கல்வியில் புரட்சி வேண்டும் என முழக்கமிட்ட வினோபா

கல்வியில் புரட்சி வேண்டும் என முழக்கமிட்ட வினோபா
Updated on
2 min read

சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே கல்விச் செயற்பாட்டாளரும்கூட. வாழ்க்கையில் இருந்து விலகி கற்பிக்கப்படும் கல்வியினால் எந்தத் திறனையும் பெறமுடியாது என்றவர் வினோபா. வகுப்பறைக் கல்விக்கும், வாழ்க்கை கல்விக்குமான வித்தியாசத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எப்படிப்பட்ட கல்வியினை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஆதாரக்கல்வியை தீர்வாக முன்வைத்தார். வினோபாவின் கல்விச் சிந்தனைகளை சீரிய முறையில் எடுத்துரைக்கிறது “கல்வியில் வேண்டும் புரட்சி” புத்தகம். அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கருத்துகளை தெரிந்து கொள்வோமா மாணவர்களே!

குழந்தைகளை அடைத்து வைக்கும் இடம்என்பதே பள்ளிக்கூடம் என்பதன் பொருளாகிவிட்டது. யார் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்களோ பள்ளிக்கூடமெனும் சிறையின் காவலர்களாக ஆகிவிடுகிறார்கள். நான் இப்போது என் மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறேன் எனும் தொழில் மனப்பான்மையிலிருந்து ஆசிரியர் விடுபட வேண்டும் என்றார். ஆசிரியர் என்பவர் இயல்பான முனைப்புடைய ஆசிரியராக இல்லாவிடின் மாணவர்கள் இயல்பாகக் கற்க முடியாது. ஒரு உண்மையான ஆசிரியர் கற்பிப்பதில்லை. ஒருவர் அவருடன் இருப்பதாலே தனக்கு தானே கற்றுக் கொள்ள முடியும்.

வாழ விடுங்கள்! - குழந்தைகள் வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அங்கு இடர்பாடுகள் ஏற்படும்போது உலகின் தோற்றம், பௌதீகம் போன்ற இதர நூல்களையும் சொல்லிக் கொடுக்கலாம். சமையலைக் கற்றுக்கொடுக்கும் போதே வேதியியலையும் சொல்லிக் கொடுக்கலாம் என்றார். குழந்தைகளுக்கு கற்பிக்கக் கூடிய இடத்தில் ஆசிரியர் மட்டும் இல்லாமல் சமூகத்தில் உள்ள அனைவரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அறிவை மூளைக்குள் திணிக்காமல் தேடலை ஏற்படுத்தும் கல்வியை வழங்க வேண்டும். குழந்தைகளைச் சுதந்திரமாக வாழ விடுங்கள். அவர்கள் இயல்பாகவே கல்வி கற்பார்கள். மாணவர்களைக் கல்வியின் மூலம் எடைபோடுவதோ அளப்பதோ தவறு என்று வாதிட்டார்.

தற்சார்பு கல்வி: கல்வியின் முக்கிய குறிக்கோள் மாணவர்களைத் தற்சார்பு உடையவர்களாக மாற்றுவதும் சுயமாக சிந்திக்க கூடிய ஆற்றலை வழங்குவதும் ஆகும். பல மொழி, பல பாடங்கள் என்று படிப்பதனால் மாணவர்கள் தொடர்ந்து ஆசிரியரின் தேவையை எதிர்பார்த்து நிற்கின்றனர். வாழ்க்கைக்கான கல்வியை எந்த நிறுவனமும் தர முடியாது. வாழ்க்கைக்கான கல்வி வாழ்க்கையின் மூலமே பெறமுடியும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைப்பதின் நோக்கமே அவர்கள் படித்து முடித்த பிறகு வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற குறுகிய எண்ணத்தோடு இருப்பதும் சிக்கலான மனநிலையைக் குறிக்கிறது. கல்வியின் நோக்கமே விடுதலை. விடுதலை உணர்வை தூண்டுவதாகக் கல்வி அமைய வேண்டும் என்றார். கல்வியை உழைப்பிலிருந்து பிரித்தெடுப்பதே அநீதி என்றார். படிப்பைத் தவிர வேறெந்த வேலையையும் செய்யவிடுவதில்லை. உடலுழைப்பினால் செய்யக்கூடிய பணியைத் தாழ்வாகவும் புத்திசாலித்தனத்தால் செய்யப்படும் வேலையை உயர்வாக மதிக்கும் சிந்தனை அடிப்படையில் தவறானது என்றார். இப்படிப்பட்ட சிந்தனையை அழிப்பதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என முழக்கமிட்டார்.

ஆதாரக்கல்வி: காகிதப்பூவிலிருந்து ஒருபோதும் வாசத்தை உணரமுடியாது. சூரியனை ஓவியமாகத் தீட்டி வைப்பதினால் ஒளியைப் பெறமுடியாது. இயற்கையோடு இயைந்த ஆதாரக்கல்வியை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும். பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை மட்டும் படிக்காமல் தனித்திறன்களையும் வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆதாரக் கல்வி என்பது புதுவிதமான கற்பித்தல் முறை அல்லது கல்வித்திட்டம் என்று நினைப்பது தவறு என்றார். மனிதனிடம் மறைந்துள்ள முழுமையான ஆற்றலை வெளிக்கொணர்வதே கல்வி என்றார்.

கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in