உருவாக்குவோம் புத்தக தூதுவர்களை

உருவாக்குவோம் புத்தக தூதுவர்களை
Updated on
2 min read

நிறைய பதிப்பகங்கள் தற்சமயம் அரசுப்பள்ளிகளுக்கும் நூல்களைக் கொடையாகக் கொடுக்கும் பட்சத்தில் நிறையத் தள்ளுபடி கொடுத்து வாசிப்பினை ஊக்குவிக்கின்றனர்.

நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குக் கொடையாகப் புத்தகங்களைக் கொடுக்க முன்வருகின்றனர். அதே சமயம் புத்தகத் தூதுவர்களை எல்லா இடங்களிலும் உருவாக்க வேண்டியுள்ளது.

புத்தகங்கள் இருக்கின்றன, குழந்தைகள் இருக்கின்றனர். எல்லா குழந்தைகளும் உடனடியாக வாசிக்கதொடங்குவதில்லை. ஏனெனில் இவர்களுக்கு இடையே ஓர் இணைப்புப்பாலம் தேவைப்படுகின்றது. இந்த இணைப்புதான் புத்தகத் தூதுவர்கள். இவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர், தன்னார்வலர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

என்ன செய்யலாம் புத்தகத் தூதுவர்கள்? - புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகளின் வயது,வாசிப்புத்திறன், சுவைக்கு ஏற்ப புத்தகங்களை கொடுத்துப் பரிசோதிக்கலாம். சில குழந்தைகளுக்குத் தனியாக வாசிக்க வராது, அப்போது கூட்டு வாசிப்பில் ஈடுபடுத்தலாம். ஒரு குழந்தை ஒரு பக்கமோ, ஒரு சில வரிகளோ படிக்க வைத்து அடுத்த குழந்தையை அடுத்த சில வரிகள் வாசிக்க வைத்தல் என தொடரலாம். தானும் வாசித்துக்காட்டலாம்.

பின்னர், வாசித்த புத்தகம்/கதையைப் பற்றி தங்கள் அனுபவங்களைக் கூறலாம். கட்டாயம் இல்லை. அதில் வரும் முக்கிய பாத்திரங்கள், வேறு எப்படிக் கதையைச் சொல்லி இருக்கலாம், பிடித்த அம்சம் என்ன என்பதை பேச வைக்கலாம். தனியாகச் சென்று வாசித்தவர்களையும் அவர்களின் அனுபவத்தைச் கூறச் சொல்லலாம். அங்கிருந்து அவர்களே கதைகளை உருவாக்க ஊக்குவிக்கலாம்.

கதைகள் மட்டுமில்லாமல், கூட்டாக பாடல்களைப் பாடலாம். பாட்டிற்கேற்ற மெட்டினை குழந்தைகளை உருவாக்கச் சொல்லலாம். பயிற்சி பெற்ற பாடல்களைப் பள்ளி/உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் அரங்கேற்றலாம். கதைகளைச் சொல்லவும் உருவாக்கவும் செய்யலாம். புத்தகங்களோடு நிற்காமல் தினசரிகளை வாசித்தல், அறிவியல் குழந்தைகள் இதழ்களை வாசித்தல் போன்ற செயல்பாடுகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்த வைக்கலாம்

புத்தகத்தூதுவரிடம் என்ன தேவை? - புத்தகங்களை கொண்டு செல்பவர்கள் நல்ல வாசகர்களாக இருப்பதுமுக்கியம். அப்படி வாசகர்களாக இருக்கும்பட்சத்தில் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் அவர்களால் செயலாற்ற முடியும். குழந்தைகள் மீது அக்கறை இருந்தால் எதையும் செய்திடலாம். மிக முக்கியமாக இது ஒரு தொடர் செயல்பாடு. இன்று ஆரம்பித்து நாளையோ நாளை மறுநாளோ பலன் கிடைத்துவிடாது. சில மாதங்கள் எடுக்கலாம், வருடங்கள் கழித்தும் பலன் தரலாம். பலன் என்பது குழந்தைகளுக்குள் நடக்கும் ஆரோக்கியமான மாற்றம்.

புத்தகத்தூதுவர் தயார் புத்தகங்கள் எங்கே? - தூதுவர் தயார் என்றால் பாதிக் கிணறு தாண்டியாயிற்று. கைவசம் இருக்கும் புத்தகங்களை கொண்டு ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கான புத்தகம் தேவை என்றால் உள்ளூரிலேயே நிறைய உதவும் கரங்கள் கிடைக்கும். புத்தகங்களை தேர்வு செய்யும்போது அவை அறிவியல்பூர்வமான சிந்தனையை, நவீனச் சிந்தனைகளை, சமத்துவ எண்ணங்களை விதைக்குமா என்று மட்டும் ஒருமுறை பார்க்கவும். பாடம் தாண்டி வாசிப்பு குழந்தைகளின் பல திறன்களை வளர்த்தெடுக்கும். அது ஒரு இமாலயப் பணி, ஒவ்வொரு புத்தக தூதுவரும் மிக மிக முக்கியமானவர். நாமே தூதுவராக மாறுவோம் வாருங்கள். - கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in