தேவை இங்கே ஜீரோவிலிருந்து தொடக்கம்

தேவை இங்கே ஜீரோவிலிருந்து தொடக்கம்
Updated on
2 min read

ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களுக்குத்தான் இங்கு எவ்வளவு பிரச்சினை! வகுப்பறையும், பாடமும், மாணவர்களும், பெற்றோரும், நிர்வாகமும் சக ஆசிரியர்களும், பள்ளியும், வீடும், பரீட்சை பேப்பரும், திருத்தமும் இப்படி பல. எதற்குதான் நாம் வேலைக்கு வந்தோம் என்ற எண்ணம் உங்களில் எத்தனை பேருக்கு நித்தமும் வருகிறது!? அப்படியென்றால் இந்த கட்டுரையை வாசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

உண்மையில், நடப்பு நாட்களில் ஆசிரியர்களை பற்றி எவ்வளவு குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. அது எந்த பக்கம் தவறானாலும் சரி, ஆசிரியர் கை கட்டப்பட்டு விட்டது என்று ஒரு சாராரும், குழந்தைகள் மீது வன்முறை கூடாது என்று ஆசிரியரை சாடி மறுசாராரும் நம்மையே குழப்பிக் கொண்டே இருக்கிறார்கள் அல்லவா. இவர்கள் இவ்வாறு பேசுவதை கேட்டு எத்தனை ஆசிரியர்களும், மாணவர்களும் குழம்பிப் போய் கிடக்கிறார்கள். இங்கே பல விசயங்களில் மாற்றம் வேண்டும் என்று எண்ணும் ஆசிரியர்கள் கூட, இந்த குண்டுசட்டியில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்குமாக பேசிக் கொண்டு நாட்களை ஓட்டுகிறார்கள்.

கற்றதை மறப்போமா! - இங்கே யாருக்கு யார் நிகர் என்றே பேசிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் தேவை என்ன? மாணவர்கள் நமக்கு பாரம் என்கிற எண்ணமா? நிச்சயமாக இல்லை. நாமும், மாணவ செல்வங்களும் ஒருங்கிணைந்த அமைப்பு என்பதைதான் முதல் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நாமும் அவர்களும் அன்பானஆரோக்கியமான உறவை பேணும்போது மட்டுமே நாம் நினைக்கும் மாற்றங்களை கொண்டு வர முடியும்.

இதற்கு நான் செயல்படுத்தும், எப்போதும் பின்பற்றும் வழிமுறை கற்றதை மறத்தல் (Unlearn) - புதியன கற்றல் (Relearn) என்கிற அற்புதங்கள். நண்பர்களே, நாம் இதுவரை செய்த, செய்கிற அனைத்துமே நாமாக செய்வதில்லை. நாம் கற்ற கல்வி, நம் குடும்பம், நம் சுற்றம் அனைத்துமே நம் செய்கைகளில் ஆதிக்கம் செலுத்தும். அதனால் நம்மை நாம் இக்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள நினைத்தால், இதுவரை நாம் கற்ற சூழ்நிலையிலிருந்து, முறைகளிலிருந்து விடுபட வேண்டும்.

நாம் இன்னும் எதுவுமே கற்கவில்லை என்ற ‘ஜீரோ’ நிலைக்கு வர வேண்டும். அப்போதுதான் புதிதாக, நம் சுற்றத்துக்கு ஏற்றவாறு அறிவை தீட்டிக்கொள்ள முடியும். அதற்கு உதவக் கூடிய பயனுள்ள புத்தகங்களையும், முன்னுதாரணமாகத் திகழும் ஆளுமைகளையும் நாம் அறிய முயல வேண்டும். ஆசிரியர்களாகிய நாம் கண்டிப்பாக இந்த காலத்துக் குழந்தைகளை புரிந்து கொள்ள, பாடபுத்தகங்களை மட்டுமல்லாமல், பல்துறை சார்ந்த புத்தகங்களையும் வாசிப்பது அத்தியாவசியமாகிறது. அதன் மூலம் புதிய கற்றல் நிகழும்.

எனவே, நாம் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் போது, அது யாருடைய தவறு என்ற தீர்மானத்திற்கு வராமல், அது அவர்களின் கற்றல் மற்றும் புரிதலின் வெளிப்பாடே என்று நாம் புரிந்துகொள்வதன் மூலம், அதை பிரச்சினையாகவே கருதாமல் எளிதாக கடந்து செல்லலாம். இதனால் நம் மனதும், உடலும் ஆரோக்கியமாக நீடிக்கும்.

"வேலை என்பது வேலையில்லை, நம்மை சுற்றி உள்ள மனிதர்களே".

செய்யும் வேலையை நேசித்து, நாம் நினைக்கும் மாற்றங்களை நிகழ்த்த இங்கே தேவை தொடக்கம் ஜீரோவிலிருந்து. தொடங்குவோமா! - கட்டுரையாளர்: சமூக அறிவியல் ஆசிரியர், எஸ்.ஆர். வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, திருச்சி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in