Last Updated : 14 Nov, 2022 06:10 AM

 

Published : 14 Nov 2022 06:10 AM
Last Updated : 14 Nov 2022 06:10 AM

குதூகலிக்கச் செய்யும் கார்ட்டூன் & காமிக்ஸ் கதாபாத்திரங்கள்! | குழந்தைகள் தினம் சிறப்பு பகிர்வு

குழந்தைகள் குதூகலித்து ரசித்து பார்க்கும் கார்ட்டூன் மற்றும் காமிக்ஸ் கதாபாத்திரங்களை மையப்படுத்திய தொடர்கள் பல உண்டு. அப்படி வெவ்வேறு காலகட்டத்தில் குழந்தைகளை மிகவும் கவர்ந்த அட்டகாசமான கார்ட்டூன், காமிக்ஸ் கதாபாத்திரங்கள் பற்றிய ரவுண்ட் அப் இதோ:

டோரா: அமெரிக்க மனோதத்துவ மேதை ஹாவார்ட் கார்ட்னரின் Theory of Multiple Intelligence-ஐ மையப்படுத்தி உருவாக்கப்பட்ட டோரா தொடரைப் பார்க்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறார்கள். 35 மொழிகளில் வரும் கற்றல் சார்ந்த இத்தொடரில் டோரா பல புதிய வார்த்தைகளையும், அதன் உச்சரிப்பையும், அதன் பயன்பாட்டையும் கதையின் போக்கிலேயே தெரிவிப்பாள். அறிமுகம்: ஆங்கிலத்தில் Breaking the Fourth Wall என்று சொல்வார்கள். அதாவது திரையில் இருக்கும் ஒரு பாத்திரம் அதன் பார்வையாளர்களுடன் உரையாடுவது. டோரா இத்தொடரின் ஆரம்பம் முதலே இதனை வெற்றிகரமாக செய்துவருகிறாள். அமைப்பு: புஜ்ஜி என்ற குரங்கு, முதுகில் இருக்கும் பை & பையில் இருக்கும் வரைபடம் என இவை அனைத்துமே பேசும் திறன் கொண்டவை. இதைக்கொண்டு டோராவின் பயணத்தின் ஊடே நமக்குப் பல புதிய விஷயங்களை எளிமையாக கற்பிக்க உதவுகிறார்கள்.

உருவாக்கியவர்: க்ரிஸ் கிப்பர்ட் + வேலரி வால்ஷ் & எரிக் வீனர் உருவானது: ஆகஸ்ட் 2000

நின்ஜா ஹட்டோரி: கண்டிப்பான பெற்றோர், ஆசிரியர்களைவிட பள்ளி மாணவர்களுக்குத் தேவைப்படுவது ஒரு நல்ல நண்பன்தான். சிறுவயதில் ஒரு ஆத்ம நண்பனின் தேவையை உணர்ந்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரமே நின்ஜா ஹட்டோரி என்ற ஜப்பானிய காமிக்ஸ் ஹீரோ. அறிமுகம்: கெனிச்சி மிட்சுபா என்ற 10 வயது சிறுவன் படிப்பில் சுமாராக இருப்பதுடன் பிடிவாதம் கொண்ட சோம்பேறியாகவும் இருப்பதால் அவனது பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள்வரை பலராலும் கண்டிக்கப்படுபவன். இதைத் தவிர அவனது வகுப்பில் இருக்கும் கெமுமாக்கி என்ற மாணவனுடன் அடிக்கடி பிரச்சினையிலும் சிக்கிக் கொள்கிறான்.

