

சக்திவாய்ந்த மந்திரவாதி ஸ்டார்டஸ்ட் உருவாக்கியதிலேயே மிகவும் பிரபலமானது மந்திரப் பை. அந்தப் பையைத் தேடுவதில் சிறுவயதில் இருந்தே தன் ஓய்வு நேரத்தையும் முயற்சிகளையும் மேத் செலவிட்டார். மிகவும் முக்கியமானதாகக் கருதும் அளவுக்கு அந்தப் பையினுள் என்ன இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. ஆனாலும், ‘மந்திரப் பை மிகவும் சிறப்பு வாய்ந்தது, எஜமான் என்ன சொன்னாலும் செய்யும்’ என்கிற வதந்தி உலாவியது.
மேத் வளர்ந்ததும் பலமிக்க போர் வீரர் ஆனார். அனைத்துத் தடைகளையும் தாண்டி தன் தேடலில் சமரசம் செய்துகொள்ளாதவராக விளங்கினார். அவரது எல்லா முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கும் நாள் வந்தபோது, பை உயிருடன் குகையில் மறைந்திருந்ததைக் கண்டுபிடித்தார். உலகிலேயே தான்தான் மிகவும் மகிழ்ச்சியான நபர் என்று நினைத்தார். எனினும், ஒழுக்கமாக நடந்துகொள்வதற்கும் மந்திரப் பைக்கும் வெகுதூரம் இருந்தது.
ஒவ்வொரு முறையும் மேத் ஏதாவது செய்ய சொன்னபோதும், ‘வாளால் கண்டந்துண்டமாக வெட்டிவிடுவேன்’ என்று பயமுறுத்தியபோதும், மந்திரப் பை குற்றம் சுமத்தியது. இப்படித்தான் என்று அது முடிவெடுத்த பிறகு என்ன செய்தாலும் அதை மாற்ற இயலாது. மந்திரப் பை கடித்தது. எந்த அளவுக்கு மேத் பையை உதைத்தாரோ அந்த அளவுக்கு அதுவும் திருப்பி கடித்தது. தாங்கொண்னா துயரம் தந்த பையுடன் பல மாதங்கள் போராடி ஏமாற்றமடைந்த மேத் சந்தையில் பையை விற்றுவிட முடிவெடுத்தார். இருந்தபோதும், அதிர்ச்சியளிக்கும் வகையில் மரியாதை இல்லாமல் பை நடந்துகொண்டதால், ஏறக்குறைய யாருமே விலை கேட்க அருகில் வரவில்லை.
தைரியமாக வந்தவர்களுள் ஒருவர் டயானா பாட்டி. மிகவும் வயதான, பார்வையற்ற பாட்டியின் இரக்க குணமும் நேர்மறையான எண்ணமும் அந்நகரத்தில் இருந்த எல்லாருக்குமே தெரியும். “உன்னுடைய பையை நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், என்னால் நிறைய பணம்கொடுக்க இயலாது” என்றார் பாட்டி. தொல்லை மிகுந்த இந்த பையிலிருந்து ஒருவழியாக விடுதலை கிடைப்பதை நினைத்த மேத் நிம்மதி அடைந்தார். அதேவேளை, பாட்டியிடம் அந்த பை இணக்கமாக இருந்ததையும், விளையாடியதையும் மேத் கவனிக்கத் தவறவில்லை.
ஒரு காலை ஊன்றி பை நடனம்கூட ஆடியது. வியப்பு மேலிட்டவராக, பையை பறித்து வாங்கினார் மேத். ஆனால், அவ்வாறு செய்த உடனேயே, மறுபடியும் சகித்துக்கொள்ள முடியாததாக, கொடூரமானதாக மாறியது பை. கோபத்தில் சிவந்த மேத், பையை தூக்கி தரையில் எறிந்தார். தன் வாளை எடுத்து மேலிருந்து கீழேவரை வெட்டினார்.
அதன் பிறகு நடந்தது மேத்தை பேரச்சத்தில் ஆழ்த்தியது. கிழிந்த பையிலிருந்து நூற்றுக்கணக்கான சிறிய மேத்கள் குதித்தார்கள். அனைவரும் ஆவேசமாக, கூச்சலிட்டபடி தங்கள் கோபத்தை மேத் மீது காட்டினார்கள். டயானா பாட்டி மட்டும் குனிந்து பையை எடுக்கவில்லையென்றால் அவர்கள் அனைவரும் மேத்தைக் கொலை செய்திருப்பார்கள். பையை பாட்டி எடுத்தவுடன் அனைத்து சிறிய மேத்களும் இரக்கமிகு பாட்டியிடம் திரும்பி வந்து பைக்குள் ஓடின, கிழிந்த இடத்தை மூடின, தங்கள் புதிய எஜமானியுடன் விளையாடத் தொடங்கின.
இந்நிகழ்வுக்குப் பிறகு, தன்னிடம் இதற்கு முன்னால் இருந்திடாத அந்தபையில் ஒன்றுமே இல்லை என்பதை மேத் உணர்ந்தார். பையைத் தேடுவதில் தனக்கு இருந்த அதே உறுதியுடன், தன்னைப் பண்படுத்தவும் பக்குவப்படுத்தவும் புறப்பட்டார். தன்னுடைய இரண்டாவது தேடலில் உண்மையிலேயே அவர் வெற்றி அடைந்தார். அற்புதமான டயானா பாட்டி, தான் இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு, மேத்திடம் மந்திரப் பையைக் கொடுத்தார்.
தமிழில்: சூ.ம.ஜெயசீலன்
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com