமான பற்றுதல் தோன்றியது. அந்த வகுப்பில் என்னை யாருக்குப் பிடிக்கும் பிடிக்காது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னருகில் எதையோ ஒன்றைச் சொல்ல வருவாள் அவள். ஆனால் சொல்லாமலே சென்று விடுவாள். அவள் வாய் திறந்து அதிர்ந்து பேசியதுகூட இல்லை.
அவளின் உதட்டசைவும் கண் பேசும் பாஷைகளும் வைத்து நான் ஒன்று நினைப்பேன். எல்லாத்தையும் விட அவளின் கால்கள் இரண்டும் தடுகிடத்தோம் போடும். அவளால் இயல்பாக என் அருகில் வந்து நின்று பேசக்கூட இயலாமல் போன நாட்களே அதிகம். அவள் காலும் கையும் வாயும் கண்ணும் ஒவ்வொரு மொழி பேசும்.
அவள் மற்றவர்களுடன் பேசி சிரிக்கும் போது அவளுடைய அசட்டுத்தனமான சிரிப்பைக் கண்டு ரசிப்பேன். அத்தனை அழகான தருணம் அவை. அருகில் வருவாள் காதருகில் தன் உதட்டசைவால் இரண்டு மூன்று வார்த்தைகளால் தன் அம்மா இதை சொல்ல சொன்னாங்க என்று செய்தியைக் கூறிவிட்டு ஒரு நெளி நெளிந்து சென்று விடுவாள். அவளை அழைத்துப் பேச வேண்டும் என்று எனக்குத் தோணும்.
ஆனால் அப்படி பேசியது இல்லை. அவள் பயந்த சுபாவம் உடையவள். மிகவும் கவனமானவள் என்பது எனக்குத் தெரியும். என் கண்கள் அந்த வகுப்பில் அவளைத்தான் அதிகம் பார்த்திருக்கும். நான் பார்ப்பதையும் அவள் அறிவாள். ஆனால், அவள் அறியாதது போல இருந்து கொண்டு அசட்டுத்தனமான சிரிப்புகளால் வெளிப்படுத்துவாள்.
அவளைப் பற்றிய நினைவுகள் என்னைத் தினமும் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கின்றன. அவளின் அழகும் இளஞ்சிவப்பு உதடும், ரெட்டை குடுமியும் அவளுடைய நடையும் கார்ட்டூன் சேனல்களில் வரும் பொம்மை போல இருப்பாள். தினமும் ஏதும் பேசாமல் என்னருகில் வந்து செல்லும் அவளுக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை.
நானும் அவளிடம் என்ன வேண்டுமென்றும் கேட்கவில்லை. ஏனென்றால், அவளின் பொம்மை நடைக்காகவும் கள்ளம் கபடமற்ற சிரிப்புக்காகவும் தான் அவளிடம் கேட்காமல் அவள் என் அருகில் தினம் வருவதை ரசித்துக்கொண்டே இருக்கின்றேன். மௌனமாகப் பேசிக்கொண்டே இருக்கும் அவளின் புன்னகைக்கு விடை கூறிக் கொண்டு தான் இருக்கின்றேன். அவள் புன்னகை மொழி கயல்விழி. - கட்டுரையாளர் ஆசிரியர், எஸ்.ஆர்.வி.சீனியர் செகன்டரி பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி மாவட்டம்.