

இதமான காலைப்பொழுது, கனிவான சொல், பரிவுடன் உணவு, அன்பான அரவணைப்பு, ஆறுதல் அளிக்கும் தாயின் மடிஇவை அனைத்தும் ஒரு மனிதனைநோயிலிருந்தும், கவலையிலிருந் தும் விடுவிக்கின்றவை.
மேற்கூறிய அனைத்திற்குமே வயது ஒரு தடையல்ல; ஒரு மனிதனுக்கு 50 வயதை தாண்டினா லும்கூட நண்பனின் ஆறுதல் வார்த்தையான, “நான் இருக்கேன்டா, உனக்கு” என்ற வாக்கியம் அளப்பரிய தைரியத்தைக் கொடுக்க வல்லது.
49 வயதே ஆனாலும்கூட தனது மகனுக்கு உணவு சமைத்திட ஒரு நொடிகூட யோசித்திடாத 74 வயது தாயின் உள்ளம், தள்ளாத வயதிலும் தன் மகனின் வயிறு வாடிடக்கூடாது என்று உடலில் சக்தியை வரவழைத்து சமைத்துக் கொடுத்திட ஒரு தாயினால் மட்டுமே முடியும்.
தனது மகளின் கண்களைப் பார்த்த உடனேயே அவளது மனநிலையைப் புரிந்து கொள்வது ஒரு அப்பாவிற்கு மட்டுமே சாத்தியம்.
எத்தனை வயதானாலும் தனதுமகன் அல்லது மகளின் கண்ணீரைச் சுமந்திட தயாராக இருப்பது தாயின் மடி. தனக்கு 60 வயதிற்கு மேல் ஆனாலும் இப்படி ஒரு மகத்தான தாயின் மடியில், முகம் புதைத்து தனதுசுக துக்கங்களை பகிர்ந்திடும் வாய்ப்பு பெற்றவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மேற்கூறிய அனைத்துமாக ஒருங்கே அமையப் பெற்றவரும் இவ்வுலகில் உண்டு. நண்பனாக, தந்தையாக, தாயாக விளங்கும் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ வாழ்க்கையில் அமைந்தால் இவ்வுலக வாழ்க்கை உண்மையிலேயே மிகச் சிறந்த வரம் ஆகும்.
மாணவர்களுக்கு இதுபோன்ற உறவுகளின் மகத்துவத்தை புரிய வைப்பது ஆசிரியராகிய நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று எண்ணுகிறேன்.
“கண் விழித்தவுடன் காணும்
இதமான காலைப்பொழுது,
நண்பனின் கனிவான சொல்,
முதுமை தாயின் பரிவான உணவு,
அன்பான தந்தையின் அரவணைப்பு,
ஆறுதல் அளிக்கும் தாயின் மடி,
மனிதனை கவலையை மறக்க மட்டும் அல்ல;
எதிர்க்கவும் சக்தி கொடுக்கும் மாமருந்து!”
கட்டுரையாளர்
தலைமை ஆசிரியர்
பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி
நாகமலை,மதுரை மாவட்டம்.