காலத்தை வென்ற கவிதைகளின் ஊற்று ரூமி

காலத்தை வென்ற கவிதைகளின் ஊற்று ரூமி
Updated on
1 min read

"நீ கடலின் ஒரு துளியல்ல...ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்".

“வானில் தெரியும் நிலவைப் பார்...ஏரியில் தென்படும் ஒன்றை அல்ல”.

“நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாயோ... அது உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது”.

இது போன்று வாழ்க்கையின் மீது பிடிப்பும், தன் மீது அதீததன்னம்பிக்கையும் ஊட்டக்கூடிய ஆயிரக்கணக்கான கவிதைகளை வடித்தவர் தத்துவ கவி ரூமி. ஆகவேதான் இத்தகைய கவிதைகளை படைத்த அந்த மனிதர் மறைந்து 700 ஆண்டுகள் ஆனதற்கு பிறகு இன்றும் அவர்கள் உலகெங்கிலும் வாழும் கவிதை பிரியர்களால் கொண்டாடப்படுகிறார்.

ரூமி என்றாலே தத்துவம் என்று அர்த்தம். ரூமி என்றதும் வயதான தோற்றத்தில் கையில் மயில் இறகுடன் அமர்ந்து எழுதுவதுபோல் இருக்கும் உருவப்படம் நினைவுக்கு வரும். பாரசீக கவிஞரும், தத்துவஞானியும், ஆன்மிகவாதியும், இஸ்லாம் சூபி துறவியுமான ரூமியின் இயர்பெயர் ஜலாலுத்தீன் முகம்மது பல்கி. இவர் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி என்றும் மௌலானா ரூமி என்றும் அழைக்கப்படுகிறார். 1207 செப்டம்பர் 30 இன்றைய ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கு நகரத்தில் ரூமி பிறந்தார் என்று கூறப்படுகிறது. பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் ரூமி.

ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. 2007-ல் இவர் அமெரிக்க அரசால்மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப் பட்டார்.

ரூமியின் படைப்புகள்: ரூமியின் எழுத்துகள் பாரசீக மொழியில் எழுதப்பட்டவை. ‘மஸ்னவி’ என்பது ஆழமான ஆன்மிகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக் கவிதைகளின் தொகுப்பு புத்தகமாகும். இது பாரசீக மொழிக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. இவரின் கவிதைகள் பிற்காலத்தில் பாரசீகம், உருது, பஞ்சாபி, துருக்கிய இலக்கியங்கள் மீது தாக்கம் ஏற்படுத்தியது. இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல் ‘திவான்-ஈ- ஷம்ஸ்-ஈ தப்ரீஸி’ (Divan-i Shams-i Tabrizi) என்பதாகும்.

பாடப்புத்தகத்தில் ரூமி: ஜலாலுதீன் ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ். தமிழில் “தாகங்கொண்ட மீனொன்று” என்ற தலைப்பில் என்.சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். இத்தொகுப்பில் உள்ள ‘விருந்தினர் இல்லம்’ எனும் கவிதை தமிழக அரசு பள்ளி பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளது.

‘மஸ்னவி’ எழுத உதவியவர்: ரூமியின் சீடராகவும், தோழராகவும் வாழ்ந்தவர் ஹுஸாமுதீன் ஹஸன். தனது தோழர் ஹுஸாமுதீன் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக ‘மஸ்னவி’ புத்தகத்தில் 2 பாடல்களுக்கு ஹுஸாமுதீனின் பெயரை தலைப்பாக சூட்டினார். ‘மஸ்னவி’ நூலுக்காக ரூமி தினமும் பாடல்களைச் சொல்லச் சொல்ல ஹுஸாமுதீன் அவற்றை எழுதினார். மொத்தம் 25,600 பாடல்கள், ஆறு அத்தியாயங்களில் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ரூமி 68 வயதில் 1273 டிசம்பர் 16-ல் காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in