

நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் ஒரு மனிதனை சிகரம் தொடச்செய்யும் ஆற்றல் பெற்றவை. "உன்னால் முடியும், முயற்சி செய்!" என்ற ஆசிரியரின் வாக்கு மாணவனின் வெற்றிக்கான தாரக மந்திரம்.
மூன்று வயதில் பள்ளிக்கு வருகின்ற குழந்தை தனது 17 அல்லது 18 வது வயதில் சமுதாயத்தின் தலைசிறந்த அங்கமாக, நல்லதொரு மனிதனாக மாறுவது பள்ளிக்கூடம் என்னும் சிற்பக் கூடத்தில்தான். ஒழுங்காக வெட்டப்படாத, சரி செய்யப்படாத முடியினை சரி செய்து அழகாக மீண்டும் சீரமைப்பது ஒரு தாயின் கடமை மட்டுமல்ல, மூன்று வயது குழந்தையினை வளர்க்கின்ற மழலையர் பள்ளி ஆசிரியருக்கும் உண்டு. அவர்களை ஆடிப்பாடி மகிழ்விப்பதற்குக் கற்றுக் கொடுப்பதும், கண்களை மூடி இறைவனை வணங்குவதற்கும் கற்றுக் கொடுப்பது ஆசிரியர்.
தன்னுடைய பொருட்களை பத்திரமாக எடுத்து தனது புத்தகப் பைகளில் வைத்துக்கொள்ள கற்றுக் கொடுப்பதும், பிற மாணவர்களுடன் இணைந்து விளையாடுவதற்கும் கற்றுக் கொடுப்பதும் ஆசிரியர். குழுவாக மகிழ்வுறுதல், பகிர்ந்து உண்ணுதல், கருத்துக்களை தெளிவுற உரைக்கக் கற்றுத் தரும் ஆசிரியர், மாணவர்கள் தனது திறமைகளை வெளிப்படுத்தும்போது உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தவும் செய்கிறார்.
பள்ளிக்கூடம் எனும் சிறிய மாதிரி சமு தாயத்தை பொறுப்புடன், தூய்மையுடன் வைத் திருப்பதற்கு கற்றுத் தருகிறார். சமுதாயத்தைப் பற்றிய புரிதலை அளிப்பவரும் அவர்தான். சமுதாயத்தில் நடைபெறும் மனிதநேய நிகழ்வுகள் பற்றி அறிவுறுத்தி சமூக குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு அளிக்கிறார். இயற்கையை நேசிக்கவும், செல்லப்பிராணிகள் மீது அன்பு செலுத்தவும் கற்றுத் தருகிறார்.
வளர் இளம் பருவத்தில் வரம்புகளுடன் பழகு வதற்கு கற்றுக் கொடுப்பதில் தாய், தந்தையருக்கு நிகரானவர். வறுமையான சூழலிலும் மனம் தள ராமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி சிகரத்தை அடைய முடியும் என்றும் ஊக்கம் தருகிறார்.
பண்டிகை காலங்களில் தன் போன்று பிறரும் மகிழ்வுற்று வாழ்வதற்கு பகிர்தல் என்னும் உயரிய சிந்தனையை மாணவர் மனதில் விதைக்கிறார். தனது கண்டிப்பினால் காலம் தவறாமை, நேர்த்தியாக உடை அணிதல் உள்ளிட்ட நல்ல பழக்கங்களின் ஊற்றுக்கண்ணாக ஆசிரியர் விளங்குகிறார்.
மாணவன் அல்லது மாணவியின் மனநிலை யினை அவர்களது முகத்தைப் பார்த்து அறிந்து கொள்ளும் உளவியலாளர்.
இளம் பருவத்தில் ஹார்மோன் வளர் செயல் பாடுகளினால் ஏற்படுகின்ற உடல் மற்றும் மனதின் மாற்றங்களை மாணவருக்கு பக்குவமாக எடுத்துரைப்பார். இந்த உயிர்வேதியியல் மாற் றங்களில் தடுமாறிடாமல் மாணவருக்கான இலக்குகளை வகுத்துத் தருபவர். அந்த இலக்கு களை நோக்கிப் பயணித்திட வழிகாட்டுபவர்.
வெற்றி சிகரத்தினை அடைந்த மாணவர்களின் மகிழ்ச்சி களிப்பினில் பெருமிதம் அடைபவர். வாழ்க்கையின் சிக்கல்களை தீர்த்திட முடியாமல் அல்லது எதிர்கொண்டு போராட முடியாமல் தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படும்போது அதிக வேதனைப்படும் ஜீவனும் ஆசிரியர்தான்.
பெரியோரைக் கண்டால் வணங்கு வதற்கும், பெரியோர்களுக்கு கீழ்படிந்து நடப்பதற்கும் சொல்லித் தருகிறார். தன் சுத்தம் பற்றியும், தான்வாழ்கின்ற இருப்பிடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வதற்கான அவசியம் பற்றியும் உணர்த்துகிறார்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பற்றியும் இந்த துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்கள் குறித்தும் புரிதல் ஏற்படுத்தும்போது சட்டவல்லுனராகிறார். குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி எடுத்துரைக்கத் தவறுவதில்லை.
விண்ணிற்கு செயற்கைக்கோளினை அனுப்புகின்ற வித்தையினை கற்றுத் தருகிறார். சின்னஞ் சிறு பிஞ்சு உள்ளங்களின் கைவண்ணங்களினால் உருவான ஓவியத்தை பார்த்து உள்ளம் பூரித்து உற்சாகமூட்டுபவர்.
அகரம் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல் மாணவரை சிகரம் தொட செய்வதற்கு உதவிக்கரம் நீட்டிடும் ஆசிரியர் பணியே மகத்தானது. - கட்டுரையாளர், தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி, நாகமலை, மதுரை மாவட்டம்.