

மதியம் வரை எந்த திட்டமும் இல்லை. சொல்லப் போனால் சரவணன் சார் சாப்பிடும் போதுதான் இந்தப் பேச்சை எடுத்தார். இன்னைக்கு ஹெலன் கெல்லர் பிறந்த நாள் சார். ஆமா இன்னிக்கு ஜுன் 27. ஆளுமைகளை வாசித்திருப்போம். வகுப்பில் பலமுறை பேசியிருப்போம். ஆனாலும், சரியாக அந்நாளில் நினைவுக்கு வருவதில்லை. ஹெலன் கெல்லரின் பிறந்தநாளை சரவணன் சார் நினைவுபடுத்தியதும், இன்னைக்கு சாய்ந்தரம் ரெட்கிராஸ் மீட் இருக்கு வந்து பேசுறீங்களா சார் என்றேன். உடனே ஓகே சொன்னார். அவர் தயாராக, போதுமான நேரமிருந்தது. ஆனாலும் அந்த தயாரிப்பை நான் கறாராக தடுத்துவிட்டேன். உங்கள் பள்ளி அனுபவங்களைப் பேசுங்க சார் என்று மட்டும் சொன்னேன்.
அடிவாங்கி இருக்கீங்களா? - “ஹெலன் கெல்லர் பிறந்தநாள் கருத்தரங்கு” என பெரிதாக கரும்பலகையில் எழுதிப் போட்டு எல்லாவற்றையும் புகைப்படமும் எடுத்து வைத்தேன். நிகழ்ச்சி ஆரம்பித்தது. சரவணன் சார் ஹெலன் கெல்லருக்கு கண் பார்வையில்லை. காதும் கேக்காது என ஆரம்பித்தார். உரையின் இடையே கேள்வி - பதில் பகுதிஆரம்பமானது. ஒரு கேள்வி பாருங்க! அந்த உரையின் போக்கையே மாற்றிவிட்டது. "நீங்க அடிவாங்கிருக்கீங்களா சார்?" என்றான் பூபதி. அந்த உரைக்கும் இந்த கேள்விக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால், ஒட்டுமொத்தக் கூட்டமும் கலகலப்பானது. அவ்ளோ தான். தன் தொடக்கப்பள்ளி அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். அறிவியல் ஆய்வகத்தில் ஜாடியைத் தொட்டுப் பார்க்கிறேன் என தள்ளிவிட்டு செம அடி வாங்கி இருக்கிறார். பிள்ளைகள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
இந்த இடத்தில் சரவணன் சாரை பற்றிச் சொல்ல வேண்டும். அவர் பார்வையில் மாற்றுத்திறனாளி. பிரெய்லியில் படித்து முன்னேறி இன்று அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இவர் எங்கள் சுற்றத்தில் ஒரு முன்மாதிரி. அவர் பார்வையின்றிபட்ட அவஸ்தைகளை கொஞ்சமாகவும்,கஷ்டத்தை மிதித்து மேடேறியதை ரொம்பக் கொஞ்சமாகவும்தான் பேசினார். மற்றவை ஜாலியானவை. எல்லா மாணவர்களையும் நிகழ்ச்சிக்குள் கொண்டுவர முதலில்ஜாலியான விஷயங்களே தேவைப்படுகிறது. விழிப்புணர்வு தன் னம்பிக்கை என குழந்தைகளை எடுத்த எடுப்பில் கஷ்டப்படுத்தியும் விடக்கூடாது.
ரமேஷ் சாரை தெரியுமா!? - ஹெலன் கெல்லருக்கு ஆனி சலிவன் என்கிற டீச்சர் இருந்தாங்க. உங்களுக்கு அப்படி எந்த டீச்சராவது இருந்தாங்களா. சார்? இது ஜனனியின் கேள்வி. ரமேஷ் சார்ன்னு ஒருத்தர் இருந்தார். பார்வை உள்ளவர்களும், பார்வையற்றவர்களும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் படித்தேன். பார்வையற்ற எனக்கு புரியாத பல பாடங்களை அவ்வப்போது வரும் ஆதார ஆசிரியரிடம் (Resource teacher) தான் கேட்போம். அவரிடம் நிறைய கத்துக்கிட்டேன் என்றார். ஹெலன் கெல்லருக்குச் சொல்லித் தந்த ஆனி சலிவன் டீச்சரை எல்லாருக்கும் தெரியும். குறைவான சம்பளத்துக்கு பார்வையற்ற பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தர வந்த நம்ம ஊர் ரமேஷ் சாரை தெரியுமா!?
நாம் நம்மைச் சுற்றி வாழும் அற்புதமான சாதாரண மனிதர்களை, அவர்களது அனுபவங்களைக் கொண்டாட தவறிவிடுகிறோம் என தோண வைத்த தற்செயலான நிகழ்ச்சி இது. ஹெலன் கெல்லரும் - ஆனி சலிவனும் ஆளுமைகள். சரவணன் சாரும் - ரமேஷ் சாரும் சாதாரண மனிதர்கள். சாதாரணமானவர்களைக் கவனிப்போம். அருகில் உள்ள உதாரணங்களைக் கொண்டாடுவோம். - கட்டுரையாளர்:ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, விக்கிரமங்கலம்,அரியலூர் மாவட்டம்.