இந்த சூழ்நிலையில்தான் 11 வயது கான்சோ ஹட்டோரி அறிமுகமாகி இவனுக்காக கெமுமாக்கியிடம் சண்டையிடுகிறான். அன்றுமுதல் ஹட்டோரியும் (அவனது தம்பி ஷீன்ஜோவும், இவர்களின் பேசும் நாயான ஷிஷிமாருவுடன்) மிட்சுபாவின் குடும்ப உறுப்பினர்களாகி விடுகின்றனர். அதன்பிறகு நடக்கும் சம்பவங்களைத்தான் கதைத்தொடராக்கி உள்ளார்கள். அறிமுகம்: நின்ஜா மாஸ்டருக்கு உரித்தான சண்டைக்கலை நிபுணத்துவத்தை 11 வயதிலேயே பெற்ற மாணவனான ஹட்டோரி, எப்போதும் நீலவண்ண நின்ஜா யூனிபாஃர்மையே அணிந்து இருப்பான். தவறு இழைக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத இவன் எப்போதும் எது சரி, எது தவறு என்பதை நண்பர்களுக்கு போதித்துக் கொண்டே இருப்பான். மாபெரும் வீரனான ஹட்டோரிக்கு இருக்கும் ஒரே பலவீனம் – தவளைகளும் பல்லிகளும்தான். இதனை சாதகமாக்கிக் கொண்டு இவனது எதிரிகள் ஹட்டோரியை கட்டுப்படுத்த முயல்வார்கள்.

உருவாக்கியவர்: மோட்டோ அபிகோ உருவானது: 1964 டீவி வடிவம்: 28-09-1981

ஸ்கூபி டூ: இளம் சிறார்கள் மனதில் இருக்கும் பேய், பிசாசு மற்றும் அமானுஷ்யங்களை பற்றிய பயத்தையும், அச்ச உணர்வையும் போக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டதே ஸ்கூபி டூ கார்ட்டூன் தொலைக்காட்சி தொடர். அறிமுகம்: 5 பேர் கொண்ட ஒரு துப்பறியும் குழுவின் சாகஸங்கள்தான் இத்தொடரின் ஹைலைட். திட்டமிடுவதில் வல்லவனான குழுத்தலைவர் ஃப்ரெட், சாப்பிடுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட ஷாகி, ஆர்வக்கோளாறினால் அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் டேஞ்சர் டேஃப்னி, கண்ணாடியைத் தேடிக் கொண்டே இருக்கும் புத்திசாலியான வெல்மா ஆகியோர்தான் குழு உறுப்பினர்கள்.

ஏழு வயது நாயான ஸ்கூபி ஒரு சாப்பாட்டு பிரியன். எந்த ஒரு சிறிய ஆபத்து வந்தாலும் நண்பன் ஷாகியின் இடுப்பில் பாய்ந்து சென்று அமர்ந்து கொள்வான். கதையின் அமைப்பு: மர்ம இயந்திரம் (மிஸ்டரி மெஷீன்) என்ற பெயர் கொண்ட வேனில் நண்பர்கள் பயணம் செய்யும்போது திடீரென வண்டி ஏதோ ஒரு காரணத்தால் ரிப்பேர் ஆகிவிடும். எங்கே வண்டி நிற்கிறதோ அதன் அருகிலேயே இவர்கள் தீர்த்து வைக்க வேண்டிய ஒரு பிரச்சினை இவர்களுக்காகவே காத்திருக்கும்.

உருவாக்கியவர்கள்: ஐயவோ டகமாட்டோ (ஓவியர்) + ஜோ ரூபி & கென் ஸ்பியர்ஸ் (கதாசிரியர்கள்) முதலில் தோன்றிய தேதி: 13-09-1969

பலே பாலு: கல்வி கோபாலகிருஷ்ணனின் பறக்கும் பாப்பா, தூரனின் துப்பறியும் கூட்டணி (தங்கமணி, கண்ணகி & ஜின்க்கா), முல்லை தங்கராசனின் அதிமேதை அப்பு என்று பல கதாபாத்திரங்கள் தமிழ் சிறுவர் இலக்கியத்தில் உருவாகி இருந்தாலும் வாண்டு மாமாவின் பலே பாலுதான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றவர். வாண்டு மாமாவின் மகனான பாலசுரமணியத்தை வைத்துத்தான் இத்தொடர் உருவாக்கப்பட்டது. றிமுகம்: ஒரே மகனான பாலுவுடன் ரமேஷ்-கல்யாணி தம்பதியினர் கோகுலம் காலணியில் குடிபுகுவதுடன் கதை ரம்பிக்கிறது.

