

கதை புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுள்ள மாணவர்கள் எல்லோருமே ”கதை புத்தகம் படிக்கிற நேரத்துல பாடப் புத்தகத்தைப் படிக்கலாமே?” என்று பெற்றோர் அல்லது உறவினர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அப்படிக் கேள்விக் கேட்பவர்களெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதுபோல, பொழுதுபோக்கத்தான் கதைகள் படிப்பது என்றே எண்ணக்கூடியவர்கள். அடிக்கடி அந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போது நமக்குமே அப்படியான ஓர் எண்ணம் வந்துவிடலாம். உண்மையில், கதைகள் படிப்பதும்; சொல்வதும் பல்வேறு பயன்களைத் தரக்கூடியதே. ஒருவகையில் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதற்கும் கதைகள் உதவும். பாடங்களைப் படிக்கும்போது அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கும். குறிப்பிட்ட ஒன்றை நேரடியாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முடிவில் பாடங்கள் எழுதப்பட்டிருப்பதால் சுவையும் சுவாரஸ்யமும் இருக்காது. அதனால், அப்புத்தகங்கள் மீதான ஈர்ப்பு முழுமையானதாக இருக்காது. ஏனெனில், இதை நினைவில் வைத்திருக்க வேண்டுமே என்ற அச்சம்கூடவே வந்துகொண்டிருக்கும். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது கதைகள் வாசிப்பது.
கதை செய்யும் மாயம்: எத்தனை கதைகள் படித்தாய்,இந்தக் கதையின் கதாபாத்திரங்களின் பெயர்கள் என்னென்ன, அந்தக் கதையை எழுதியது யார் போன்ற கேள்விகள் கேட்கப்படாததே கதை வாசிப்பில் முதல் விடுதலை. பிறகு, கதைகள் என்பது பல்வேறு சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்டவை. அதாவது, ஒருவர் ஏமாறுவார், ஒருவர் காணாமல் போவார், ஒருவர் பயணம் செல்வார், இப்படி ஏதேனும் ஒன்று அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டும் ஆவலைத் தந்துகொண்டே இருக்கும். அதுவே, புத்தகத்தின் பக்கங்களைப் பரபரவென்று புரட்ட வைத்துவிடும். இது ஒருவகையில் புத்தகம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி விடும். கதை புத்தகங்களிலிருந்து பாடப் புத்தகத்திற்கும் அந்த ஆர்வம் மாறும். அப்போது, பாடப் புத்தகங்களை சுமையாக நினைக்கும் போக்கு மெல்ல மெல்ல மறையும்.
நாம் கேட்பது எல்லாமே மனத்தில் கதையாகத்தான் பதிவாகிறது என்று சொல்லப்படுகிறது. பாட்டி வடை சுட்ட கதை தெரியுமல்லவா? முதலில் பாட்டி வடை சுட, அடுத்து காகம் வர, அடுத்து வடையைத் தூக்கிச் செல்ல, அடுத்து ஒரு மரத்தில் காகம் அமர, அடுத்து ஒரு நரி வர, அடுத்து காகத்தைப் புகழ்ந்து ஏமாற்ற வேண்டும். இந்த வரிசையை மாற்றிச் சொன்னால் கதை புரியாது என்பதால், ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்லும் பழக்கம் நம்மை அறியமாலே நம்மிடம் சேர்ந்துவிடும். இதே பழக்கம் கேள்விக்கான பதில்களைப் படிக்கும்போதும் அதைப் புரிந்துகொள்ளும்போதும் நமக்கு வந்துவிடும். அறிவியல் சோதனைகளைக்கூட கதையைப் போல நினைவில் வைத்திருக்கப் பழகி விட்டால், தேர்வு முடிந்தும்கூட ஒருபோதும் மறக்கவே மறக்காது.
பலன்கள் பல உண்டு: தேர்வில் பெரிய சிக்கலாக இருக்கும் இரண்டு விஷயங்கள். ஒன்று, சொற்களுக்கான எழுத்துகளை சரியாக எழுத முடியாமல் போவது (Spelling mistake). அடுத்தது, சொற்றொடர் அமைப்பில் குளறுபடிகள். இவற்றைச் சரிசெய்யவும் கதைகள் உதவும். சில சொற்களைத் திரும்பதிரும்ப பார்க்கும்படியான சூழல்அமைந்தால், அவற்றைத் தவறில்லாமல் எழுதிவிடுவோம். கதைகளைச் சுவாரஸ்யத்திற்காகப் படித்தாலும்கூட, பல சொற்களைத் திரும்பத் திரும்ப பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதேபோல, கதைகளில் சரியான சொற்றொடர்களை வாசிக்கும்போது, அவைபோல நாமும் எழுதுவதற்கு பெரியளவில் உதவி செய்யும். மேலும், ஒரு கதையில் சீரற்ற சொற்றொடர்கள் வரும்போது, நமக்குக் குழப்பம் ஏற்படும். அதனால், அந்தவாக்கியத்தைத் திரும்பவும் வாசிப்போம். பிறகு, இந்த ஒரு வார்த்தை இருந்தால் இன்னும் எளிதாக இதுபுரியுமே என்று நாமே திருத்தி புரிந்துகொள்வோம். அது ஒரு வகையில் சரியாகச் சொற்றொடர்களை எழுதுவதற்கான பயிற்சியாகவும் மாறுகிறது.பாடங்களில் உள்ள அறிவியல், வரலாற்று பகுதிகளுக்கு சுவாரஸ்யமான மேலதிக தகவல்களையும் கதைகளின் வழியே பெற முடியும். இப்படி, கதைகள் தரும் பலன்களைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். “ஓ!எக்ஸாம்க்கு கதைகள் உதவுமா? அப்படியென்றால் நான்கு புக்ஸ் வாங்கிடுறேன்” என்ற முடிவுக்கு வர வேண்டாம். கதைகளின் முதன்மையான இலக்கு, மகிழ்ச்சியைத் தருவதுதான். அந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கு கதைகளை வாசிக்கத் தொடங்குங்கள். மற்றவைஎல்லாம், கூடுதல் பலனாக உங்களுக்குக் கிடைக்கும். இல்லையெனில், கதை புத்தகங்களும் பாடப் புத்தகங்களாகி விடும். - கட்டுரையாளர்: சிறுகதையாசிரியர், இதழியலாளர், குழந்தை நல செயற்பாட்டாளர்.