ஆறாம் வகுப்பிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் எனும் சிறகு முளைக்கட்டும்!

ஆறாம் வகுப்பிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் எனும் சிறகு முளைக்கட்டும்!
Updated on
2 min read

மழை அதிகமாக பெய்து கொண்டிருப்பதால், எங்கள் பகுதி கால்வாய்களில் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது. நீங்க வாங்க டீச்சர், நாமெல்லாம் ஆனந்தமாக தண்ணீரில் விளையாடலாம் என்று அழைத்தார்கள் பத்தாம் வகுப்பு மாணவிகள். ஆசிரியர் பள்ளிக்கும் சமுதாயத்துக்கும் நெருக்கமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களின் சுற்றுப்புறச்சூழல், சமுதாய அமைப்பு, பெற்றோரின் மனப்பாங்கு, மாணவர்களுக்கு சூழலில் அமைந்துள்ள வாய்ப்புகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள

அவ்வப்போது மாணவர் வாழும் பகுதிகளுக்கு செல்வதுண்டு. நீரில் விளையாட அழைத்த மாணவியரை சந்திக்க அவர்கள் ஊருக்குச் சென்றேன். எங்கள் பள்ளியில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ளது அவர்களுடைய ஊர். பத்தாம் வகுப்பு மாணவியரின் பெற்றோரிடம் குழந்தைகள் படிப்பதற்கான நேரத்தை தர வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவு சமைத்து தாருங்கள் என்று பேசிவிட்டு, வேகமாக பாய்ந்து செல்லும் கால்வாய் நீரில் விளையாடி மகிழ்ந்தோம். நீண்ட நேரம் மாணவியரோடு விளையாடிக் கொண்டிருந்ததில், மாணவியர் ஆசிரியர் என்ற எண்ணத்தை மறந்து சகதோழியாகப் பேசத் தொடங்கினர்.

பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு வரவே அதிக நேரம் ஆகிவிடுகிறது. படிக்கவே முடியவில்லை. அவ்வளவு அசதி. தூங்கினால்தான் அடுத்தநாள் பள்ளிக்கு நடக்க முடியும் என்று அவர்கள் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. தினமும் இவ்வளவு தூரம் நடந்தா பள்ளிக்கு வருகிறீர்கள்? பஸ்ஸில் வரலாமே என்று கேட்டேன். டீச்சர், எங்க ஊருக்கு பஸ் இல்லை. நம் பள்ளி இருக்கும் ஊருக்கு வந்துதான் பஸ் பிடிக்கணும் என்று கூறினார்கள். அவர்கள் தாய் தந்தையர் செய்யும் வேலைகள், விடுமுறையில் என்ன செய்கிறார்கள், ஆகியன பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் வகுப்பறையில் உரையாடத் தொடங்கினேன். “இன்று நம் வகுப்பறையில், யார் யாரெல்லாம் எந்தெந்த ஊரிலிருந்து பள்ளிக்கு எவ்வளவு கி.மீ தூரத்திலிருந்து வருகிறீர்கள்? எப்படிப் பயணம் செய்து வருகிறீர்கள்?” என்று உரையாடினோம்.

நிறைய மாணவ மாணவிகள் தங்கள் கிராமத்திலிருந்து ஐந்து கி.மீ. க்கு மேல் நடந்துதான் பள்ளி வருகிறார்கள். கிராமத்திலிருந்து வருவதால் சரியான நேரத்துக்கு பேருந்து வசதியும் இல்லை. காலை 8 மணிக்கே நடக்கத் தொடங்கினால்தான், நேரத்துக்கு பள்ளி வந்து சேர முடியும். பத்தாம் வகுப்பு என்பதால், சிறப்பு வகுப்புகளையெல்லாம் முடித்து வீட்டுக்குப் போய்ச்சேர 6.30 மணி ஆகிறது என்றார்கள். அரசு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு பள்ளிக்கூடம் வந்துசெல்ல விலையில்லா சைக்கிளைத் தருகிறது. ஆனால், கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பயில வரும்போது, பயணம் அவர்களுடைய கல்விக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. பேருந்து மூலம் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு பயணிக்கும் குழந்தைகள் படும் இன்னல்கள் ஏராளம்.

அரசுப் பேருந்துகள் கூட பள்ளி செல்லும் குழந்தைகளை நிறுத்தி ஏற்றிச் செல்லத் தயங்குவர். காரணம் அவர்களுடைய பள்ளிப்பையின் கனம். ஆறாம் வகுப்பிலேயே சைக்கிள் கிடைத்தால்,

1. பள்ளி மாணவ/ மாணவியர் யாருடைய உதவியும் தேவைப்படாமல் சுதந்திரமாகப் பள்ளி வந்து செல்வர்.

2. வளரிளம் பருவத்தில் நல்ல உடற்பயிற்சியாக இருக்கும்.

3. சுற்றுப்புறச் சூழலுக்கும் மாசு இல்லை.

4. பள்ளி தூரத்தை மனதில் வைத்து பெண் குழந்தைகளை பள்ளியை விட்டு நிறுத்திவிடும் இடைநிற்றல் குறையும்.

5. சைக்கிள் பயணத்தில் வீடு போய்ச்சேரும் நேரம் குறைவாகும். இதனால் கல்வி கற்க மாணவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும்.

ஆறாம் வகுப்பிலேயே சைக்கிள் வழங்கப்பட்டால் அது அக்குழந்தையின் கல்விக்கு பெரிய உதவியை நாள்தோறும் செய்யும் சேவகனாகி உதவும். குழந்தைகளின் கல்விப்பயணத்திற்கு சிறகு முளைக்கும்.

கட்டுரையாளர்: ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்.

தொடர்பு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in