அந்தக் குடியிருப்பில் புதிய நண்பர்களைப் பெறுவது முதல் சூட்டிகையான செயல்களால் வம்பு உருவாக்குவதுவரை நமது சிறுவயது சம்பவங்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவதுதான் இத்தொடரின் இமாலய வெற்றிக்கு முக்கியக் காரணம்.கதை அமைப்பு: பாலுவின் நண்பர்கள், வகுப்புத்தோழர்கள் என்று பலரும் எளிமையான கதையமைப்பில் நம்மை சிரிக்க வைப்பார்கள். கதைகளில் பலமுறை பாலுவே நகைச்சுவைக்கு ஆளாவதும், பாலுவின் அப்பா, சித்தப்பா ராமு ஆகியோரின் செயல்களும் அனைவரையும் கவர்ந்ததால், மர்ம மாளிகையில் பலே பாலு, பலே பாலுவும் பறக்கும் டிராயரும், பலே பாலுவும் பாட்டில் பூதமும் என்று பாலு பல தொடரில் வந்தார்.

உருவாக்கியவர்: வாண்டுமாமா ஓவியர்: செல்லம் வெளியான தேதி: ஏப்ரல் 1972

பென் 10: சிறுவனை ஹீரோவாகக் கொண்டிருக்கும் தொடர் இளையோரையும் கவர்ந்திழுக்கும் என்ற யோசனையில் உருவான பென்10னின் பொம்மைகள் 10 கோடி ரூபாய்க்கும் மேலாக விற்பனையாகி உள்ளது. தொலைக்காட்சித் தொடர், வீடியோகேம், திரைப்படங்கள், காமிக்ஸ், விளையாட்டுப் புத்தகங்கள் என்று பலதுறையில் சாதிக்கும் பென்10 ஐடெடிக் என்று சொல்லப்படும் அசாத்திய நினைவுத்திறன் கொண்டவன். அறிமுகம்: இரண்டு அயல்கிரக உயிரினங்களுக்கு இடையே நடக்கும் போரில் ஒன்றின் சக்திப்பெட்டகம் (ஓனிட்ரிக்ஸ்) பூமியில் விழுந்து விடுகிறது.

கைக்கடிகாரம் போலக்காட்சியளிக்கும் இந்த சக்திப்பெட்டகம், அணிந்திருப்பவர் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியை அளிக்கவல்லது. பென் தன்னுடைய அங்கிள் மாக்ஸ், பெரியப்பா மகள் க்வென் உடன் ஒரு சுற்றுலாவுக்கு வந்தபோது அந்த சக்திப்பெட்டகத்தின் DNA பொருந்தி இருப்பதால் பென்னின் மணிக்கட்டில் இணைந்து விடுகிறது. உடலின் ஓர் அங்கமாகிவிட்ட இந்த வாட்ச் வந்ததுமுதல் பென் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறிவிடுகிறான். அமைப்பு: ஓனிட்ரிக்ஸை கைப்பற்ற நினைக்கும் மற்ற அயல்கிரக உயிரினமான வில்காக்ஸுக்கும் பென்னுக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் இந்த தொடரை விறுவிறுப்பாக்குகின்றன. ஆம்னிட்ரிக்ஸை அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

உருவாக்கியவர்கள்: Man of Action என்ற குழு (டங்கன் ரௌலே, ஜோ கேசி, ஜோ கெல்லி & ஸ்டீவன் சிகால்) உருவானது: Dec 2005

டோரேமான்: நிக்கலோடியன் குழந்தைகள் தேர்வு விருதில் இந்தியாவின் சிறந்த கார்ட்டூன் தொடருக்கான விருதை பெற்ற ஜப்பானின் டோரேமானை உருவாக்கியவர்கள் நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான நின்ஜா ஹட்டோரியின் படைப்பாளிகளில் ஒருவரே. அறிமுகம்: 1969-ல் எழுதப்பட்ட கதை. எதிர்காலமான 2012-ல் சிறுவன் சேவாஷி, தங்கள் குடும்பம் ஏன் வறுமையில் வாடுகிறது என்று ஆராய்ச்சி செய்கிறான். தனது தாத்தாவான நோபிடா நோபியின் காலத்தில் இருந்துதான் தனது குடும்பம் மோசமான சூழலை நோக்கி சென்றது என்பதை அறிகிறான். பள்ளியில் சக மாணவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு, பெற்றோர்களாலும் மற்றவர்களாலும் மோசமாக நடத்தப்படுவதால், தான் திட்டமிட்டபடி எதிர்காலத்தையும், குடும்ப தொழிலையும் கைவிட்டு விட்ட நோபிடாவின் வாழ்க்கையை செம்மைப்படுத்த ஓர் இயந்திரத்தை அனுப்ப நினைக்கிறான் எதிர்காலத்தில் இருக்கும் அவரது பேரன்.

