

முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு யானை, நிழற்படம் எடுப்பவராக மாற ஆசைப்பட்டது. இதைப்பற்றி சொன்னபோதெல்லாம் அதன் விலங்கு நண்பர்கள் சிரித்தன. என்னே முட்டாள்தனம்! யானைகளுக்கென்று நிழற்படக் கருவிகள் ஏதும் இல்லை என்று சில விலங்குகள் சொன்னன. நேரத்தை வீணாக்கும் வேலை! நிழற்படம் எடுக்கும் அளவுக்கு இங்கே ஏதும் இல்லை என்று மற்றவைகள் சொல்லின.
ஆனாலும், யானை தன் கனவைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தது. எதற்குமே பயனில்லாமல் கீழே கிடந்த பொருட்களையும் சில உதிரி பாகங்களையும் சிறுகச் சிறுகச் சேகரித்து நிழற்படக் கருவி போன்ற ஒன்றை உருவாக்கியது. இந்தக் கருவியில், தம் தும்பிக்கையின் நுனியால் அழுத்துவதற்கு பொத்தான் உருவாக்குவதில் தொடங்கி, தன் கண்ணுக்குப் பொருந்துவதுபோல லென்ஸ் செய்வது, மற்றும் நிழற்படக் கருவியை வைத்து படமெடுக்க வசதியாக இரும்பாலான ஒரு சட்டகத்தை உருவாக்குவதுவரை ஏறக்குறைய எல்லாவற்றையும் யானையே வடிவமைக்க வேண்டி இருந்தது.
எல்லா வேலையும் முடிந்தபிறகு, முதல் முறையாகப் படங்கள் எடுக்க யானை தயாரானது. இருப்பினும், யானையின் நிழற்படக் கருவி, மிகப் பெரியதாகவும், விசித்திரமாகவும், நகைப்புக்குரிய மாபெரும் முகமூடி போலவும் இருந்தது. நிழற்படக் கருவியை எடுத்துச் சென்றபோது விலங்குகள் பலவும் கேலி செய்தன. எந்தளவுக்கு என்றால், தன் கனவைக் கைவிட்டுவிடலாம் என்றுகூட யானை நினைத்தது. இன்னும் மோசமாக, “படமெடுப்பதற்கெல்லாம் இங்கு ஏதுமில்லை” என்று மற்றவர்கள் சொன்னது சரிதான்போல என்று யோசிக்கத் தொடங்கியது.
ஆனால், யானை விரும்பியது வேறுவழியில் நிறைவேறியது. தலையில் நிழற்படக் கருவியைத் தூக்கிக்கொண்டு யானை நடப்பதைப் பார்த்த விலங்குகள் அடக்க முடியாமல் சிரித்தன. விலங்குகள் எல்லாம் மகிழ்ச்சியாகச் சிரிப்பதைப் பயன்படுத்தி, அவைகளின் மிகவும் வேடிக்கையான, நம்பவே முடியாத அற்புதமான சில படங்களை யானை எடுத்தது. சிடுசிடுப்பாக இருக்கும் காண்டாமிருகத்தைக்கூட படமெடுத்தது. இதனால், புல்வெளியின் அதிகாரப்பூர்வ நிழற்படக் கலைஞராக மாறியது யானை. மேலும், உயிரியல் பூங்காவில் தாங்கள் பயன்படுத்தும் கடவுச்சீட்டுக்கு அழகான நிழற்படங்கள் எடுப்பதற்காக, ஒவ்வொரு திசையிலிருந்தும் விலங்குகள் வரத்தொடங்கின.
தமிழில்: சூ.ம.ஜெயசீலன்
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com