

சென்னை: கதை சொல்லல் மூலம் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தையும், கற்பனைத் திறனையும் வளர்த்து வருகிறார் கதை சொல்லலில் தேவதை போல் வலம் வரும் சரிதா ஜோ. ஈரோட்டைச் சேர்ந்தவர் சரிதா ஜோ. புத்தக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது குழந்தை களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க கதைகளை சொல்லஆரம்பித்தார். அது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போய் அவர்கள் பாடங்களையும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினர். அன்றுமுதல் கதை சொல்வதன் மூலம் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தைக் கொண்டு வந்தே தீருவேன் என்ற லட்சியவேட்கையுடன் வலம் வருகிறார்சரிதா ஜோ. ஈரோடு கிளை நூலகம், அரசுபள்ளிகள், தனியார் பள்ளிகள்,அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், பல்வேறு அமைப்புகளின் கூட்டங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் கதை சொல்லலில் அசத்தியுள்ள சரிதா ஜோ,தனது கதை சொல்லல் பயணம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
கவனச்சிதறலில் இருந்து மீட்க: எங்கோ சிறகை அசைக்கும் பட் டாம்பூச்சியால் ஏதோ ஒரு இடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை எனக்கு. அப்படித்தான் ஒரு சிறு அசைவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கதை சொல்லலுக்குள் நுழைந்தேன். கடந்த கால குழந்தைகளுக்கு ஒரு தகவலை தெரிந்து கொள்ள புத்தகம் ஒருவாயிலாக இருந்தது. ஆனால், இன்றைய குழந்தைகளோ தொலைக்காட்சி வழியாகவும்கைப்பேசி வழியாகவும் உலகத்தையே தங்களுடைய உள்ளங்கையில் வைத்திருக்கிறார்கள். அதிலும் கரோனா காலத்திற்கு பின்பு கைபேசி அவர்களை ஆட்டிப்படைக்கிறது.
பிடித்ததிலிருந்து தொடங்கலாம்: முதலில் பாடம் நடத்துவதை கவனித்து கொண்டிருந்தவர்கள், இப்பொழுது கவனச்சிதறல்களுக்கு அதிகமாக ஆட்பட்டு இருக்கிறார்கள். இந்த கவனச் சிதறலை திசை திருப்பி வகுப்பறைக்குள் கொண்டு வருவதற்கு முதலில் குழந்தைகளை ஒரு மகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன்பிறகு பாடத்தை எடுக்கும்போது உள்வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது என்பது நான் ஆசிரியராகப் பணியாற்றியபோது கிடைத்த அனுபவ பாடம். பொதுவாகவே குழந்தைகளை பேச அனு மதிக்கும், பேச வைக்கும் ஆசிரியர்கள் அரி தினும் அரிது. குழந்தைகளுடன் உரையாடிஅவர்களுடைய மனநிலையை மாற்றி அதன் பின்பு பாடம் எடுக்கும் போது கண்டிப்பாக கவனிப்பார்கள். ஒரு விளையாட்டு, சமகாலத்தில் வந்த சினிமாவாகக்கூட இருக்கலாம் இப்படி அவர்களுக்கு பிடித்ததிலிருந்து உரையாடலை தொடங்கலாம்.
நிரம்பி வழியும் குதூகலம்: உரையாடல் மட்டுமில்லாமல் கதை பேசி, பாடி, ஆடக்கூடிய மகிழ்ச்சியான வகுப்பறையைத்தான் மாணவர்கள் விரும்புகிறார்கள். கதைகள் கூறுவதன் முதல் நோக்கம்குழந்தைகளை மகிழ்வான மனநிலைக்கு கொண்டு வருவதுதான். அதன் பிறகுதான்மற்றவை எல்லாம். அந்த வகையில் என்னுடைய கதை சொல்லலில் என்றுமே நிரம்பி வழிவது குதூகலமே. வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் எதுவும் குழந்தைகளுக்குள் சென்று சேராது.
நூறு வீடியோக்கள்: நான் சொல்லும் எல்லா கதைகளின் அடிநாதம் ஒன்றுதான். மனிதநேயம், அன்பு, கருணை சக மனிதனின் மனநிலையில் இருந்து பார்க்கும் பார்வை, இந்த பிரபஞ்சம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல ஒவ்வொரு உயிருக்கும் ஆனது இத்தகைய கருத்துக்கள் கதைகளின் இடையே ஆங்காங்கே தூவி ஒரு மழைபோல் அவர்களுக்கு கொடுப்பேன். கதை சொல்லலில் புதுப்புது கதைகளை தேர்வு செய்வேன். முதல் முறையாக ஒரு இடத்துக்குச் செல்லும்போது நான் சொன்ன கதைகளிலேயே என்னை மிகவும் பாதிக்க கதையைக் கூறுவேன். எந்த வயதிற்கான குழந்தைக்கு எந்த கதை பிடிக்குமோ அந்த கதையை தேர்வு செய்து கூறுவேன். என்னுடைய ‘Saritha Jo storyteller’ யூடியூப் சேனலில் 100 வீடியோக்கள் பதிவேற்றி இருக்கிறேன்.
பொதுவாகவே என்னுடைய கதைகளில் அதிகமாக சூழலியல் சார்ந்த கதைகளும் பறவைகள், விலங்குகள் மீதான ஒரு பரிதவிப்பும் இருந்து கொண்டே இருக்கும். அதனால் ஒவ்வொரு நாளும் காலையில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளியுங்கள் குழந்தைகளே என்று கூறுவது என்னுடைய இயல்பாகிவிட்டது. சக உயிரையே நேசிக்கும் மனித நேயத்தை கதைகள் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றால் அதுபோல ஒரு மகத்தான செயல் வேறு என்ன இருக்க முடியும் என்கிறார் சரிதா ஜோ.