Published : 30 Nov 2022 06:15 AM
Last Updated : 30 Nov 2022 06:15 AM

மாற்றத்திற்கான வழித்தடங்கள் என் வகுப்பறையில் இருந்து...

ஜெயசுதா வேல்முருகன்

அன்று பாடவேளையில் கல்வியும், பிரிட்டிஷ் அரசாங்கமும் என்ற பாடம் நடத்தவேண்டும். எதற்கு இந்த காலத்திலிருந்து தொடங்க வேண்டும். நாம் இடைக்கால இந்தியா, ஏன் பண்டைய கால இந்தியாவில் கல்வியில் இருந்தே தொடங்கலாமே என்று முந்தைய நாளே அவர்களின் அம்மா அப்பா என்ன மாதிரியான பாடங்களை படித்தார்கள்.

தாத்தா, பாட்டி என்ன படித்தார்கள். அவர்களின் மூதாதையர்கள் குறித்து அவர்கள் அறிந்த சிலவற்றை கேட்டு தெரிந்து கொண்டு வாருங்கள் என்ற சில சுய கற்றலுக்கான பணிகளை கொடுத்தேன்.

பாட வேளையும் வந்தது. எத்தனை பேர் தாத்தா, பாட்டியிடம் பேசினீர்கள் என்று கேட்ட போது வகுப்பில் 10 பேர்தான் சொன்னார்கள் என்பது வருத்தமானாலும், அவர்களின் பதில்கள் அனைவருக்குமான புரிதலை கொடுத்தது.

நகைப்புக்குரியது அல்ல! - எங்க பாட்டி 5-ம் வகுப்புவரை படித்து இருக்கிறார் மேம் என்று ஒரு மாணவி. பாட்டி பள்ளி செல்லவில்லை தாத்தா மட்டுமே சென்று இருக்கிறார் என்றும் விதவிதமாக வந்தது. அதில் ஒரு மாணவன் எங்கள் பாட்டி உறவினர்களுடன் பாகிஸ்தானில்தான் இருந்தாராம், அங்கு படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

சிறிது நாளில் இந்தியா வந்து விட்டார்கள் என்று தெரிவித்தான். அப்டின்னா ”நீங்க தீவிரவாதியாடா” என்று பக்கத்தில் இருந்த மாணவன் கேட்க. வகுப்பே நகைக்க. எனக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியாக இருந்தாலும் இதையே பேசு பொருளாக மாற்றினேன்.

இது நகைப்புக்குரியது அல்ல குழந்தைகளே, சிந்தனைக்கு உரியது. இது அந்த பையனின் தனிப்பட்ட கருத்தே அல்ல. இதே போல நிறைய விஷயங்களில் நம்மை அறியாமலே சில கருத்துகள் மனதில் பதிந்து கிடக்கின்றன என சொல்லிவிட்டு பெண் பிள்ளைகளுக்கு எந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்று பசங்களிடம் கேட்டேன். கோ கோ, பல்லாங்குழி என்று பதில் வந்தது. சரி உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்ட போது கபடி, கிரிக்கெட் என்று பதில்.

பிள்ளைகளிடம் எத்தனை பேர்க்கு கிரிக்கெட் பிடிக்கும் என்றேன். புள்ளி விவரங்களுடன் சிலர் எவ்வளவு பிடிக்கும் என நிரூபித்தார்கள். அவர்களுக்கு பிடிக்கும் ஆனால் விளையாட முடியாது என்று கிண்டல் இருந்தது. சரி ஆண்களில் எத்தனை பேர் மிகவும் சிறப்பாக விளையாடுவர் என்றேன். மிக மிக குறைவு. இங்கே விளையாட தெரிந்தவர்தான் விளையாட்டை ரசிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்றேன். வகுப்பில் அமைதி நிலவியது.

கேள்வி எழுப்புங்கள்: மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விஷயங்கள் பிடிக்கும். அது பிடித்த பொம்மையோ, விளையாட்டோ எதுவாக கூட இருக்கலாம். இதேபோலத்தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, அல்லது நாட்டையோ பற்றி அவதூறாகப் பேசுவதும். எல்லா சமூகங்களிலும், மதங்களிலும் விதவிதமான மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். குறிப்பிட்ட சிலரை மட்டும் அப்படி நாம் நினைப்பது ஏன்? நம்மில் பலரும் அந்த கருத்துகளை கொண்டிருக்கலாம்.

அது சரியான கருத்து இல்லை என்று நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதே போன்ற அர்த்தமற்ற கருத்துக்கள் நம் மனதில் தோன்றும்போது விழிப்போடு அதை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் கூறும்போதும் ஏற்றுக் கொள்ளாமல் ஏன், எப்படி என கேள்வி எழுப்ப வேண்டும். செய்வீர்களா என்றேன். கண்டிப்பாக டீச்சர் என்று உற்சாகமாகச் சொன்னார்கள் குழந்தைகள்.

இதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் தாராளமாக பேசலாம். என்னிடமும் நீங்கள் உங்கள் வாதத்தை முன் வைக்கலாம். அதுபற்றி நாம் உரையாடி ஒரு முடிவுக்கு வரலாம் என்று கூறினேன். முப்பது மாணவர்களை முப்பது சமூகப்பின்னணியுடன் ஒருங்கிணைத்துப் பார்க்கிறேன். மாற்றத்திற்கான வழித்தடங்கள், என் வகுப்பறையில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக. நாளைய இந்தியாவின் வளர்ச்சி கரங்களை உயர்த்திய உணர்வுடன். - கட்டுரையாளர், ஆசிரியர், எஸ்ஆர்வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, திருச்சி.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x