ஆழ்மனதின் அற்புத சக்தி 

ஆழ்மனதின் அற்புத சக்தி 
Updated on
1 min read

உயர்வான எண்ணங்கள் நமது வாழ்க்கையை மென்மேலும் உயர்த்திடும். நவீன உளவியலின் தந்தையான சிக்மண்ட் ப்ராய்ட் கோட்பாட்டின்படி ஆழ்மனதிற்கு அதிக ஆற்றல் உண்டு. ஆழ்மனதில் ஏற்படும் நமது எண்ண அலைகளின் தாக்கத்தின் விளைவே நமது இன்றைய வாழ்க்கை. ஆழ்மனதின் எண்ணங்களின் அலைகள் பிரபஞ்ச எல்லைக்கு அனுப்பப்பட்டு அவை மீண்டும் நமது வாழ்வில் பிரதிபலிக்கின்றன. ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்கள் நமது தூக்கத்தில் கனவுகளாக வெளிப்படுகின்றன.

நமது வாழ்வில் ஈடேறாத ஆசைகளோ, எதிர்காலம் பற்றிய அச்சமோ, கடந்தகால நிகழ்வுகளின் பதிவுகளோ கனவுகளாக வெளிப்படுகின்றன. ஆழ்மனம் என்பது எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும். நமது உடலின் உள்ளுறுப்புகள் ஆன இதயம், நுரையீரல், ரத்த ஓட்ட மண்டலம், செரிமான மண்டலம், கழிவு நீக்க மண்டலம் இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் ஆழ்மனதின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மூளையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. நமது மூளையின் 95 சதவீத செயல்பாடுகள் ஆழ் மனதின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

ஆழ்மனம் என்பது நல்லது, கெட்டது என்று பகுத்துப் பார்ப்பது இல்லை. எனவேதான் நமது எண்ணங்கள் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. என்ன எண்ணுகிறோமோ அதனை அப்படியே செயல்படுத்துவது ஆழ்மனதின் வேலை. “எண்ணம் போல் வாழ்க்கை" என்று இதனையே நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளார்கள். ஆழ்மனமானது நிகழ்காலத்தில் சொல்வதையே ஏற்கின்றது. எனவே எப்பொழுதும் “நான் வெற்றியாளனாக இருக்கிறேன்" என்று நேர்மறையாக மட்டுமே எண்ண வேண்டும்.

அதனை அப்படியே செயல்படுத்துவது ஆழ் மனதின் ஆற்றல். ஏற்கனவே கூறியபடி ஆழ்மனம் என்பது நல்லது கெட்டது என்று பிரித்துப் பார்க்கும் தன்மை அற்றது. அது நமது உணர்வுகளை காட்சி வடிவமாக மூளையில் பதிகிறது. பின்பு அதனை செயல்படுத்துகிறது. உள்ளுணர்வு என்பது சுயநினைவுடன் கூடிய மனதிற்கும் ஆழ்மனதிற்கும் இடையே பாலமாக அமைந்து நமது சிந்தனையைத் தூண்டுகிறது. "சிந்தனையின் வெளிப்பாடே சிறந்த படைப்பாக்கங்கள்; ஆக்கபூர்வமான சிந்தனைகள் ஆழ்மனதில் நிலைநிறுத்துவோம்" நம்மைப் பற்றியும் பிறரைப் பற்றியும் நல்ல நல்ல உயர்வான எண்ணம் கொண்டால் நடப்பதெல்லாம் நன்மையாக இருக்கும். மாணவர்களுக்கு ஆழ்மனதின் அற்புதத்தை அறிய வைப்போம். - கட்டுரையாளர்: தலைமை ஆசிரியர், பல்லோட்டி மேல்நிலைப் பள்ளி, நாகமலை, மதுரை மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in