நினைவு தெரிந்த நாளில் இருந்து...

நினைவு தெரிந்த நாளில் இருந்து...
Updated on
1 min read

சிறுவயதில் பள்ளிக்குச் சென்ற போது வகுப்பில் ஆசிரியர், “நோட்டை எடுத்து எழுது” என்று சொல்லும் போது தான் கவனித்து இருப்போம், நாம் மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்த பென்சில் டப்பா பையில் இல்லை என்பதை. நமது முகத்தைப் பார்த்த உடனேயே நமது உயிர்த்தோழனோ அல்லது தோழியோ நாம் கேட்காமலேயே ஆசிரியருக்குத் தெரியாமல் நமக்கு எடுத்துக் கொடுத்திருக்கலாம். இப்படி ஒரு நட்பு இன்றைய காலகட்டத்தில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!

தொடக்கப் பள்ளி பருவத்தில் உடல் நலமின்மையால் விடுப்புஎடுக்க நேர்ந்தால் ஒரு கிலோமீட்டர் தள்ளி வீடு இருந்தாலும் கூட வீடு தேடி வந்து நலம் விசாரித்துச் செல்லும் தோழி அமையப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொண்டும் எல்லாமே எனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் யாருடைய சொல்லையுமே கேட்டிடாத பதின்பருவ இளைஞர்கள் கூட, “நீ சொன்னா எது வேணும்னாலும் செய்வேன்டா!” என்று சொல்லும் நண்பன் அமைந்தால் வருடத்தின் 365 நாட்களும் இனிமைதான்.

கல்லூரிப் பருவத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி கொடுத்த பின்பும் வறுமையால் அதனை வீட்டில் எப்படி தெரிவிப்பது என்று தவிக்கும் நேரத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட ‘பாக்கெட்மணி’ யை நட்பிற்காக எடுத்து நீட்டும் நண்பன் கிடைத்தால் வறுமையும் வரம்தான்.

நாம் தவறிழைக்கும் பொழுது கண்டித்து நல்வழிப்படுத்தும் நண்பனே, “உண்மையான நண்பன்” என்பதை மாணவருக்குப் புரிய வைப்பது ஒவ்வொரு ஆசிரியரின் இன்றியமையாத பணிகளில் ஒன்று.

நலம் விசாரிக்கும் தோழியும்,

தோள் கொடுக்கும் தோழனும் இருந்தால்

சோதனைகளும் சாதனைகளாகும்

கட்டுரையாளர், தலைமை ஆசிரியர், பல்லோட்டி மே.நி.பள்ளி, நாகமலை, மதுரை

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in