

வகுப்பறையில் குழந்தைகள் படிப்பதற்காக அறிவாலயம் என்ற பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான புத்தகங்களை அரசு பள்ளி குழந்தைகளுக்காக நண்பர்கள் அனுப்பி இருந்தனர். குழந்தைகளைக் கொண்டே நூலக அலமாரியில் புத்தகங்களை அடுக்க வைத்தேன். அவர்களை எந்தப் புத்தகங்கள் ஈர்க்கிறது என கவனித்தேன். புத்தகங்களின் பக்கங்கள் இடையே மயிலிறகை வைத்து அது எப்போ குட்டி போடும் என்று அரிசி வைத்துக் காத்திருந்த என் பால்யம் நினைவுக்கு வந்தது.
குட்டி குட்டி வாக்கியங்கள்: புத்தகங்களை அடுக்கும் போதே அதன் அட்டைகளைத் தடவிப் பார்த்தார்கள் சில குழந்தைகள். சில குழந்தைகளோ அதன் கண்கவரும் வண்ணப் படங்களைப் பார்த்து ரசித்தனர். சில குழந்தைகள் புத்தகத்தை உள்ளே விரித்துப் பார்த்தனர். சில குழந்தைகள் அட்டை வாசனையை முகர்ந்து கொண்டனர். 3-ம் வகுப்பு குழந்தைகள் என்பதால் குட்டி குட்டி வாக்கியங்களை வாசித்துப் பார்த்தனர்.
வார்த்தை கண்டுபிடிப்பு: படங்களுடன் வாக்கியங்கள் இருந்த கதைகள் அவர்களை ஈர்த்தது. குட்டி குட்டிப் புத்தகங்கள், பெரிய புத்தகங்கள் என வகைப்படுத்தி அடுக்கி வைத்தனர். மறு நாள் ஒரு டாஸ்க் கொடுத்தேன். மதிய இடைவேளையில் மாணவர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு உயிர் மெய்யெழுத்து வரிசையில் உள்ள வார்த்தைகளைக் கொடுத்தேன்.
உதாரணமாக முதல் குழுவிற்கு அகர வரிசை (க வரிசை) வார்த்தைகள், அதுபோல அடுத்த குழு ஆகார வரிசையில் வரும் வார்த்தைகள் எழுத வேண்டும். வார்த்தைகளைக் கண்டுபிடிக்க நூலகப் புத்தகங்களை எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு குழுவும் குறைந்தபட்சம் 50 வார்த் தைகளாவது கண்டுபிடித்திருந்தனர். தொடர் தேடல்களை தினந்தோறும் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
நெகிழ்ந்த கல்வி அதிகாரி: ஒரு நாள் விருதுநகர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இந்திராணி ஆய்வுக்காக வந்தபோது, திடீரென எனது வகுப்பறையில் நுழைந்தார். கணிதம், ஆங்கிலம் என ஒவ்வொரு பாடமாக கேள்விகள் கேட்டார். இறுதியாக தமிழில் "ம்" என்ற எழுத்தில் முடியும் வார்த்தைகளை கூறச் சொன்னார். என் பிள்ளைகள் என்ன சொல்லப் போகிறார்களோ என்ற சிந்தனையோடே பார்த்துக் கொண்டிருந்தேன். சொல்ல ஆரம்பித்தார்கள். அதிகாரி என்ற பயம் எனக்கு மட்டும் தான் போல. குழந்தைகள் நான் சொல்றேன் என எழுந்து கொண்டே இருந்தார்கள். ஒரு 15 நிமிடங்கள் இடைவிடாமல் வார்த்தை களை அடுக்கி கொண்டே செல்கின்றனர். மாவட்ட கல்வி அதிகாரியே அதிசயித்துப் போனார். புதிய புதிய வார்த்தைகள். ஆக்கம், ஆட்டம், பாட்டம், ஆதாயம், ஆகாயம், ஆன்மீகம் என்ற அந்த வார்த்தைகளைப் பட்டியல் போட்டனர். கடைசியாக ஒரு குழந்தை எழுந்து எண்ணும் எழுத்தும் எனச் சொல்ல, மாவட்ட அதிகாரி அந்தக் குழந்தையை கட்டி அணைத்து உச்சிமுகர்ந்தார். அரசின் திட்டம் சரியாக குழந்தைகளிடம் சென்றடைந்திருப்பதாக மகிழும் போதே சட்டென ஒரு குழந்தை எழுந்து, எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதில் எத்தனை "ம்" இருக்கு பாத்தீங்களா என்று மாவட்ட கல்வி அதிகாரியிடம் சொன்ன போது கல கலவென சிரித்தார்.
சொற்களஞ்சிய பெருக்கம்: கடைசியாக எழுந்து பதில் சொன்ன அந்த மாணவனை மெல்ல மலரும் மாணவன் என நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். இல்லை இல்லை நான் தான் மெல்லக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறேன்` எனப் புரிந்து கொண்டேன். புத்தகங்களைப் படிக்க படிக்க சொற்களஞ்சியப் பெருக்கமும் அதிகமாகும் என்பதை அனுபவமாக உணர்ந்த நாள் அன்று. - கட்டுரையாளர்: இடைநிலை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, க.மடத்துப்பட்டி, வெம்பக் கோட்டை ஒன்றியம், விருதுநகர் மாவட்டம்.