

மாணவர்களின் ஆர்வம் எப்படி? எப்பொழுது? எங்கே? தூண்டப்படுகிறது என்பதைப் பொறுத்தே அவர்கள் மிளிரத் தொடங்குகிறார்கள். அவர்களிடம் உள்ள திறன்களைத் தூண்டச் செய்வதே பள்ளிகளின் தலையாய கடமை. மதிப்பெண்களை மையப்படுத்துவது அல்ல…
எம் பள்ளியில் ‘மெண்டார்ஸ் க்ளப்’என்ற ஒன்று உள்ளது. இது பள்ளியின் மனித வளத்துறையின் வழிக்காட்டுதலில் செயல்படும். மாணவர்களின் ஆர்வத்தையும் அவர்களின் தனித்திறன்களையும் வளர்ப்பதே இதன் பணி. அப்படிப்பட்ட மெண்டார்ஸ் க்ளப் - இன் ஒரு பிரிவு “ஆர். கே. நாராயணன் ரீடர்ஸ் க்ளப்” மாணவர்களின் வாசிப்புத்திறன் சமூகப் புரிதல், சிறந்த ஆளுமையாக வளர்தல்: இவற்றை மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது.
இந்தக் க்ளப்பில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் உள்ள வாசிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் சேரலாம். அதற்கு சிறிய அளவிலான நேர்காணல் உண்டு. வாசிப்பில் ஆர்வம் உள்ளதா? இல்லையா? என்று கேட்டு விரும்பியவர்கள் அனைவரும் சேர்க்கப்படுவர். நேர்காணலுக்கு வந்த ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் சூர்யா… என்னை மிகுதியாக வியப்பூட்டினான்.
உரையாடல் இப்படியாக இருந்தது…….
எதற்காக ரீடர்ஸ் க்ளப்யைத் தேர்தெடுத்தாய்?
சொசைட்டிய இல்ல சமூகத்தைப் புரிஞ்சிக்க…. அண்டு….சார்..இங்கிலிஸ்ல சொல்லவா? ( அவன் தடுமாற்றம் என்னை ஏதோசெய்தது)
சொல்லலாம் சூர்யா…
என்னுடைய ரீடிங்க இம்ரூப் பண்ண….. யூஸ் ஆகும் சரர்….
ஏன் இம்ரூப் பண்ணவேண்டும் ?
சொசைட்டி அண்டு என்விரான்மெண்ட் பத்தி நல்லா தெரிஞ்சிக்க முடியும். நான் இந்த சொசைட்டிலதான் வாழப்போறேன். என்னுடைய எண்ணம் விரிவடையும்; நான் வாசிக்க, வாசிக்க…..
எனக்கு மலைப்பாக இருந்தது. ஏழாம் வகுப்பு மாணவனுக்குள் இத்தனை சிந்தனைகளாக என்று. இப்பொழுதே முடிவு செய்துவிட்டேன் இவன்சரியான தேர்வு என்று. ஆனால் முடிவை உடனடியாக சொல்லவில்லை. பின்பு எப்பொழுதெல்லாம் என்னைப் பார்க்கின்றானோ! அப்பொழுதெல்லாம் ‘வணக்கம் சார்… நான் செலக்ட் ஆகிவிட்டேனா…?’ என்ற கேள்வியால் ஆழம் பார்ப்பான்.
நான் மனதில் நினைத்துக் கொள்வேன் இப்படிப்பட்டவனை எப்படி இழப்பது…? ஒருவாரம் கடந்த பின் தேர்வானவர்களில் அவன் பெயர் கண்டு ஓடிவந்து என்னிடம் “சார் நான் செலக்ட் ஆகிவிட்டேன்” என்றபோது அவன் முகத்தில் அத்துணை மகிழ்ச்சி, என் மனதிலும்தான்….
“களம்புகத் துடித்து நின்ற உனக்கும் வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய். உன் புன்னகைதான் அதற்குச் சான்று”என்ற அறிஞர் அண்ணா வரிகள் என் நினைவுக்கு வந்தன. பள்ளி வெறும் மதிப்பெண்ணைப் பெற்றுத்தரும் நிறுவனம் அல்ல. சமூக அக்கறையுள்ள மனிதனை மனிதனாகப் பார்க்கும் உள்ளம் கொண்டவர்களாக மாற்றும் ‘போதிமரத்தடி’ போல இருக்கவேண்டும்.
அறிவு வேட்கை கொண்ட, தன்னலமற்ற, மனிதாபிமானமிக்க, சாதி, மத, பாலின வேறுபாடின்றிச் சமூகப் பொறுப்புணர்வுடன் சகமனிதனை நேசிக்கின்ற நல்ல குடிமக்களாக உருவாக்குதல்- என்ற கொள்கையை வகுத்துச் செயல்பட்டாலே இலக்கை நாம் நிச்சயம் அடையலாம். வருங்கால இளையதலைமுறை வளம் பெறும். - விஜயன்.ந, தமிழாசிரியர் எஸ்.ஆர்.விசீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி. பிராட்டியூர், திருச்சிராப்பள்ளி.