

ஆண்டு முழுவதும் மாணவர்கள் வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திற்குள் தான் கற்றுக் கொண்டே இருக்க முடியுமா? பள்ளிக்கு வெளியே கற்றுக்கொள்ள, ஆய்வு செய்ய, அனுபவம் பெற, செயல் விளக்கம் பெற, செய்து பார்க்க, புள்ளி விவரங்கள் திரட்ட, உற்பத்தி சார்ந்த இடங்கள், தொழிலகம், சேவை மையம், சமூக பணி செய்ய எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் அவர்களால் பள்ளிக்கு வெளியே செல்ல முடியாதபடி கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் கால்களைக் கட்டிப் போட்டு உள்ளது.
பள்ளிக்கு வெளியே மாணவர்கள் ஒரு கல்வியாண்டில் செல்வது என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்கள் தான். சுற்றுலா என்றால் ஐயோ... ஆளை விடுங்கள் என்று கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பின்வாங்கி விடுகிறார்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் நம் தலை உருளும் என்று அஞ்சி ஒதுங்கி விடுகிறார்கள். சுற்றுலா என்பது இன்றும் பரவலாக மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சுற்றுலா செல்வது ஓர் கல்வி சார் நடவடிக்கை தான்.
தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை வகுக்கும் வல்லுநர் குழுவிடம் மாணவர்கள் தங்களுடைய பல்வேறு விருப்பங்களை முன் வைத் துள்ளனர், இதில், முக்கியமானதாக பயணக் கல்வி, ஊடக கல்வி, களப்பயணம், சேவை, கல்வி சுற்றுலா, பாடங்கள் குறைப்பு, வட்டார கல்வி, கள ஆய்வு, நேரடி அனுபவ அறிவு உள்ளிட்டவைகளை முன் வைத்து வலியுறுத்தியுள்ளது குறிப் பிடத்தக்கது. மாநில கல்விக்கொள்கை வாரத் திற்கு இரண்டு அரை நாள் வீதம் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே செயல்பட அனுமதிக்க வேண்டும்.
கிராமப் பகுதி என்றால் பள்ளிக்கு அருகில் உள்ள விவசாய நிலம் அதில் விளை பொருட்கள், மண் வகை, மலைப்பகுதி என்றால் மலை பயிர்கள், மண்ணரிப்பு, எண்ணெய் பிழியுமிடம், மண்பாண்டம் தயாரிப்பு, தென்னை நார் தயாரிப்பு, பழமையான கோயில்கள், உற்பத்திக் கூடங்கள், கோழி, காடை பண்ணைகள், வெல்லம் தயாரிக்கும் இடம், ஆகியவற்றை பார்வையிடலாம்.
தொழில் முனைவோர் ஆகலாம்: காய்கறிப் பயிர்கள், பழ மரங்கள் மூலிகைகள், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மாடு பன்றி பண்ணை, கால்நடை காய்கறி வார சந்தை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், ரொட்டி தயாரிப்பு, ஐஸ் கம்பெனி, மீன் விதை பண்ணை, கால்நடை மருந்தகம் ஆரம்ப சுகாதார நிலையம், பால் பண்ணை அருகில் உள்ள உற்பத்தி சார் தொழிலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு நேரடியாக சென்று கேள்விகள் கேட்டு அதை உள்வாங்கிக் கொள்ளலாம். இந்த அடிப்படை நிலையிலான களப்பயணமே அவர்கள் மனதில் ஒரு தொழில் முனைவோர் ஆகலாம் என்ற விதையை விதைக்கும்.
வங்கி, நிதி சார்ந்த நிறுவனங்கள், மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், காப்பீட்டு நிறுவனம், செய்தித்தாள் அச்சிடுமிடம், அச்சகம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பூங்கா, உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் இடம், ரயில் நிலையம், துறைமுகம், விமான நிலையம், உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் ஆகிய இடங்களுக்கு சென்று நேரடி அனுபவம் வாயிலாக கல்வி கற்றுக் கொள்ள முடியும்.
பாடச் சுமையை குறைத்து, தேர்வு பயத்தைப் போக்கி, குறுகிய எல்லையைத் தகர்த்து, எண்ணும் எழுத்தில் அவர்களை மேம்பட வைத்து, குருட்டு மனப்பாட முறையை நீக்கி களப்பயணம் வாயிலாக கல்வி முறையை முன் நிறுத்துவோம்.
பள்ளிக்கு வெளியே மாணவர்களை எப்படி அழைத்துச் செல்வது? எப்படிசமாளிப்பது? என்கின்ற மன அழுத்தத்தை ஆசிரியர்கள் நீக்கி, எதிர்வரும் காலங்களில் மாநில கல்வி கொள்கையில் முன்னெடுக்கப்படும் "குழந்தைகளின் பயணக் கல்வி" முறைக்கு சிவப்பு கம்பளம் விரிப்போம், அவர்களுக்கு புது உலகைகாட்டுவோம்... சிறகுகள் விரியட்டும். - ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம், திண்டுக்கல் மாவட்டம்