

50 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தறி வித்தவன் இறைவன் ஆவான் என அறிவுக்கண்ணை திறக்கும் ஆசிரியர்களைக் கொண்டாடினர். மாணவர்களை ஒழுக்கசீலர் களாக வார்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் சிறந்து விளங்கினர். ஆசிரியர்களின் கட்டளைகளுக்கு கீழ்பணிந்து மாணவர்களும் தங்களின் வாழ்க்கை பயணத்திற்கு அடித்தளமிட்டனர்.
இன்றைய தலைமுறை மாணவர்களோ ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவதையே அவமானமாகக் கருதுகிறார்கள். பாடம் கற்பிப்பது ஒரு பணி. அரசு நியமித்தபணியாளர்கள் தான் ஆசிரியர்கள் என நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
பல பள்ளிகளில் ஆசிரியர்களைக் கண்டால் வணக்கம் செலுத்தும் பழக்கமும் அருகிவிட்டது. மாணவர்களின் வீட்டு பாடத்தையும் வகுப்பறையில் அவர்கள் அமர்ந்திருக்கும் இடம் தேடிச் சென்று சரி பார்க்கும் நிலை. படிப்பதையும் எழுதுவதையும் வீண் வேலை என்று மாணவர்கள் கருதுவதை பரவலாகக் காண முடிகிறது.
அன்று ஒற்றை சிலேட்டில் இரு பக்கமும் எழுதி அழியாமல் கொண்டு வந்து காண்பித்த மாணவர்கள் எங்கே. இன்று எனக்கு தெரியும், நீங்கள் சொன்னால் நான் எழுதனுமா என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள் இன்றைய மாணவர்கள்.
ஒழுக்கம் இல்லாத கல்வி ஒரு போதும் நல்வாழ்க்கைக்கு உதவாது. அதனால்தான் திருவள்ளுவர் ஒழுக்கத்தையே உயிரினும் மேலாக கூறினார். கல்வியை மட்டுமல்லாமல் நல்ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் பள்ளிக்கூடம் கோயிலுக்கு இணையானது.
5 வயது குழந்தை பள்ளிக் கூடத்தை சென்றடைந்ததும் வரிசையில் நின்று இறைவணக்கம் பாடுவதில் தொடங்கி, வகுப்பறை பாட வேளைகளில் அமைதி காத்து, அமர்வதில் தொடங்கும் மாணவர்களின் ஒழுக்க நெறி ஆல் போல் தழைக்கும். அன்று வகுப்பறைகளில் வசதிகள் குறைவு.
இருந்தாலும் ஆசிரியர்கள் உயர்ந்தவர்களாக இருந்ததால் கற்பித்தல் பணி தொய்வின்றி நடைபெற்றது.
வயதில் பெரியவர்கள் வரும்போது சிறியவர்கள் அமர்ந்திருப்பது என்பது மரியாதை குறைவான செயலாகப் பார்க்கப்பட்டது அன்று. ஆனால், இன்று எழுந்து நிற்பதையே சுய மரியாதைக் குறைவு என நினைக்கிறார்கள்.
அன்று ஆசிரியர் கண்டித்ததைநல்லதுக்குத்தான் என்று பெற்றோர்கருதினர். இன்றோ என் குழந்தையை கண்டிக்க வேண்டாம் என்கிறார்கள். அதன்மூலம் தங்கள் பிள்ளைகளின் தகாத செயல்களுக்கு துணை போகிறார்கள்.
ஆசிரியரின் கோலுக்கு பயப்படாத பிள்ளை, காவல் துறையின் லத்திக்கு பயப்பட வேண்டிவரும் என்பார்கள். அக்காலத்தில் பள்ளிக்கூடங்களே பிள்ளைகளின் பாதுகாப்பு அறன்களாக விளங்கியது. ஆசிரியர்கள் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். இன்றைய நிலையைச் சொல்ல வேண்டியதில்லை.
தற்போதைய நிலையை மாற்ற அரச, ஆசிரியர், பெற்றோர் ஆகியோருக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு. அதனால் சமூகச்சூழல் மாறி, அந்தக் காலம் போல ஆசிரியர் - மாணவர் உறவு மேம்படும் என நம்புவோம்.
பயிற்சி ஆசிரியை,
காஞ்சி கல்வியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.