Published : 14 Nov 2022 06:05 AM
Last Updated : 14 Nov 2022 06:05 AM
கடலோரப் பகுதியில் நல்லூர் என்ற சிறிய கிராமம் இருந்தது. அங்கு ரத்தினசாமி என்ற ஒரு எளிய விவசாயி வாழ்ந்து வந்தார். அந்த விவசாயிக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டு மகன்களும் தங்களுடைய பள்ளிப் படிப்பை முடித்தனர். ரத்தினசாமி தன்னுடைய வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து,“நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு மாணிக்கம், “எனக்கு விவசாயத்தில் ஈடுபாடு இல்லை” என்றும் “உயர்கல்வியைத் தொடர விரும்புகிறேன்” என்றும் கூறினான். முத்துவும் “எனக்கு விவசாயத்தில் ஈடுபாடு இல்லை நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான். இருவருக்கும் விவசாயத்தில் ஈடுபாடு இல்லாததால் ரத்தினசாமி தன் நிலத்தை விற்க முடிவு செய்தார். தன் நிலத்தை விற்று அதில் கிடைத்த பணத்தை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தார். மாணிக்கம் அந்தப் பணத்தை வைத்துப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் சென்றான்.
மேலும் நன்றாக சம்பாதித்துப் பெரிய நிலையை அடைந்தான். ஆனால் முத்து அந்தப் பணத்தை வியாபாரத்தில் முதலீடாக பயன்படுத்தினான். சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தன் கையில் இருந்த பணத்தையும் இழந்தான். மனமுடைந்த முத்துவிடம் மாணிக்கம், “தம்பி கல்வி ஒன்றே அழிவற்றசெல்வம். நான் பெற்ற கல்வியால் எனக்குநிரந்தர வருமானம் தரும் வேலை கிடைத்தது. நான் பெற்ற கல்வி என்னும் செல்வம் என்றும்அழியாதது. அதை யாராலும் திருடிச் செல்லவும் முடியாது, சேதப்படுத்தவும் முடியாது. ஆனால், பணம் அவ்வாறு அல்ல. பணம் எனும் செல்வம் நிலையற்றது” என்று கூறினான். முத்து தான் செய்த பெருந்தவறை எண்ணி தலைகுனிந்து நின்றான். கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.
இதையே வள்ளுவர்,
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றை யவை.
என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT