

“அடுத்த வாரத்துக்குள்ள இந்த ப்ராஜக்ட் (ஆய்வு) செய்து முடிக்கணும்” என ஆசிரியர் சொல்லக் கேட்டிருக்கலாம். பள்ளி வாழ்க்கையில் இப்படி பல ஆய்வுகளை ஆரம்ப வகுப்பு முதலே செய்யச் சொல்வார்கள். அதுபோலவே பல தனியார் அமைப்புகள், அறிவியலைப் பரப்பும் இயக்கங்கள், உள்ளூர் சங்கங்கள், பள்ளிக்கு வெளியே கண்காட்சிகளும் நடத்துவார்கள். பள்ளிகளிலும் கணித/அறிவியல் கண்காட்சிகள் நடந்து வருகின்றன. நீங்கள் முன்னரே பங்கெடுத்திருப்பீர்கள், எதிர்காலத்திலும் பங்கெடுக்க செய்வீர்கள்.
ஆமாம், இந்த ஆய்வுகளும் கண்காட்சிகளும் யாருக்கு? ஏற்கெனவே பெரிய பாடபுத்தகங்களைப் படிக்க வேண்டும், மாதாந்திர தேர்வுகள், பருவத்தேர்வுகள் என உரியதுக்கே நேரமே இல்லை என்ற உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால், இந்த செயல்பாடுகள் முழுக்க உங்களுக்கானதுதான். இந்த செயல்பாடுகளை வெறும் சடங்காக செய்யாமல் அதன் ஆன்மா என்னவென்று அறிந்து செயல்பட்டால் அதுவே கல்வியின் வெற்றியாக உருமாறும்.
ஏன்? ஒரு கருத்தினை எப்படி உள்வாங்கி இருக்கிறீர்கள் என்பதை வெளிக்கொணரவே இத்தகைய ஆய்வுகள். அது அறிவியல்/கணிதக் கருத்தாக/பாடமாக இருக்கலாம். எந்த அளவுக்குப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள், எவ்வளவு ஆழமாக உள்வாங்கி இருக்கிறீர்கள் என்பதைக் கணிக்க இவை உதவும். இம்மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ளும்போது நிறையத் தேடல் உண்டாகும். அந்த கருத்தை விளக்குவது எப்படி என ஆராய்வீர்கள். ஏற்கெனவே என்ன செய்திருக்கிறார்கள் எனக் கேட்பீர்கள். அங்கிருந்து புது வடிவம் பிறக்கும்.
எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதிலும் இருக்கிறது சவால். செயல்படும் மாதிரியாக (Working Model) செய்யப்போகிறீர்களா அல்லதுசார்ட் பேப்பரில் வரைந்து விளக்க இருக்கிறீர்களா அல்லது அதன் பயன்பாட்டை விளக்கும் விதமாக வேறு ஏதோ ஒன்றை செய்யப்போகிறீர்களா? ஆசிரியர் சொல்லிவிட்டார் என்று ஒரு விஷயத்தில் நின்றுவிட வேண்டாம். எவ்வளவு முடியுமோ முயற்சி செய்து பாருங்கள்.
தயார்நிலையில் யாரோ செய்துவைத்த ஒரு செயல் மாதிரியையோ, இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து ஓவியமோ, விளக்கமோ ஒருபோதும் கொடுக்காதீர்கள். நன்றாக உள்வாங்கி, அது மிக எளிய கோட்பாடாக இருந்தாலும், அதை உங்கள் மொழியில் சொல்வதே கண்காட்சிகளின் நோக்கம்.
முன்னேற முடிவெடுங்கள்: இம்மாதிரி கண்காட்சிகளில் ஆர்வமுடன் விளக்கம் கொடுக்கும் மாணவர்களில் பலர் அடுத்த கட்டத்துக்கு நகராமல் தேங்கிவிடுகிறார்கள். புரிதலில் சின்ன மாற்றம் ஏற்பட்டால் அவர்கள் எளிதில் முன்னேறுவார்கள். நீங்க செய்பவை மதிப்பிடும் ஆசிரியர்களுக்காக அல்ல.
அது உங்களுக்கானவை என்பதுதான் அந்த புரிதல். பக்கத்து மேசையில் இருக்கும் மாணவர் விளக்கும் கருத்தியல் இதுவரை புரியாமலே இருந்திருக்கலாம். செயல்படும் மாதிரி மூலம் விளக்கும்போது அது உங்களுக்கு நன்றாக புரியலாம். ஆசிரியர் விளக்கும்போது புரியாமல் இருந்த பாடங்கள் மிக எளிதாக சக மாணவர் (உங்கள் பள்ளியோ, வேறு பள்ளியோ) விளக்கும்போது புரியலாம். அவர்களைக் கருத்தில் கொண்டு கவனமாக தயார் செய்யுங்கள்.
கருத்தியல்களை புரிந்துகொள்வது முதல்படி, அதை எங்கே செயல்படுத்துவது, எப்படிபயன்படுத்துவது என்பது அடுத்தபடி. மற்றவர்களின் காட்சிப்பொருட்கள் உங்களுக்குள் புதிய கேள்விகளை தோற்றுவிக்கும். அதுவே அறிவியல். அதுவே வளர்ச்சியின் குறியீடு. அடுத்த முறை கண்காட்சி, ஆய்வு என்றால் முதலில் கைதூக்கிவிடுங்கள். பங்கேற்க இடமில்லை எனில் பார்வையாளராகவாவது செல்ல முயற்சி மேற்கொள்ளுங்கள். (தொடரும்) - கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர், தொடர்புக்கு: umanaths@gmail.com