அவனது சிறிய சேமிப்பு பணத்தில் இருந்து ஒரு தொழிற்சாலையில் இருந்து நிராகரிக்கப்பட்ட ஓர் இயந்திர பூனையை வாங்கி கடந்த காலத்துக்கு அனுப்புகிறான் சேவாஷி நோபி. அமைப்பு: நான்கரை அடி உயர இயந்திர பூனையான டோரேமான் மனித இயல்புகளை கொண்டது. 2012செப்டம்பர் 3 அன்று மட்சுஷிபா இயந்திர தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்பட்ட டோரேமானிடம் ஒரு நான்காவது பரிணாம பாக்கெட் இருக்கிறது. இந்த பையில் இருந்து எதை வேண்டுமானாலும் எடுக்கும் வல்லமை கொண்ட டோரேமான், அவசரத்தில் தேவையான ஒரு பொருளுக்கு பதிலாக வேறு ஒன்றை எடுத்துவிட்டு அவதிப்படுவது தொடரின் வழக்கமான நகைச்சுவை காட்சிகளில் ஒன்று. டோரேயாகி என்ற சிவப்பு பீன்ஸ் உணவை விரும்பி சாப்பிடும் டோரேமானிடம் எந்த இடத்துக்கும் செல்ல வைக்கும் கதவு ஒன்று உண்டு. இதை திறந்தால், நினைத்த இடத்தில் சென்று சேர்ந்து விடலாம். டோரேமானிடம் இருக்கும் பல விசேட சக்திகளில் இதுவும் ஒன்று.

உருவாக்கியவர்கள்: ஹிரோஷி ஃபியூஜிமோட்டோ, மூட்டோ அபிகோ உருவானது: டிசம்பர் 1969

மோட்டு பட்லு: ஆஸ்ட்ரிக்ஸ் & ஓபிலிக்ஸ்சை அடிப்படையாக வைத்து உடல் அளவில் பெரியதாகக் காணப்படும் மோட்டுவும், கண்ணாடி அணிந்து ஒல்லியாக இருக்கும் பட்லுவும் உருவாக்கப்பட்டனர். எப்போதெல்லாம் சமோசா சாப்பிடுகிறாரோ அப்போதெல்லாம் மோட்டுவிற்கு அசாத்திய பலம் கிடைக்கும். முதலில் காமிக்ஸாக வந்த இத்தொடர் 2012 முதல் தொலைக்காட்சித் தொடராகவும் வெற்றிநடை போட்டு வருகிறது.

அறிமுகம்: மல்யுத்தவீரர் தாராசிங்கை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவர் மோட்டு. உடல் அளவில் பெரியதாக இருக்கும் மோட்டுவுக்கு எலிகள் என்றால், மிகவும் பயம். குத்துச்சண்டை சாம்பியனான தன் தாத்தாவைப்போல பலசாலி ஆக விரும்பும் பட்லு மிகவும் புத்திசாலி. கதை அமைப்பு: டாக்டர் கஜகஜாவின் கண்டுபிடிப்புகளை சோதனை செய்ய மோட்டு & பட்லுவைப் பயன்படுத்துவது, 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கசீட்டாராம், நடிகர் ரஜினிகாந்த்தின் அதிதீவிர விசிறியான இன்ஸ்பெக்டர் சிங்கம், டான் ஆக விரும்பும் கொள்ளைக்காரன் ஜான், அவனது உதவியாளர்கள் (நம்பர் 1 & நம்பர் 2) என்று பல விசித்திரமான கதாபாத் திரங்கள் இத்தொடருக்கு மெரு கூட்டுகிறார்கள்.

