பாரதி கைப்பட எழுதிய 3000 நூல்களுடன் அவரது நினைவுகளை சுமக்கும் இல்லம் | பாரதியார் பிறந்த நாள் 140

படங்கள் எம்.சாம்ராஜ்
படங்கள் எம்.சாம்ராஜ்
Updated on
2 min read

தமிழகத்தில் பிறந்திருந்தாலும் சுதந்திரத்துக்காகப் போராடியபோது ஆங்கில அரசு தேடத் தொடங்கவே குடும்பத்துடன் அன்று பிரான்ஸ் வசமிருந்த புதுச்சேரிக்கு இடம்பெயர்ந் தார் பாரதியார். ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள வீட்டில் வசித்தார். அவரது வாழ்க்கையின் இனிமையான காலக்கட்டமான 1908 முதல் 1918 ஆண்டு வரை புதுச்சேரியில்தான் வசித்தார். சுதந்திர போராட்டக் காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கவிதைகளை இயற்றினார்.

புதுச்சேரியில் பாரதியார் வசித்த வீட்டை அருங்காட்சியகமாகவும் நூலகமாகவும் அரசு பராமரித்து வருகிறது. அங்கு தங்கியிருந்தபோது எழுதிய கவிதைகளின் கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்கள் எல்லாம் அரிய பொக்கிஷங்களாக பாதுகாக் கப்படுகின்றன. பாரதியின் அபூர்வ புகைப்படங்கள், கையெழுத்து பிரதிகள் உட்பட 3000 நூல்கள் தரை தளத்தில் தனியாக உள்ளன. இதர 17 ஆயிரம் நூல்கள் முதல்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சுண்ணாம்பு கலவை கொண்டும், மெட்ராஸ் டைல்ஸ் மற்றும் கட்டுமானப் பொருள்கள் கொண்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாரதி தன் மனைவியுடன் இருக்கும் நூற்றாண்டு முன்பு எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படமும் இங்குண்டு. வீட்டை சுற்றி பார்க்க வரும் பலரும் பாரதி நினைவுடனே சுற்றி வருகிறார்கள்.

தேவை டிஜிட்டலாக்கும் பணி: தமிழறிஞர்கள் கூறுகையில்: பாரதியின் பல முக்கியப் படைப்புகள் அவர் இவ்வீட்டில் வசித்தபோதுதான் படைத்தார். நூற்றாண்டு கடந்த அவர் கையெழுத்து பிரதிகள் மற்றும் ஆவணங்களை அனைவரும் அறியும் வகையில் டிஜிட்டலாக்கினால் நீண்ட ஆண்டுகள் பாதுகாக்க முடியும். டிஜிட்டலாக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறோம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ரூ. 1 கோடி மட்டுமே செலவிட்டு டிஜிட்டல் நூலகமாக்கினால் எதிர்காலத்துக்கு பயன் தரும்.

செப்டம்பர் 12-தான்: இல்லத்தின் படங்கள் வரிசையில் பல ஆவணங்களும் இடம் பெற்றுள்ளன. பாரதியார் மறைந்த நாள் தொடர்பாக முக்கியக் குறிப்பும் அதிலுண்டு. செப்டம்பர் 11-ம் தேதிபாரதியின் நினைவுநாளாக அனைவரும் கடைபிடிக்கின்றனர். ஆனால்,இறப்பு சான்றிதழில் செப்டம்பர் 12ம் தேதியே குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதியை நேசிக்கும் ஆராய்ச்சி யாளர் கள் தரப்பில் கூறப்பட்டவை: செப்டம்பர் 12-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு காலமானார். அதனால் பாரதி நினைவுநாள் செப்டம்பர் 12தான்.

ஆராய்ச்சி மாணவர்கள் தொடங்கி அவரை நன்கறிந்தோர் அதையே நினைவுநாளாக கருதுவர். பாரதி இறக்கும் போது அவருக்கு 38 வயது 9 மாதங்கள்தான். 39 வயதே ஆகவில்லை.

பாரதிக்கு கோயிலில் சிலை: பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் சித்தானந்தர் கோயிலை ஒட்டியிருந்த மாந்ததோப்பிலிருந்துதான் குயில்பாட்டு எழுதினார். அது குயில்தோப்பு என்று பெயரானது. பாரதியார் இக்கோயிலை பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளார். பாரதியை கவுரவிக்கும் வகையில் சித்தானந்தர் கோயில் வளாகத்தில் பாரதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in