

தீபாவளி என்றதும் புத்தாடை, பட்டாசு, இனிப்பு தான் ஞாபகம் வரும். ஆனால் எனக்கு மருதாணி தான் ஞாபகம் வரும். மருதாணி பிடிக்காத பெண்கள் உண்டா? இன்று மருதாணி என்ற பெயரில் ரசாயனம் கலந்த சாயத்தை நாம் பூசிக் கொள்கிறோம். தீபாவளிக்கு முதல் நாள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தோப்புக்கு சென்று கிண்ணம் நிறைய மருதாணி இலைகளைப் பறித்து வந்து அம்மாவிடம் கொடுத்து, அதை அரைத்துத் தரச் சொல்லி தொந்தரவு செய்வோம். அம்மாவும் அவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் அவர்களது கையால் அம்மியில் மருதாணி அரைத்து நாங்கள் தூங்கப் போகும் முன்பு மருதாணியை எங்களது கைகளில் வைத்துவிடுவார்கள்.
எப்போது விடியும் என்று காத்துக் கொண்டிருப்போம். தங்கை முதலில் எழுந்து கை கழுவட்டும் என்று நான் படுத்து தூங்குவது போல நடிக்கும் அந்த நாள்கள் ஏன் மீண்டும் வரக்கூடாது என்று என் மனது கேட்கின்றது. தங்கை எழுந்து அரை மணி நேரத்திற்குப் பின் நான் எழுந்து என் கைகளைக் கழுவி முதலில் காண்பிப்பது அப் பாவிடம் தான். என் பின்னாலே தங்கையும் வருவாள். அப்பா யாருக்கு நல்லா சிவந்து இருக்கு என்று கேட்பதற்கு பாரபட்சம் இல்லாமல் இருவருக்கும் என்று சொல்லுவார்.
தீபாவளி மருதாணியில் இருந்து தான் ஆரம்பமாகும். அன்று காலை தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து, சாமி கும்பிட்டு புத்தாடை உடுத்தி, இனிப்பு பகிர்ந்து சாப்பிட்டு, பட்டாசு வெடிக்கும் அந்த தீபாவளி அழகே அழகு. அந்த நாள் இன்று வராது. பக்கத்து வீட்டிற்கு சென்று இனிப்பு கொடுத்து வரும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. தாத்தா, பாட்டி என்று கூட்டுக் குடும்பமாக தீபாவளி கொண்டாடுவதே தனி அழகுதான். ஆனால், இன்று அப்படி இல்லையே என்ற ஆதங்கம் பலருக்கும் உண்டு. அப்போவெல்லாம் அனைத்து இனிப்புகளும் எனது பாட்டி வீட்டிலேயே செய்வார்கள். பாட்டிக்கு அம்மா உதவியாக இருப்பார். எதுவுமே கடையில் வாங்குவதில்லை. இப்போ எப்படின்னு சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் இனிப்புடன் கொண்டாடு வோம் தீபாவளி பண்டிகையை...
கட்டுரையாளர்
ஆசிரியை,
பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி,
நாகமலை,
மதுரை மாவட்டம்.