வெற்றி நூலகம்: தன்னம்பிக்கை விதைக்கும் ஓரிகாமி கலை

வெற்றி நூலகம்: தன்னம்பிக்கை விதைக்கும் ஓரிகாமி கலை
Updated on
2 min read

ஜப்பானிய மொழியில் ஓரி என்றால் மடிப்பு, காமி என்றால் காகிதம் என்றும் பொருள். காகிதங்களைப் பயன்படுத்தி உருவங்கள் செய்யும் கலை ஓரிகாமி. ஒரு சதுரமான அல்லது செவ்வகமான காகிதத்தை, கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமல், பசை கொண்டு ஒட்டாமல் கயிறு கொண்டு கட்டாமல் ஒரு வடிவமாக உருவாக்குவதே ஒரிகாமியின் தனிச்சிறப்பு. அதனால் தான் இதைக் காகித மடிப்புக் கலை என்று அழைக்கின்றோம். அத்தகைய ஓரிகாமி குறித்து தியாக சேகர் எழுதியிருக்கும் ‘ஓரிகாமி: காகித மடிப்புக் கலையின் கதை’ புத்தகம் ஓங்கில் கூட்டம் வெளியீடாக வந்துள்ளது.

காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அது மிகவும் மதிப்புமிக்கதாகவும் விலை உயர்ந்த பொருளாகவும் இருந்தது. சாமானிய மக்களுக்கு எட்டாத பொருளாகவே இருந்துள்ளது. காகிதத்தைப் புத்த மடாலயங்கள் மற்றும் பெரும் வசதி படைத்தவர்களின் வீடுகளில் நடைபெறும் விழாக்களின் போது அலங்கரிக்க மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.

ஓரிகாமியின் தந்தை: ஓரிகாமி கலையை யார் உருவாக்கினார் என்ற வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லை. ஓரிகாமியை கற்றுக் கொண்ட ஒரு பெண் அவரின் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க, அப்படியே வழிவழியாய் இந்த அழகிய கலை மரபுக்கலையாகக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1911-ல் பிறந்த அகிரா யூசிசவாதான் ஓரிகாமியின் தந்தை என்று கொண்டாடப்படுகிறார். இவர் தன்னுடைய நான்கு வயதில் காகிதங்களை மடித்து உருவங்களைச் செய்து விளையாட பழகினார். பின் அதுவே அவருடைய அடையாளமாக மாறியது. ஓரிகாமி கலையை ஜப்பானிய புத்த துறவிகள்தான் உருவாக்கியிருப்பார்கள் என்றும் சீனாவில் காகிதம் உருவாக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதால் ஓரிகாமியும் சீனாவின் பிறப்பிடம் என்றும் ஒரு பக்கம் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. ஒரிகாமியின் தாய்வீடு ஜப்பான்தான்.

ஓரிகாமியின் பயன்கள்: தினந்தோறும் நாம் பயன்படுத்தும் தீப்பெட்டி தொடங்கி காகிதப் பெட்டி வரையிலான பொருட்களில் கூட ஓரிகாமிகலை இருக்கிறது. அஞ்சல் துறையில்பயன்படும் அஞ்சல் கவர், திருமணப்பத்திரிகைகள், வாழ்த்து அட்டைகள் இவையும் ஓரிகாமியின் கலைவடிவமே. குடை, கார்களில் பயன்படுத்தும் பாதுகாப்பு பலூன், உயிரியல் தொழில் நுட்பத்துறை, செல்நுண்பொருட்களை ஆய்வுசெய்யும் கருவிகளில் ஓரிகாமி தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ரோபோ தயாரிப்பிலும், வடிவியல் கணித உருவங்களை விளையாட்டு முறையில் எளிமையாகக் கற்பித்தலிலும் ஓரிகாமி கலைபயன்படுகிறது. வானூர்திகள் தயாரிப்பு ஆராய்ச்சியில் ஓரிகாமி கலை முக்கியப் பங்கு வகிக்கிறது.

சடாகோ சசாகி: கொக்குகளை ஜப்பான் நாட்டு மக்கள் நீண்ட ஆயுள் மற்றும் அதிஷ்டத்திற்கான வடிவமாக நினைக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு 1000 ஓரிகாமி கொக்குகளைச் செய்து பரிசளிப்பது அவர்களின் வழக்கம். இப்படி செய்தால் நீண்டகாலம் வாழ முடியும் என்று நம்புகிறார்கள். அவர்களின் தேசியப் பறவைவும் கொக்குதான். இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதுல் நடத்தியபோது சசாகியின் வயது இரண்டு. வீசப்பட்டது யுரேணியம் குண்டு. அந்தக் குண்டு வெடிப்பில் வெளியான கதிர்வீச்சு சசாகியின் உடலைத் தாக்கியது. சசாகியைப் போல எண்ணற்றோர் கதிர்வீச்சு தாக்குதலுக்குப் பாதிப்படைந்து உயிரிழந்தனா். சசாகியின் தோழி சிசுகோ, சசாகிக்கு காகிதத்தில் செய்த ஓரிகாமி கொக்கைப் பரிசாகக் கொடுத்து ”நீ இதுபோல் 1000 கொக்குகள் செய்தால் உனது நோய் குணமடையும். நீண்ட காலம் உயிர் வாழலாம்” என்று ஆறுதல் சொல்ல சசாகி தன்னம்பிக்கையுடன் தினமும் கொக்கு செய்ய ஆரம்பித்தாள். 644 கொக்குகளைச் செய்துவிட்டு இம்மண்ணைவிட்டு பிரிந்தாள். மீதம் உள்ள 356 கொக்குகளைச் சசாகியின் வகுப்புத் தோழா்கள் செய்தார்கள். சசாகி கடைசியாக கொக்கைக் கையில் வைத்துக்கொண்டு சொன்னது, “நான் உங்கள் சிறகுகளில் அமைதியை எழுதுகிறேன். நீங்கள் உலகம் முழுதும் பறந்து செல்க”. - கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in