Published : 28 Nov 2022 06:11 AM
Last Updated : 28 Nov 2022 06:11 AM

அரசு பள்ளிகளில் களைகட்டும் கலைத்திருவிழா

சோ. இராமு

கல்வி கற்றல் என்கிற நிலையைத் தாண்டி மாணவ மாணவிகளிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறனை, படைப்பாற்றலை வெளிக்காட்ட, திறமையை மெருகேற்றிக் கொள்ள கல்வித் துறையின் ‘கலைத் திருவிழா’ மேடை அமைத்து கொடுத்துள்ளது.

6 முதல் 12-ம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கலைத் திருவிழா தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது. இம்முறை மேல்முறையீடு செய்ய வாய்ப்பு, மொழித் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளில், 196 இனங்களில் கலை திருவிழா போட்டி நடைபெறுகிறது.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கவின் கலை வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம் மொழித்திறன் என ஆறு வகை போட்டிகள் 36 இனங்களில் நடைபெறுகிறது.

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுண் கலை, வாய்ப்பாட்டு, கருவி இசை - தோல் கருவிகள், துளை கருவிகள், நந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் என 9 பிரிவுகளில் போட்டியில் நடைபெறுகிறது.

மொழித்திறனுக்கு முக்கியத்துவம்: மொழித்திறன் பிரிவில், கதை எழுதுதல் கவிதை புனைதல் (தமிழ், ஆங்கிலம்) பேச்சுப்போட்டி (தமிழ் ஆங்கிலம்) திருக்குறள் ஒப்பித்தல் ஆங்கில பாடல், கதை சொல்லுதல், கட்டுரை போட்டி (தமிழ் ஆங்கிலம்) பட்டிமன்றம். பள்ளி ஆண்டு மலருக்கு கட்டுரை எழுதுதல், நாளேடுகளுக்கு தலையங்கம் எழுதுதல், நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு, நன்றி உரை தயாரித்தல், மேடையில் உரையாற்றுவதற்கு ஏற்ற உரை தயாரித்தல் . தமிழ் கவிஞர்களின் பாடல் ஒப்புவித்தல், பிற மாநில மொழிகளில் கவிதை சொல்லுதல், விவாத மேடை, இணைய கருத்துருவாக்கம் ஆகியன நடைபெற்றன. வெற்றியாளர்கள் பெயர் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேல்முறையீடு: போட்டியின் முடிவுகள் பற்றி பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் மேல் முறையீட்டு மன்றம் உள்ளது. உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ.500. சாதகமான தீர்ப்பு வந்தால் தொகை திருப்பி அளிக்கப்படும்.

பள்ளி அளவில் போட்டி முடிந்து ஒரு மணி நேரத்திற்குள் ரூ.500 கட்டணம் செலுத்தி முறையீடு செய்யலாம். மாநில அளவில் மேல்முறையீட்டு கட்டணம் ரூபாய் 1000. முறையீட்டு மன்றத்தில் கலை வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு போட்டிக் கும் மதிப்பீடு செய்வதற்கு 100 மதிப்பெண்கள். மாநிலப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு உண்டு . அதற்கு கீழ்நிலை போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்படும்.

வட்டார அளவில் முதல் 2 இடம் பெறுவர்கள் மாவட்ட போட்டிகளுக்கும், மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவுகளும் முதலிடம் பெறும் தனிநபர் மற்றும் குழுக்கள், மாநில போட்டியிலும் கலந்து கொள்ள முடியும். அரசு பள்ளிகளில் நடைபெறும் இந்த கலைத் திருவிழாவின் இறுதிப்போட்டி 2023 ஜனவரி முதல் வாரம் நடைபெறவுள்ளது.

திறமையை வெளிக்காட்ட வேண்டும்: பாட புத்தகம், தேர்வு மதிப்பெண் என்கிற நிலையைத் தாண்டி மாணவர்களிடம் புதைந்துகிடக்கும் கலைத் திறன், கற்பனை, படைப்புத் திறன்களை வெளிக்காட்டுவதற்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திறமையை வெளிக்காட்டி சாதிக்க வேண்டும். கலைத் திருவிழா போட்டிகள் நாளை உங்களை சிறப்பான கலைஞர்களாகவும், படைப் பாளர்களாகவும் உருவாக்கும்.

கட்டுரையாளர்: ஆசிரியர்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

அய்யம்பாளையம்,ஆத்தூர் ஒன்றியம்

திண்டுக்கல் மாவட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x