

நம் அனைவருக்குமே பள்ளியில் படிக்கும் பொழுது கேட்கப்படும் கேள்விகள் "வருங்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்?" என்பதற்கு நம் தொடக்கப் பள்ளிப் பருவத்தில் கொடுக்கின்ற பதில் "நான் டீச்சராகப் போறேன்" என்பதாக இருக்கும். எனது பள்ளிப்பருவ நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்த என்னை எனது ஆசிரியர்அருகில் அழைத்து ,"இன்று எனக்குஉடல் நலம் இல்லை; அதனால் இன்று இந்த கணக்கினை கரும்பலகையில் பாடமாக நடத்து. நான் உனது வகுப்பில் மாணவர்களோடு இணைந்து கவனிக்கிறேன்" என்று கூறினார்.
அது இருபாலரும் படிக்கின்ற பள்ளி. கிட்டத்தட்ட 50 மாணவ மாணவிகள் என்னுடன் படித்து வந்தனர். நான் தயக்கத்துடன் எனது ஆசிரியரிடம் மாணவர்கள் என்னை கேலி செய்வார்களே, அதனால் பாடம் நடத்துவது மிகக்கடினமாக இருக்குமே! என்று கூறினேன். அதற்கு எனது ஆசிரியர் மாணவர்கள் முன்னிலையில் உங்களுக்கு இந்த கணக்கினை காமாட்சி நடத்த இருக்கிறாள், அவளுக்கு நம் அனைவரின் பாராட்டுக்களையும் கரவொலி எழுப்பித் தெரிவிப்போம் என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
பாடம் நடத்துவதில் முதலில்தயக்கமும் கூச்சமும் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக பாடம் நடத்தும்போது தயக்கம் விலகியது என்னால் உணர முடிந்தது. அன்றுமுதல் எனது வகுப்பு நண்பர்கள் 'டீச்சரம்மா' என்று செல்லமாக அழைத்தனர். மிக மகிழ்வான தருணமாக அமைந்த அந்த அனுபவமே இன்று ஆசிரியப் பணியில் 20 ஆண்டுகளாக நிலைத்திருக்க காரணமாக உள்ளது.
நாமும் நமது மாணவர்களுக்கு இதுபோன்ற நெகிழ்வான தருணங்கள் உருவாக்கிட முயற்சித் திடுவோம். மாணவர்களை குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஆசிரியர் போல முன்நின்று பாடம் நடத்துவதற்கு வாய்ப்பு அளிப்போம். மாணவனின் உயர்வு கண்டு அகம் மகிழ்கின்ற மிக உன்னதமான பணியான ஆசிரியப் பணியினை போற்றிப் பணியாற்றிடுவோம். கனிவுடன் கூடிய அரவணைப்பும், தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளும், தட்டிக்கொடுத்து வெற்றிபெறச் செய்துவிடும் ஆசிரியரின் உன்னத முயற்சியினால் மாணவர்களின் வாழ்வில் இமாலய மாற்றத்தினை ஏற்படுத்தும் ஆற்றல் பொதிந்துள்ளது.
"நாளைய சமுதாயத்தின் வெற்றிக்கனி இன்றைய ஆசிரியர்களின் கரங்களில்..."
கட்டுரையாளர்:தலைமை ஆசிரியர்,
பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி
நாகமலை, மதுரை மாவட்டம்.