

சராசரி மாணவரான கலாம் சாதனையின் உச்சம் என்பதை அறிவீரா. "சராசரி" என்ற சொல்லும் "கலாம்'' என்ற சொல்லும் சாதனையாளர்களின் மந்திரச்சொல். சராசரி மதிப்பெண் பெற்ற மாணவரான அப்துல் கலாம் நமக்கு பாடம் சொல்லிதந்தது மட்டுமல்ல. பாடமாகவே வாழ்ந்து மறைந்து நமக்குள் வாழும் மகான். அவர் உயர்ந்திட பின்பற்றியது என்ன தெரியுமா? பெற்றோர் மீதுமதிப்பு, உடன்பிறந்தவர்கள் மீது பாசம், ஆசிரியர்கள் மீது நம்பிக்கை, மரியாதை, கல்வியின் மீது அளப்பரிய ஆசை, விடாமுயற்சி, தொடர் முயற்சி, ஆர்வமுடன் கற்றல், ஆழ்ந்து கற்றல், கற்பனை என இவற்றையெல்லாம் தனது நண்பர்களாக்கி பயணித்தார். வென்றார். வீழ்ந்தபோதெல்லாம் நம்பிக்கையோடு எழுந்து நின்றார்.
மனம் தளராது அடுத்தது என்ன என்று மாற்றி யோசித்தார். மாற்றி, மாற்றி யோசித்தார். வாசித்தலை சுவாசித்தார். கற்பித்தலை நேசித்தார். ஆற்றல்மிகு அணு விஞ்ஞானியாக, பாரதத்தின் தலைமகனாக, முப்படை தளபதியாக, உலகமெல்லாம் வியந்து பார்த்த விந்தையாக, திறமைகளின் தலைவராக உயர்ந்த ஓர் உன்னதமான சரித்திரம். கலாமை பின்பற்றுங்கள். அவரது பாதையில் நடை பயிலுங்கள். வெற்றி உங்களை தேடிவரும். அவரது ஒரு கவிதையினை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம். இதோ அக்கவிதை. "நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன் எங்கே இருக்கிறது லட்சிய சிகரம், நான் தேடிக்கொண்டே இருக்கிறேன் எங்கே இருக்கிறது அறிவுப் புதையல், நான் பெருங்கடலில் நீந்திகொண்டே இருக்கிறேன். எங்கே இருக்கிறது அமைதி தீவு’’ என்ற கவிதை வரிகள் தேடலே கல்வி. தேடலே வாழ்வு. தேடலே உயர்வு" என்பதனை உணர்த்துகிறது.
ஆதலால் மாணவர்களே உங்களுக்குள் கலாமை தேடுங்கள். கலாமுக்குள் உங்களை தேடுங்கள். நீங்களும் கலாம் ஆகலாம். கலாமை போற்றி மேலும் ஒரு கவிதை....
கைவீசம்மா கை வீசு
பள்ளிக்கு போகலாம் கை வீசு பாட்டு பாடலாம் கை வீசு
ஆட்டம் ஆடலாம் கை வீசு பாடம் படிக்கலாம் கை வீசு
ஆசான் ஆகலாம் கை வீசு மேலும் படிக்கலாம் கை வீசு
மேதை ஆகலாம் கை வீசு கல்லூரிக்கு போகலாம் கை வீசு
கல்வி கற்கலாம் கை வீசு
கலாம் ஆகலாம் கை வீசு
ஆம் கலாம் ஆகலாம் கை வீசு
ஆம் குழந்தைகளே! மறைந்தும் நம் நினைவுகளில் வாழும் கலாம் பிறந்த நாளில், நாம் சபதம் ஏற்போம். தூய்மைக்கும், வாய்மைக்கும், திறமைக்கும், உரிமைக்கும், பழமைக்கும், புதுமைக்கும், நன்மைக்கும் பாலமாக வாழ்வோம் என்று. மனித குலத்தின் மாண்புகளை மீட்டெடுக்க புதுப்பாதை அமைத்து கற்றபின் நிற்போம் அதற்கு தக. - கல்வியாளர், மயிலாடுதுறை