உருவாக்கியவர்: கிருபா ஷங்கர் பரத்வாஜ் வெளியான தேதி: 1969

சோட்டாபீம்: டோலக்பூரில் வசிக்கும் 11 வயது சிறுவன் சோட்டாபீம். இத்தொடரின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 14 ஆண்டுகளாக தொலைக்காட்சி கார்ட்டூன் தொடராகவும், காமிக்ஸ் புத்தகமாகவும், திரைப்படமாகவும் அனைவரையும் கவர்ந்து வருகிறார் சோட்டாபீம். அறிமுகம்: மகாபாரத பீமனை போலவே அசாத்திய வலிமை கொண்ட சிறுவனான பீமிற்கு வாழைப்பழமும் லட்டுவும்தான் பிடித்த உணவுவகைகள்.

குறிப்பாக லட்டுவை உண்ணும்போது பீமின் வலிமை பன்மடங்கு பெருகிவிடும். சிறுவனாக இருந்தபோதிலும் டோலக்பூரின் காவலனாக, ஏழைகளுக்கு உதவும் நல்லவனாக, கொள்ளைக்காரர்கள், தீயவர்களுக்கு எதிராகப் போராடும் வீரனாகத்தான் பீம் சித்தரிக்கப்பட்டுள்ளான். கதை அமைப்பு: டோலக்பூரில் நடக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட இத்தொடரில் பீமின் நண்பர்களான சுட்கி, ராஜு, ஜக்கு, ராஜா இந்திரவர்மர், ஆராய்ச்சியாளர் தூமகேது, தூனிபாபா, மற்றும் காலியா பயில்வான், டோலு & போலு, கீசக், கொள்ளையன் மங்கள் சிங் என்று பலர் முக்கியக் கதாபாத்திரங்கள்.

உருவாக்கியவர்: ராஜிவ் சிலாக்கா முதலில் தோன்றியது: 2008

இந்தியாவின் சூப்பர்ஹீரோ சக்திமான்: சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் என்று அமெரிக்க சூப்பர்ஹீரோக்கள் இப்போது உலக அளவில் ரசிக்கப்பட்டு வருவதைப்போல 90களில் இந்தியா முழுவதும் விரும்பப்பட்ட சூப்பர்ஹீரோதான் சக்திமான். மகாபாரதம் தொலைக்காட்சித்தொடரில் பீஷ்மராக நடித்த முகேஷ் கன்னாவின் யோசனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சக்திமான் தொடர் தொலைக்காட்சியில், காமிக்ஸ் புத்தகங்களில் வெற்றிக்கொடி கட்டிப் பறக்க, இந்தியப் பிரதமரே வாசகர் கடிதம் எழுதும் அளவிற்குப் பிரபலமானார். அறிமுகம்: பத்திரிக்கையாளர் போல இருக்கும் இவர் ஒரு பிரச்சினை உருவெடுக்கும்போது சக்திமானாக மாறிவிடுவார்.

பறக்கும் சக்தி கொண்ட இவரை துப்பாக்கி குண்டுகளோ ஆயுதங்களாலோ ஒன்றும் செய்ய முடியாது. டெலிபதி மூலம் மற்றவர்களுடன் இவரால் தொடர்பு கொள்ள முடியும். அதைப்போலவே நினைத்த இடத்துக்கு இவரால் உடனே செல்லவும் முடியும். கதை அமைப்பு: இருளின் அரசனான கில்விஷுக்கு பூமியில் ஒவ்வொரு தவறான காரியம் செய்யப்படும்போதும் சக்தி அதிகரிக்கிறது. அண்ட சராசரங்களின் சக்தி மையமான இரு மாலைகளின் ஒரு பகுதியை வைத்து இருக்கும் இவர், சக்திமானைக் கொல்ல பல முயற்சிகள் எடுக்கிறார். இவர் அடிக்கடி பேசும் வசனமான “அந்தேரா காயம் ரஹே” (இருள் சூழ்கிறது) 90களில் மிகவும் பிரபலம். அயல்கிரக சக்திகள், தீய எண்ணம் கொண்டவர்கள், சமூகவிரோதிகள் என்று பலருடன் போராடுவார் சக்திமான்.

உருவாக்கியவர்: முகேஷ் கண்ணா எழுதியவர்கள்: ஆசாத் போபாளி & பிரிஜ் மோகன் பாண்டே முதலில் தோன்றிய தேதி: 20-09-1997

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x