

குழந்தைகள் பகுத்தறிவு மற்றும் அவர்களின் சுற்றுப்புறங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகளை புரிந்து கொள்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் தீர்வுகளை தேடுவதற்கும் அறிவியல் முறைகளை பயன்படுத்துவதற்கான ஒரு தளமாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இளம் விஞ்ஞானி விருதும், பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
1993-ம் ஆண்டு தொடங்கப்பட் டது, 30-வது மாநாடு வரும் ஜனவரியில் நடைபெறும். 10 முதல் 17 வயது உடைய வழக்கமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், படிப்பைஇடை நிறுத்தியவர்கள், குடிசை அல்லது தெருவில் வசிப்பவர்களின் குழந்தைகள், சிறப்பு திறன் கொண்ட குழந்தைகள், இரவு பள்ளி குழந்தைகள், பள்ளி சாரா குழந்தைகள் கலந்துகொண்டு ஆய்வறிக்கையை, கண்டுபிடிப்பை சமர்ப்பிக்கலாம்.
10 முதல் 13 வயது குழந்தைகள் இளநிலை பிரிவில் 2500 வார்த்தை களுக்கு மிகாமலும், 14 முதல் 17 வயதுடைய குழந்தைகள் மேல்நிலைப் பிரிவில் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் தலைப்பின் கீழ் மூன்று மாத காலம் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் தேர்வாகும் கட்டுரைகள், மாநில போட்டிக்கும் அடுத்த கட்டமாக தேசிய அளவிலும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு உண்டு. மாவட்ட அளவில் இம்மாதம் கடைசி வாரத்திலும், மாநில அளவில் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திலும், தேசிய அளவில் ஜனவரி மாதம்அறிவியல் மாநாடு நடைபெறும்.
ஆய்வறிக்கை சார்ந்து நடுவர் குழு கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். மிகக் குறைந்த செலவில் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். தேசிய அளவில் தேர்வு பெற்ற ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்கள் இந்திய அறிவியல் மாநாட்டில் பங்குபெற அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் கலந்து கொண்டு பரிசு, பதக்கம் இளம் விஞ்ஞானி விருது சான்றிதழ்களை வழங்குவார். மாநாட்டை இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் பரிமாற்ற குழுமம் வழிகாட்டுதலுடன் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பை சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்துகிறது.
மைய கருப்பொருள்: ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட மையகருப்பொருளில் மாநாடு நடத்தப்படுகிறது. "ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பைபுரிந்து கொள்வது", இதுவே இந்த ஆண்டுக்கான மையக் கருப்பொருள். ஆய்வறிக்கை, சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆராய்ந்து புரிந்து கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறு சீரமைப்புக்கான முன் முயற்சிகளை எடுப்பது. சுகாதாரம் ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுடன் சுற்றுச்சூழலின் தொடர்புகளை அவற்றின் தாக்கங்களுடன் ஆய்வு செய்தல் உள்ளிட்ட மைய கருப்பொருளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
வாழும் சுற்றுச்சூழல் அமைப்பை அறிந்து கொள்ளுதல், ஆரோக்கிய ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வை வளர்ப்பது, சுற்றுச்சூழல் மற்றும்ஆரோக்கியத்திற்கான சமூக மற்றும்கலாச்சார நடைமுறைகள், சுற்றுச்சூழல் அடிப்படையிலான தற்சார்புக்கான அணுகுமுறை, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆகியன துணை கருப்பொருளாகும். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, சிந்தனையை வளர்த்துஅதற்கு அறிவியல் கண்ணோட் டத்தோடு உரிய வடிவம் கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது தான் குழந்தை அறிவியல் மாநாடாகும்.
மாணவர்களின் மனங்களில் புதைந்து கிடக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டுவர குழந்தைகள் அறிவியல் மாநாடு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக் கிறது. அனைத்துவகை பள்ளிகளும் இதில் கலந்து கொள்ளலாம். அறிவியல் பாட ஆசிரியர்கள் மட்டு மின்றி ஆர்முள்ள ஆசிரியர்களும் வழிகாட்டும் ஆசிரியராக செயல்பட்டு மாணவர்களை மாநாட்டுக்கு அனுப்பி வைக்கலாம். மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் வெல்லலாம் ஜொலிக்கலாம்.
கட்டுரையாளர்: ஆசிரியர்
அரசு தொடக்கப்பள்ளி அய்யம்பாளையம்.
ஆத்தூர் ஒன்றியம். திண்டுக்கல்.