

பாராட்டப்படும் ஒவ்வொரு நொடியும் மனிதனின் ஆற்றல் பன்மடங்கு பெருகுவதாக அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகிறது. பாராட்டு என்பது நன்கு படிக்கும் மாணவனுக்கு மட்டுமல்ல, மெல்லகற்கும் மாணவனின் ஒரு சிறியமுயற்சிக்கும், பாராட்டு கிடைக்கவேண்டும். அவ்வாறு பாராட்டப்படும் போது அவர்களுக்கு மனதளவில் ஒரு உந்துதல் ஏற்பட்டு, நன்கு படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மை.
நன்கு கட்டி வந்த புடவைகள்சக தோழிகளால் பாராட்டப்படலாம். சுவையாக சமைக்கப்பட்ட உணவிற்காக கணவராலோ அல்லது மனைவியாலோ பாராட்டப்பட லாம். மிகச் சிறந்த சொற்பொழிவாற்றியதற்காக நண்பராலோஅல்லது எதிரணி உறுப்பினர் களாலோ பாராட்டப்படலாம். சமுதாய மாற்றத்திற்காக ஆசிரியர்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் உளமார பாராட்டலாம். சமூக சிந்தனையுடன் செயலாற்றும்சின்னஞ்சிறு மனிதநேய நிகழ்வுகளுக்காக காவல்துறையினரையும் பாராட்டலாம். கடும் குளிரையும் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாது நாட்டிற்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்திடும் முப்படை வீரர்களை பாராட்டலாம்.
தனது வறுமை நிலையினை உணர்ந்து சின்னஞ்சிறு முதலீட்டினை வைத்து சிறு தொழில் செய்து அதில் கிடைக்கும் லாபத்தில் ஆதரவற்றோருக்கும் முதியவர்களுக்கும் மனநலம் குன்றியவர்களுக்கும் உதவிடும் நல்ல உள்ளங்களையும் உளம் கனிந்து பாராட்டிடலாம். பாராட்டப்படும் ஒவ்வொரு தருணமும் முகமும் மனமும் மகிழ்கிறது. முகமலர்ச்சியினால் கிட்டத்தட்ட 43 தசைகள் விரிவடைகின்றன. சிரிக்கும் பொழுது ‘எண்டோர்பின்' என்னும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. மகிழ்ச்சியாக இருப்பதால் உடலும் ஆரோக்கியம் பெறுகிறது. பாராட்டப்படும் போது பிறரது வெற்றியும் நம் வெற்றி ஆகிறது. பிறரது மகிழ்ச்சியும் நம் மகிழ்ச்சி ஆகிறது." எனவேமுடிந்தவரை ஒரு நாளைக்கு பத்துபேரையாவது மனதார பாராட்டிமகிழ்வோம். பாராட்டு எனும் வெகு மதியை மனதார அளித்திடுவோம் புன்னகையுடன்."
கட்டுரையாளர்:தலைமை ஆசிரியர், பல்லோட்டி மேல்நிலைப் பள்ளி
நாகமலை, மதுரை மாவட்டம்.