காண்டாமிருகத்தை ஒருபோதும் கேலி செய்யாதீர்!

காண்டாமிருகத்தை ஒருபோதும் கேலி செய்யாதீர்!
Updated on
1 min read

ஒருகாலத்தில், சிடுசிடுப்பான காண்டாமிருகம் ஒன்று ஆப்பிரிக்க சமவெளிப் பகுதியில் வாழ்ந்தது. ஒருநாள், காண்டாமிருகத்தின் எல்கைக்குள் பெரிய ஆமை ஒன்று தெரியாமல் நுழைந்தது. ஆமையை விரட்டுவதற்காக வேகமாக ஓடியது காண்டாமிருகம். பயந்துபோன ஆமை தன் கால்களையும் தலையையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.

தன் எல்லையை விட்டு வெளியே செல்லும்படி காண்டாமிருகம் வற்புறுத்தியது. ஆனால், ஆமையிடம் எவ்வித அசைவும் தெரியவில்லை. காண்டாமிருகம் எரிச்சலுற்றதுடன், ஆமை தன்னை முட்டாளாக்குகிறது என்று நினைத்தது. எனவே, ஆமையை வெளியே வர வைப்பதற்காக அடிக்கத் தொடங்கியது. ஒன்றும் நடக்கவில்லை. நேரம் ஆக ஆக வலுவாக அடித்தது. கொம்பினால் முட்டி எல்லா திசைகளிலும் தள்ளியது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது, ஆமையை பந்தாகப் பயன்படுத்தி தனியாக கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பதுபோல தெரிந்தது.

மிகவும் வேடிக்கையாக இருந்ததால், ரசித்துப் பார்ப்பதற்காக விரைவிலேயே குரங்குகள் அருகில் கூடின. கோபமான காண்டாமிருகத்தையும், ஆமையுடன் அது நடத்தும் போராட்டத்தையும் பார்த்து தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தன. காண்டாமிருகம் மிகவும் கோபமாக இருந்ததால், குரங்குகள் அங்கே இருப்பதைக் கவனிக்கவே இல்லை. மூச்சு வாங்குவதற்காக சற்று நேரம் நிறுத்தும்வரை தொடர்ந்து ஆமையை முட்டித் தள்ளிக்கொண்டே இருந்தது. தற்போது, ஆமையை முட்டாமல் இருந்த காண்டாமிருகத்தால், குரங்குகள் சிரிப்பதையும் கேலி செய்வதையும் கேட்க முடிந்தது. காண்டாமிருகமோ, திடீரென ஓட்டுக்குள் இருந்து வெளியே எட்டிப் பார்த்த ஆமையோ, குரங்குகள் கூட்டமாகச் சேர்ந்துகொண்டு தங்களைக் கேலி செய்வதை ரசிக்கவே இல்லை.

என்ன செய்ய வேண்டும் என்பதை காண்டாமிருகமும், ஆமையும் பார்வையிலேயே பகிர்ந்துகொண்டு, தலையை ஆட்டின. பிறகு, ஆமை ஓட்டுக்குள் சென்றது. இம்முறை, மிகவும் கவனமாக காண்டாமிருகம் சில அடிகள் பின்னே சென்றது, ஆமையைப் பார்த்தது, குரங்குகளைப் பார்த்தது, முன்னோக்கி ஓடி வந்தது, மிகத் துல்லியமாக குறி பார்த்து ஆமையை உதைத்தது. அக்காட்சி, குரங்குகளை வைத்து ஸ்கிட்டில்ஸ் விளையாடுவதுபோல இருந்தது. (Skittles என்பது, குறிப்பிட்ட தூரத்தில் மூன்று மூன்றாக ஒன்பது கட்டைகள் நிற்க வைத்திருப்பார்கள். விளையாடுகிறவர் குண்டு ஒன்றை உருட்டி விடுவார். ஒருவர் மூன்று முறை உருட்டலாம். அதிக கட்டைகளை விழ வைத்தவர் வெற்றியாளர்).

குரங்குகள் மீது பட்ட அடியானது, அந்த இடத்தை விபத்து நடந்த இடம்போல மாற்றியது. குரங்குகள் அனைத்தும் வெட்டுக்களோடும், காயங்களோடும் கிடந்தன. அவைகளின் உதடுகளில் சிரிப்புக்கான சின்ன அறிகுறி கூட இல்லை. இதனிடையே, நீண்டகால நண்பர்கள்போல சிரித்துக் கொண்டே காண்டாமிருகமும் ஆமையும் அங்கிருந்து சென்றன. குரங்குகள் தங்கள் காயங்களில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தபோது, தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, மற்றவர்களைக் கேலி செய்வதைவிட வேறு நல்ல வழிகள் இருப்பதை குரங்குகள் இப்போதுதான் கண்டுகொண்டதாக அவைகளின் தலைவர் உணர்ந்தார்.

தமிழில்: சூ.ம.ஜெயசீலன்

தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in