வெற்றி நூலகம்: சோசோவை சந்தியுங்கள், எதிர்பாராமல் உங்களைச் சந்திப்பீர்கள்

வெற்றி நூலகம்: சோசோவை சந்தியுங்கள், எதிர்பாராமல் உங்களைச் சந்திப்பீர்கள்
Updated on
2 min read

சிறார் எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சோசோ வின் விசித்திர வாழ்க்கை” சிறார் நாவல் ஓங்கில் கூட்டம் வெளியீடாக வந்துள்ளது. இந்நாவலில் கதாபாத்திரங்களுக்குப் பெயர்களே இல்லை. எல்லோருக்கும் ஓரே பெயர்தான். சமூகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி குணங்களைக் கொண்டு இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணங்களைக் கொண்டிருப்பர். அவர்களை வித்தியாசப்படுத்த பெயர்கள் தேவையில்லை. பல குணங்களைக் கொண்ட ஒருவனும் இருப்பான். அந்த ஒருவன்தான் சோசோ.

சோசோ வீட்டின் வாழைமரத்தில் ஒரு செவ்வாழைக் குலை வளர்ந்து வந்தது. அதைப் பார்த்ததும் சோசோவுக்கு ஒரு யோசனை. மனைவி, குழந்தைகள் சேர்ந்து நூறு பழங்களை சாப்பிட முடியாது. மற்றவர்களுக்கு ஏன் இலவசமாகக் கொடுக்க வேண்டும்? ஒருபழம் பத்து ரூபாய் என்றாலும் நூறு பழம் இருக்கு. ஆயிரம் ரூபாய் கைக்கு கிடைக்கும். அதை வைத்துஒரு மாததிற்கான மளிகைப்பொருட்களை வாங்கிவிடலாம் என்று நினைத்து வாழைத்தாரை சந்தைக்குஎடுத்துச் செல்கிறான். அங்கு ஒரு ஏஜெண்ட் வருகிறான். நான் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு விற்றுத் தருகிறேன். ஆனால், எனக்கு கமிசன் வேண்டும் என்கிறான். சோசோவும் சம்மதிக்கின்றான். வழியில்இன்னொரு ஏஜெண்ட் வருகிறான். வியாபாரியை நான் காட்டுகிறேன். ஆனால், எனக்கு கமிசன் வேண்டும் என்கிறான். கடைக்குச் சென்று முதலாளியிடம் பேசி இறுதியில் ஐநூறு ரூபாய்க்கு விற்கிறான். முதலாளி நூறு ரூபாய் கடைக்குக் அழைத்த வந்து ஏஜெண்ட்டுக்கு கொடுக்க வேண்டுமென்று எடுத்துக் கொள்கிறான். மீதம் உள்ள பணத்தை இரண்டு ஏஜெண்ட்களும் எடுத்துக் கொள்கின்றனா். இறுதியாக பார்க்க பாவமாக இருக்கிறது என்று அதில் ஒருவன் இருபது ரூபாயை சோசோவுக்கு கொடுக்கிறான்.

சோசோவின் நிலை பரிதாபமாக இருக்கிறது. அவன், தான் வீட்டிலிருந்து கொண்டு வந்த செவ்வாழையைக் ஒரு கடையில் பார்க்கிறான். பார்த்து விலை கேட்கிறான். கடைக்காரன் பதினைந்து ரூபாய் ஒரு பழம் என்கிறான். பழத்தை வாங்கி கொண்டு போய் குழந்தைகளிடம் கொடுத்து மீதியுள்ள ஐந்து ரூபாயை மனைவியிடம் கொடுக்கிறான். மனைவி காரணம் தெரியாமல் நிற்கிறாள். வாழைத்தார் கொண்டு போய்க் கொடுத்ததற்கு கமிசன் என்று சொல்லி சிரிக்கின்றான். இன்றும் விவசாயி தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியாத அவலநிலையில் இருக்கின்றனர். இடைத்தரகர்களின் கையில் தான் விற்பனை உள்ளது. சோசோவை போன்று நம்மில் எத்தனையோ விவசாயிகள் உள்ளனர் என்பதை கதை உணர்த்துகிறது.

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதில்லை என்னும் உண்மையை நாம்அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நாம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்பது சுயநலம். நம் சுயநலத்திற்காக காடுகளைக் அழிக்கிறோம், ஏரியை ஆக்கிரமிப்பு செய்கிறோம். ஆனால், ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்கிறோமா? மனிதர்கள் வாழ தகுதியுள்ள இடமாகப் பூமியை மாற்ற நினைத்தால் முதலில் செடி கொடிகள் நட வேண்டும். அதில் பூக்கள் வரும், காய் கனிகள் உருவாகும். பறவைகள் தேடி வரும். பறவைகளின் எச்சத்தினால் விதவிதமான செடி கொடி மரங்கள் வளரும். விலங்குகள் தேடி வரும், ஒரு வனமே உருவாகும். அதனால் மழை பொழியும். அதன் மூலம் நமக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும் என்பதையும் சேர்த்து இக்கதை வலியுறுத்துகிறது.

எப்படியாவது மனிதனை மனிதனுக்கு விளக்கிவிட முயலும் கதைகள் பல வந்துள்ளன. சோசோ அப்படியான முயற்சிதான். சோசோவுக்குள் வெவ்வேறு உருவங்களில் வெவ்வேறு விதங்களில் நீங்களும் இருக்கலாம். நானும் இருக்கலாம். அவர்களும் இருக்கலாம். இன்னமும் சோசோவுக்கு வேறு வேறு முகங்களும் இருக்கலாம். நமக்குள் இருக்கும் சோசோவை நாம் கண்டறிய முயல வேண்டும். இந்தக் கதையில் வரும் சோசோ அந்த முயற்சிக்குத் துணைச் செய்வான். சோசோவை சந்தியுங்கள்! எதிர்பாராமல் உங்களைச் சந்திப்பீர்கள் என்கிறார் உதயசங்கர். நாவலை வாசியுங்கள். இன்னும் பல சோசோவை அறிந்துகொள்ளுங்கள். - கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in