

அன்பு என்பது என்ன ஒரு ஆண் பெண்ணையோ அல்லது ஒரு பெண் ஆணையோ விரும்புவது அல்ல. அது பொதுவான உணர்வு என்பதை மாணவர்களுக்கு புரிய வைத்தாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடலாம்.
இன்று இருக்கும் நவீன நாகரிகம் நமது பாரம்பரிய நாகரிகத்தை குட்டிச்சுவராக்கிக் கொண்டு இருக்கிறது என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எவ்வளவு எடுத்துரைத்தாலும் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் அவர்களிடம் இருப்பதில்லை. அது பிடிப்பதும் இல்லை.
மாணவ, மாணவியரை நல்வழிப் படுத்துவதில் ஆசிரியர்களுக்கு மட்டுமில்லாமல் பெற்றோருக்கும் கூடுதல் பொறுப்பு உள்ளது. தங்கள் குழந்தைகளின் செயல்பாடு களை அன்றாடம் கவனிக்க வேண்டும். பள்ளி விட்டு வீட்டுக்கு வருகிறான் என்றால் பெற்றோர்கள் அவர்களிடம் இன்று நாள் எவ்வாறு சென்றது என்று ஆரம்பித்து ஒரு பத்து நிமிடம் அவர்களுடன் உரையாட வேண்டும். அப்படி அவர்களை ஒரு வாரம் நாம் பழக்கப்படுத்தினால் போதும். அவர்களுக்கு அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும்.
பள்ளியில் நடப்பதை வீட்டில் கண்டிப்பாக பெற்றோர் கேட்க வேண்டும். அதே போல் பள்ளியில் ஒரு மாணவன் முகம் வாடிப்போயிருந்தால் அவனது வகுப்பாசிரியர் கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவார். குழந்தைகள் பெற்றோரிடம்கூட மறைப்பார்கள். ஆசிரியரிடம் எதையும் மறைப்பது இல்லை. ஆசிரியர் ஒரு மாணவனுக்கு ஆசிரியர் மட்டும் அல்ல, ஒரு தாய் தந்தைக்கு இணையானவர்கள்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்றும் ஓர் உறவு சங்கிலியாக இருந்தால் கற்பித்தல் - கற்றல் புது பரிமாணத்தை எட்டும். - கட்டுரையாளர் ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை மாவட்டம்.