

ஒரு காலத்தில், பூபுவன் குரங்குகள் நிறைந்த விசித்திரமான காடு இருந்தது. பூபுவன் குரங்குகள் என்பவை, நீளமான கைகளும் குட்டையான கால்களும் கொண்ட, பளபளக்கும் வண்ண வளையல்களால் தங்கள் கைகளை அழகுபடுத்துவதில் நாள் முழுவதும் செலவிட்ட சில குரங்குகள் ஆகும்.
இந்தக் குரங்குகளைப் பார்க்க, வண்டி நிறைய வளையல்களையும், அரிதான பொருட்களையும் எடுத்துக்கொண்டு சராசரி உயரமுள்ள மாம்போ குரங்கு அடிக்கடி வந்தது. அவ்வாறான ஒரு பயணத்தின்போது, அதுவரை கொண்டு வந்ததிலேயே மிகவும் அழகான, நம்பவே முடியாத அளவுக்கு பளபளக்கும் நிறைய வளையல்களை வைத்திருந்தது. விலையும் மிக அதிகம். இதற்கு முன்பு ஒருபோதும் அவ்வளவு அதிகம் இருந்ததில்லை.
முன்னெச்சரிக்கையுடன் இருந்த நிகோதவிர, மற்ற எல்லா பூபுவன்களும் வளையல்வாங்குவதற்குத் தேவையான வாழைப்பழங்களைப் பறிப்பதற்காக அங்குமிங்கும் ஓடின. விலை அதிகமாக இருந்ததால், இருப்பதிலேயே சிறந்ததை வாங்க நினைத்தன. எதிர்காலத்தில் ஒருவேளை தேவைப்படலாம் என்று நினைத்த நிகோ, வாழைப்பழங்களைப் பத்திரமாக வைத்திருந்தது. “இவ்வளவு வளையல்களும் எதற்காவது பயன்படுமா! விலையும் மிக அதிகமாக இருக்கிறதே” என்று அடிக்கடி சந்தேகப்பட்டது.
மாம்போ வருவதைத் தவிர்க்க விரும்பாத நிகோ, அரிதான பொருட்களுக்கு மத்தியில், வித்தியாசமான முறுக்கு கம்பிகளுடன் இருந்த டப்பாவை ஆர்வத்துடன் பார்த்தது. “அது எதற்கும் பயனில்லாதது. ஒரு ஜோடி வாழைப்பழத்துக்கு நீ அதை வாங்கிக் கொள்ளலாம்” என்று சொன்னது மாம்போ. இவ்வாறாக, அனைத்து வளையல்களையும் விற்று பூபுவன்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது மாம்போ. ஆனால், மிகப்பெரிய, அகலமான வளையல்களை அணிந்ததால் கைகளைஅசைக்கக் கூட முடியவில்லை என்பதை பூபுவன்கள் விரைவிலேயே உணரத் தொடங்கின. ஒரு பூபுவனின் வாழ்க்கையில் மிக முக்கியமானது, வாழைப்பழங்கள் பறிப்பது. அதைச் செய்வதே சவாலாக மாறியது. வளையல்களை அவிழ்ப்பதற்கு முயன்றன. முடியவில்லை.
எல்லா பூபுவன்களும், நிகோவிடம் இருந்த வாழைப்பழங்களை வாங்க விரும்பின. அந்தக் காட்டில், மரங்களில் இல்லாத வாழைப்பழங்கள், அது மட்டும்தான். இதனால், ஒரே இரவில் காட்டிலேயே மிகவும் செல்வச்செழிப்புள்ள, மதிப்புமிக்க பூபுவனாக மாறியது நிகோ. ஆனால், விஷயம் அதுவல்ல. ஆர்வமாக குறைந்த விலைக்கு நிகோ வாங்கிய, அரிதான டப்பாவில் முறுக்கு கம்பிகள் இருந்ததல்லவா, அவை அனைத்தும் பழுது நீக்கும் கருவிகள். அதன் பல்வேறு பயன்பாடுகளை நிகோ கண்டுபிடித்தது. வளையல்களுடன் இருந்த பூபுவன்களை மட்டும் அது விடுவிக்கவில்லை. மாறாக, அற்புதமான காரியங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தும் ஏராளமான வழிகளையும் அவைகள் கண்டறிந்தன.
நிகோவின் ஞானத்துக்கு நன்றி! இவ்வாறாக, பொருட்களின் விலைக்கும் அதன் உண்மையான பயனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், விற்பனையார்களின் மயக்கும் பேச்சிலும் மற்ற தகவல்களிலும் மயங்கினால் நிச்சயம் அது சிக்கல்களில்தான் முடியும் என்பதையும் பூபுவன்கள் உணர்ந்தன.
தமிழில்: சூ.ம.ஜெயசீலன்
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com