

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. துணைக்காலே இல்லா இக்குறள் கற்றவர்க்கு கல்வியே ஊன்றுகோல் ஆதலால் அவர் தனித்தே இயங்க முடியும் என்கிறது. இக்குறள் தன்னம்பிக்கையின் உச்சம். கற்க என்ற வள்ளுவர், பின் கசடறக் கற்க என்கிறார், கற்றபின் அதன்படி நிற்க என்கிறார், முடிவில் கற்றபடி நிற்பதே சிறப்பு என்றால் கசடறக் கற்க வேண்டியது மிகவும் அவசியம். ஆம் நாம் எதைக் கற்கிறோமோ அதுவே கல்வி. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசான். கற்றலும் கற்பித்தலும் இரு கண்கள் போன்றவை. ஆம் ஆசிரியரிடத்து மாணவரும், மாணவரிடத்து ஆசிரியரும் கற்பது ஒன்றே வகுப்பறைச் சாதனை.
கற்றல் ஆசிரியர், மாணவர் இருவரிடத்தும் நிகழுமல்லவா? நல்ல ஆசிரியருக்கு பயிலும் மாணவர்களே சிறந்த புத்தகங்கள். அவர்களை உற்றுநோக்கும்போது ஆசிரியரிடம் கற்றல் நிகழும். கற்றுக் கொண்டேயிருக்கும் ஆசிரியரே உலகின் சிறந்த ஆசிரியர் என்பது உலகம் தழுவிய கருத்து.
கல்வியின் தேவை: கல்வி என்பது தேவையை உணர்த்தி தேடலைப் புகுத்தி முயற்சியை முன்னெடுத்து தன்னம்பிக்கையோடு தளராது வாழப் பக்குவப்படுத்துவதாக இருக்க வேண்டும். கல்வியானது மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும் விழும்போது எழுந்து நிற்கவும் தோல்வியிலிருந்து மீண்டு வரவும் சரியான பாதையில் வேகமாகவும் நிதானமாகவும் பயணிக் கத் தேவையான பன்முகத்திறனை அளிக்கும் அட்சயபாத்திரமாக இருக்க வேண்டும். படிப்பதற்கு அல்லது கற்பதற்கு தேவை இரண்டு திறன்கள் படித்தல், எழுதுதல். இதைத் தெரிந்த வர்களைத்தான் கற்றவர் என்கிறோம். ஆம் இன்று பள்ளிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களே கற்பவர்கள் எனில் அவர்கள் மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதானே அடிப்படை. மாணவர்கள் உயர்நிலை, மேல்நிலை, கல்லூரிக் கல்வி பெறுவதற்கு அடிப்படை எழுத்தறிவுதான்.
தரமான தொடக்கக்கல்வி என்பதன் பொருளும் எழுத, படிக்க தெரிந்தவர்களாக மாணவர்களை உருவாக்குவது தானே. இவையே கல்வியின் நோக்கமெனில், கரோனா வால் கல்வியில் இடைவெளி ஏற்பட்டது. இந்நிலையில் 6 அல்லது 7-ம் வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு பாடங்களை போதிக்கிறார்கள். ஆனால் வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் எழுதவும் படிக்கவும்தெரியாத நிலை என்றுஇருந்தால் அக்கற்பித்த லினால் பயன் கிட்டுமா? தொடர்ந்து மாணவர்கள் கற்றலில் சிறப்பை பெற இயலுமா? 8-ம் வகுப்பு முடிவில் அவர்களை கற்றவர்களாக எழுதப்படிக்க தெரிந்நதவர் களாக உருவாக்க இயலுமா? மாறாக 6-ம் வகுப்பில் எழுத, படிக்க பயிற்சி கொடுத்து அதாவது வகுப்பு முழுமையும் திறன் அடைவு பெறும்வரை கற்பிப்பது சிறந்ததா? மாணவர்களுக்குத் தெரியும் என்று பாடங்களை கற்பிக்க வேண்டுமா? அல்லது மாணவர்களை சோதித்து அடிப்படைத் திறன்களில் குறை இருப்பின் அதனை நிவர்த்தி செய்து எழுதப் படிக்க பயிற்சி கொடுத்து பின்னர் பாடங்களை கற்பிக்க வேண்டுமா? என்பது இன்றைய மனதை உறுத்தும் கேள்வியாக உள்ளது.
இதனை முடிவு செய்யும் சுதந்திரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுமா? கல்வித்துறையும் அரசும் ஆசிரியர்களும் பெற்றோரும் இதுகுறித்து விவாதித்து நல்ல முடிவுகளை எடுப்பார்களா? மாணவர்களின் கல்விதரம் என்பதிலும் நாம் கூடுதல் கவனம் கொள்ளவேண்டியது இன்றைய தேவையாக உள்ளது. கல்வியின் அடிப்படை செயல்பாடுகளாக எழுதுதல், படித்தல், கணித அடிப்படைச் செயல்கள் இவற்றில் தமிழகத்தின் பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையும் குறைந்தபட்சம் 80 சதவீதம் அடைவினை பெறவேண்டும் என்பதனை இவ்வாண்டின் குறிக்கோளாகக் கொண்டுசெயல்பட்டால், வரும் ஆண்டில் கற்பித்தலும் கற்றலும் எளிமையாகவும் சிறப்பாகவும் செழிப்பாகவும் மாறும்.
தடையின்றி வாசிப்போம்: கல்வியின் நோக்கம் மாணவர் களை சென்றடையும். மெல்ல மெல்லதவறுகள் குறைந்து நற்பண்புமிக்கமாணவர் சமுதாயம் உருவாகும். தரமான தொடக்கக் கல்வியேசமூகத்தின் உயர்வுக்கு அடிப்படையாம். சிந்திப்போம். செயல்படுவோம். உயர்ந்த சிந்தனையாளரின் வகுப்பறையில்தான் உலக சிந்தனையாளர்கள் உருவாகிறார்கள். தடையின்றி வாசிப்போம். பிழை யின்றி எழுதுவோம். கல்வியைக் கைக்கொள்வோம்.
கல்வியாளர், மயிலாடுதுறை.