பெண் ஆசிரியர்களை மிஸ்ஸென்று அழைக்கலாமா?

பெண் ஆசிரியர்களை மிஸ்ஸென்று அழைக்கலாமா?
Updated on
2 min read

வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு பொருளுக்குப் பின்னரும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. கரும்பலகைக்குப் பின்னரும் ஒரு வரலாறு உண்டு. மெல்ல மெல்ல அது கருமை நிறத்தையும் இழந்து வேறு வண்ணங்களிலும் வருகிறது. ஆசிரியர்களுக்கு வரலாறு உண்டு. அவர்களை அழைக்கும் சொல்லிற்கும் அப்படி ஒரு வரலாறும் உண்டு. தற்காலத்திலும் பெண் ஆசிரியர்களை ‘மிஸ்’ என்றே பரவலாக அழைக்கின்றனர். அது நம்முடைய மனதில் அடி ஆழத்தில் பதிந்துவிட்டது. ஆங்கிலத்தில் மிஸ் என்ற பதம் திருமணமாகாத பெண்ணைக் குறிக்கும். தமிழில் அதற்கு இணையான சொல் செல்வி. சில பள்ளிகளில் ஆசிரியைகளை ‘மேடம்’என்றும், அதனைச் சுருக்கி ‘மேம்’ என்றும் அழைக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் இன்னும் மிஸ் என்றே அழைக்கப்படுகின்றனர். நாம் பயன்படுத்தும் பெரும்பாலான விஷயங்கள் பிரிட்டனில் இருந்து வந்தவையே. கல்விமுறை, நீதித்துறை என அனைத்திலும் அங்கே பயன்படுத்தும் முறையும் பழக்கமும் இன்னும் இங்கே தொடர்கிறது.

ஆண் பெண் சமத்துவம்: பிரிட்டனில் இந்த பழக்கம் தொடங்கினாலும் அங்கேயே ஆண்பெண் சமத்துவம் இல்லை. ஆண்ஆசிரியர்களை ‘சார்’ என்று அழைத்தனர். சார் என்பது பெருமைமிகு பட்டம். நம்ம ஊர் விஞ்ஞானி ராமனை சர்.சி.வி.ராமன் என்று அழைக்க கேட்டிருப்போம். அந்த "சர்" என்பது பிரிட்டன் கொடுத்த கவுரவம். ஆனால் பெண் ஆசிரியர்களை ‘மிஸ்’ என்று அழைக்கும் போது அங்கேயே சமத்துவமின்மை ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. பிரிட்டனின் 1944-ம் ஆண்டு கல்விச்சட்டம் வரும் வரையில் கற்பிக்கும் பெண் ஆசிரியர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு திருமணம் செய்துகொண்டால் அவர்களால் சரியாக பணியில் ஈடுபடமுடியாது என்று கூறினர். இப்போது யோசித்தாலும் அபத்தமாக இருக்கும். இந்த திருமணத் தடை நீங்கும் வரையில் பெண் ஆசிரியர் என்றாலே அவர்களை ‘மிஸ்’ என்றேஅழைத்தார்கள். அவர்கள் திருமணம்செய்துகொண்ட பின்னரும் அதேஅழைப்பு தொடர்ந்தது. அங்கே தொடர்ந்தது மட்டுமல்ல அது பிரிட்டன் ஆண்ட எல்லா நாடுகளுக்கும் ஏற்கனவே பரவிவிட்டது.

இன்று ஆசிரியர்களை அவர்களின் முழு பெயர் சொல்லி, “மிஸ்டர் ஜோன்ஸ்” “மிசஸஸ் ரெஜினா” என அழைக்கின்றனர். தன்னை எப்படி அழைக்க வேண்டும் என்று பள்ளி தொடங்கும் முதல்நாள் தெரிவிப்பார்கள். ஆனாலும் இன்றும் சார், மிசஸ்ர்ஸ் பாகுபாடு அங்கே உள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அமெரிக்காவில் மிஸ்டர், மிசஸ் தொடர்கிறது. இந்தியாவின் முதன் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலே. எல்லோருக்கும் கல்வி செல்ல வேண்டும் என அவரும் அவருடைய கணவரும் அரும்பாடுபட்டார்கள். இன்றும்அவர்கள் வாழ்வினை வாசிப்பவர்களுக்கு உற்சாகம் மேலிடும். ஆரியர்களைப் பற்றி பேசும்போதெல்லாம் அவர்களை நினைவுகூர்வது சாலச்சிறந்தது.

முழுப்பெயர் சொல்லி... பழக்கப்பட்ட ஒன்றினை விடுவதுகொஞ்சம் சிரமம்தான். மேலை நாடுகளில் அழைப்பது போல அப்படியேமுழு பெயரைக் கூறி அழைக்கும்அளவிற்கு நாம் முன்னேறிவிட் டோமா? ‘திரு’ சுந்தரம், ‘திருமதி’ ஜீனத் பேகம் என்று அழைப்பதை ஏற்றுக்கொள்வார்களா? சில தனியார் பள்ளிகளில் ‘அக்கா’ என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. ‘ஆண்டி’ Aunty என்றும் அழைக்கப்படுகின்றனர். கேரளாவில் ஒரு தலைமை ஆசிரியர் இனி மாணவர்கள் சார், மிஸ் என்று ஆசிரியர்களை அழைக்கக்கூடாது என அறிவித்தபோது வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியது. ‘அம்மா’ என்று தமிழ்ஆசிரியர்களை அழைப்பது ஏற்கப்பட்டுவிட்டது. ‘அம்மா’ என்று அழைக்கலாமா என்றால் பல ஆசிரியர்களும் இருகரம் கூப்புகின்றனர். எப்படி அழைக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆசிரியரும் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பதே சரியாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு சொல்லிற்குப் பின்னால் ஒரு வரலாறு உண்டும், அதன்பின்னர் இருக்கும் அரசியலை உணர்ந்தால் எண்ணங்கள் மாறுபடும். - கட்டுரையாளர்:சிறார் எழுத்தாளர். ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள். தொடர்புக்கு:umanaths@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in