

‘வெற்றிக்கொடி’ நாளிதழில் வெளிவந்த ‘பள்ளிக்குள்ளே ஒரு சிறார் இதழ்’ கட்டுரை வாசித்தேன். மாணவர்களுக்கான இதழை மாணவர்களைக் கொண்டே உருவாக்குதல், ஆசிரியர் குழு அமைத்தால், ஜனநாயக முறையில் அந்த இதழுக்குப்பெயர் சூட்டல் , அச்சு உருவாக்கம், பிரதி எடுத்தல், வாசிப்புச் சுற்றுக்கு விடல் என்ற பகுப்பு முறையில் தெளிவை ஏற்படுத்தும் விதமாகக் கட்டுரையை எழுத்தாளர் விழியன் அமைத்திருந்தார்.
அந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டி ருக்கிற அதே நேரத்தில் எங்கள் பள்ளி தமிழாசிரியர்களின் முயற்சியால் மாணவர்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட மின்னிதழ் எங்கள் ஆசிரியர்களிடம் இருந்தது.
அந்த மின்னிதழின் பெயர் ‘மணிச்சிகை’. இதழ் உருவாக்கத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் அமர்ந்து திட்டமிட்டோம். அங்கு கூடியிருந்த ஆசிரியர்களில் ஒருவர் தனது கல்லூரி காலத்தில் மாணவர்களால் நடத்தப்பட்ட இதழ் பற்றியும், அதன் அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அந்த இதழின் பெயரையே இந்த மாணவர்களின் இதழுக்கும் சூட்டிவிடலாம் என ஆசிரியர்கள் ஒருமனதாகக் கூறி ‘இளந்தூது’ என பெயர் மாற்றினர்.
மாணவர்களிடம் இருந்து எப்படி படைப்புகளைப் பெறுவது என்ற கேள்வி அப்போது எழுந்தது. ‘இளந்தூது’ என்று எழுதி ஒட்டப்பட்ட பெட்டியைத் தகவல் பலகைக்கு அருகிலும், பள்ளி வளாகங் கத்திலும் ஆங்காங்கே கட்டுவது என பேசிக்கொண்டோம். அதில் மாணவர்களின் படைப்புகளான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ஓவியங்கள், கேள்வி-பதில்கள், நகைச்சுவை துணுக்குகள் போன்றவற்றைக் கொண்டு வந்து சேர்க்கும்படி வழிபாட்டுக் கூட்டத்தில் அறிவுறுத்தினோம்.
மாணவர்களும் பிந்தைய நாட்களில் தம் படைப்புகளை அந்தப் பெட்டிக்குள் கொண்டு வந்து சேர்த்தனர். மாணவர்களால் எழுதப்பட்ட படைப்புகளை ஆசிரியர்கள் எடுத்து வந்து அவற்றைப் பிரித்து நன்றாக எழுதி, இருப்பவற்றை சரிபார்த்து நல்ல கவிதைகளையும் சிறுகதைகளையும் தொகுத்துத் தந்தனர்.
கைப்பேசியில் உருவாகும் இதழ்: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை அனைத்துஆசிரியர்களும் ஒருங்கிணைந்தனர். ஆளுக்கு ஒன்றாக அவரவர்களினுடைய கைப்பேசியிலேயே தட்டச்சு செய்தனர். மின்னிதழ் உருவாக்குகின்ற தொழில்நுட்பம் தெரிந்த ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆசிரியர்கள் தங்களின் செல்போனிலேயே இந்த இதழை மிகநேர்த்தியாகவும் அழகாகவும் வண்ணப்படங் களோடும் வடிவமைத்துத் தந்தனர். கணினி இல்லாமல் முழுவதுமாகக் கைப்பேசியிலேயே அந்த இதழ் அச்சாக்கம் பெற்றதுஅத்தனை சிறப்பு. மின்னிதழாக உருவாக்கப் பட்டது.
அந்த இதழை உருவாக்கிய ஆசிரியர் அந்த இதழுக்கு ‘மணிச்சிகை’ எனப் பெயரிட்டிருந்தார். இளந்தூது என்றல்லவா பெயர் வைத்திருந்தோம் என்று கேட்டதற்கு அவர் ‘இளந்தூது’ என்பதை இதழ் உருவாக்கத் திட்டத்திற்கான பெயராக வைத்துக் கொள்வோம். இதழுக்கு குறிஞ்சிப் பாடலில் இடம் பெற்றுள்ள பூக்களில் ஒன்றான ‘மணிச்சிகை’ என்ற பூவின் பெயரைச்சூட்டிவிடலாம் எனக் கூறி இதழுக்கு ‘மணிச்சிகை’ என்ற பெயரை வைத்து இதழை உருவாக்கினார்.
அந்த இதழ் ஆசிரியர்கள் வாசிப்பிற்கு அவர்களின் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டது. மாணவர்கள் இதழை வாசிக்க பக்கம் பக்கமாக நகலெடுக்கப்பட்டு தகவல் பலகையில் ஒட்டப் பட்டது. முதல் இதழ் வெளிவந்த நிலையில் தற்போது இரண்டாம் இதழுக்கான படைப்புகள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டு இதழாக்கப் பணியில் உள்ளது.
எங்கள் ஆசிரியர்களின் இதழாக்கச் சிந்தனைக்கும் மாணவர்களின் படைப்பாக்கத் திறனுக்கும் மேலும் வெளிச்சம் கூட்டுவதாக ‘வெற்றிக்கொடி’ நாளிதழில் கடந்த வாரம் வெளிவந்த கட்டுரை அமைந்துள்ளது. - கட்டுரையாளர்: தமிழாசிரியர்,எஸ்ஆர்வி சீனியர் செகன்டரி பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி, தொடர்புக்கு: cholan1981@gmail.com