சிறுகதை: காட்டில் பனி

சிறுகதை: காட்டில் பனி

Published on

ஒருநாள் காலை நடுக் காட்டில் சுவர்போல் ஒன்று காணப்பட்டது. அது ஒரு மிகப்பெரிய பனிப் பாறை. மரம் அளவுக்கு உயரமானது, நூறு யானைகள் அளவுக்கு பெரியது. இன்னும் வேறென்ன, அது மிகவும் குளிர்ச்சியாக இருந்ததால், யாராலும் அருகில் செல்ல இயலவில்லை. ஆனால், பாறைக்கு உள்ளே இருந்த அற்புதமான புதையல் விலங்குகளின் ஆர்வத்தைத் தூண்டியது. புதையல் பார்க்கவே அழகாக இருந்ததால், அதைக் கொண்டு வருகிறவர்கள் தனக்குப் பின் அரசராக இருக்கலாம் என்று சிங்கமே அறிவித்தது.

சிங்கம் அறிவித்தவுடன், குளிர் மீது இருந்த வெறுப்பை உதறிவிட்டு எல்லா விலங்குகளும் பனிப்பாறையின் மீது தாவின. புதையலைத் தன்வசப்படுத்த மூர்க்கத்தனமாக முயன்றன. அதேவேளையில், மரநாய் (weasel) தனியாக நின்று, மற்ற விலங்குகள் ஏற்படுத்திய கலகத்தையும், அவைகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து புரள்வதையும் கவனித்துக் கொண்டிருந்தது.

யானை தன் தும்பிக்கையை சுத்தியலாகப் பயன்படுத்த ஆரம்பித்து, கொரில்லாவுடன் அடிதடியில் முடிந்தது. பிறகு, இரண்டும் மருத்துவமனைக்குச் சென்றன. புலி கூரான தன் நகங்களைத் துளைபோடும் சுத்தியலாகப் பயன்படுத்தியது. ஆனால், நகங்கள் பனியில் சிக்கிக்கொண்டன. ஒருவழியாக பாடுபட்டு இழுத்து வெளியே எடுத்தபோது நகங்கள் உடைந்துவிட்டன.

கசல் எனப்படும் அழகான மான்கள் பல, பனிப்பாறை குளிர்ந்த நீரால் ஆனது என்பதை அறிந்து நக்கி கரைக்க முயன்றன. ஆனால், பனியின் அதீத குளிர்ச்சி அவைகளின் வயிற்றைக் கலக்கிவிட்டது. பனிப்பாறையை உடைக்க குரங்குகள் உறுதி பூண்டு, அதன் மீது வாழைப்பழங்களையும் கற்களையும் இயந்திரத் துப்பாக்கியின் வேகத்தில் எறிந்தன. ஆனால், மற்ற விலங்குகளின் மீது பட்டதால் எறிவதை நிறுத்த வேண்டியதாயிற்று. இவ்வாறு இது தொடர்ந்தது.

எல்லா விலங்குகளும் தங்கள்பலத்தைப் பயன்படுத்தி பனிப்பாறையை உடைக்க முயன்றன. முடியவில்லை. அவைகள் செல்லும் வேகத்தில், வேலை எவ்வளவு மெல்ல நடக்கிறது என்பதைக் கணித்து, எப்படியும் ஒரு வாரம் ஆகும் என அவைகள் நினைத்தன. இருந்தபோதும், ஒரு விலங்கு சொன்னது, “அங்கே பாருங்கள், பாறையின் உள்ளே ஏதோ அசைகிறது”

ஆமாம் உண்மைதான். அது என்ன என்று கண்டுபிடிக்க இயலவில்லை, ஆனாலும் பாறையின் நடுவில், புதையலுக்கு அருகில் ஏதோ அசைந்தது. புதையலுக்கு உயிர் இருக்கிறதா? புதையலின் உரிமையாளர் உள்ளே இருக்கிறாரா? அப்படி ஏதும் இல்லை.

மரநாய்தான் அது! விரைவிலேயே சிறிதளவு புதையலுடன் அவர்களுக்கு முன் வந்தது. பாறையை உடைக்காமல் மரநாய் எப்படி புதையலை எடுத்து வந்தது என்று எல்லா விலங்குகளும் ஆச்சரியப்பட்டன. பாராட்டிய பிறகு, எப்படி எடுத்தது என்று கேட்டன. ‘பிரச்சினைக்குள் குதிப்பதற்கு முன் யோசிக்கவும், கவனிக்கவும் தான் சிறிது நேரம் எடுத்துக்கொண்டதாக’ அவைகளிடம் மரநாய் சொன்னது. மேலும், “பலம் அனைத்தையும் பயன்படுத்தி உடைப்பதற்கு, பனிப்பாறை பெரிதாக இருந்தது. சூரியன் இதை உருக வைப்பதற்கும் அதிக நாட்கள் ஆகும். எனவே, நிலத்தின் அடியில் சுரங்கம் தோண்டி பனிப்பாறைக்கு நடுவில் செல்லலாம் என்று தோன்றியது. சுரங்கம் முடியும் இடத்தில் சிறிது நெருப்பு பற்ற வைத்தேன். அது விரைவிலேயே, மேலே இருந்த பனியில் ஓட்டை போட்டது. இவ்வாறாக, சிறிதளவு முயற்சியில் புதையலைக் கொண்டு வந்தேன்” என்று சொல்லி முடித்தது.

பிறகு, மரநாய் காட்டின் அரசி ஆனது. செயலில் உடனடியாக குதிப்பதைவிட, சிக்கல்களைக் குறித்து சிந்திப்பதன் வழியாக ஒருவரால் நிறைய சாதிக்க முடியும் என்பதை தன் செயல் வழியாக ஒவ்வொருவருக்கும் உணர்த்தியது. - தமிழில்: சூ.ம.ஜெயசீலன், தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in