

எங்களது பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எம். கார்த்திகேயன், அமராவதி ஆகிய இருவரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சி தேர்வுக்கு தயார் செய்வது தொடர்பாக தகவல்களை சேகரித்தனர். இரண்டாம் பருவம் தொடங்கிய முதல் நாள் அன்று என்னிடம் வந்து ஐஏஎஸ் போன்ற மேற்படிப்பு தொடர்பான தகவல்களை நமது பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்திட விரும்புகிறோம் என்று கூறினர். இதைக் கேட்டவுடன் எனக்கு அதீத வியப்பு.
மேற்படிப்பு பற்றிய புரிதல் அதிகமாக இல்லாத இவர்களா மற்றவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள் என்ற எனது தவறான கணிப்பை பொய்ப்பிக்கும் விதமாக மிகச் சிறந்த முறையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் உள்ள 25 மாணவர்களுக்கு ஐஏஎஸ் போன்ற மேற்படிப்பு தொடர்பான வழிகாட்டும் நிகழ்ச்சியினை நடத்தி என்னை வியப்பில் ஆழ்த்தினர்.
மாணவரிடம் புதைந்து கிடக்கும் அசாத்திய திறமைகளை அளவிட அளவுகோல் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். இதற்கு வெற்றிக்கொடி நாளிதழின் பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்று. தினசரி செய்தித் தாள்களை மாணவர்கள் வாசிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு வகுப் பறையின் வாசலிலும் செய்தித்தாள் வைக்கப்பட்டிருக்கும். அதனை மாணவர்கள் தினந்தோறும் எடுத்து வாசிப்பதன் மூலம் பல்வேறு கருத்துக்களை தெரிந்து கொள்கின்றனர். “புதைந்து கிடக்கும் வைரங்களாகிய மாணவர்களை ஆசிரியர்களாகிய நாம் பட்டை தீட்டி மெருகேற்றிடுவோம்".
கட்டுரையாளர்
தலைமை ஆசிரியர்
பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி
நாகமலை, மதுரை மாவட்டம்.