

பிரெய்ரே. பிரேசில் நாட்டு கல்வியாளர். படித்தது சட்டம், ஆனால் ஆசிரியர் பணியை விரும்பி ஏற்றார். இவரின் பணியைப் பார்த்து, பிரேசில் அரசு தன்நாட்டு தொழிலாளர்களுக்கு படிக்கச் சொல்லித் தரும் பொறுப்பை அவருக்குத் தந்தது. 300 கரும்புத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 45 நாட்களில் வாசிக்கவும், எழுதவும் கற்றுக் தந்தார். நம் ஊரின் அறிவொளி இயக்கம் போல. "கரும்புத்தோட்டத் தொழிலாளர் களுக்குக் கற்றுக் கொடுக்கப் போனேன். ஆனால் நான்தான் அவர்களிடம் மார்க்ஸை கற்றுக் கொண்டு வந்தேன்" என்கிறார் பெருமையாக. கற்பித்தல் ஒரு அரசியல் செயல்பாடு என முழங்கி யவர். உரையாடல் வழி கல்வியை வலியுறுத்தியவர்.
அர்த்தமுள்ள உரையாடல்: ஏற்கனவே கற்பித்தலை உரையாடல் வழி நிகழ்த்தி பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, பிரெய்ரேவாசிப்பு என் நகர்வை உற்சாகப் படுத்தியது. உரையாடல் வகுப்பில் விவாதங்கள் மெல்ல எழும் அலை போல எழுந்து திடீரென பூகம்பமாகும். சில நேரம் வகுப்பில் பேசாத குரல்கள் உடைந்து வெளிப்படும். ஆதிக்கம் செலுத்தும் குரல்களை விட இந்த கீச்சுக்குரல்கள்தான் உரையாடலை மேலும் அர்த்தப்படுத்துகின்றன. அன்று ஏழாம் வகுப்பில் ‘சமத்துவம்' பாடத்தை நடத்திக் கொண்டி ருந்தேன். பாலினச் சமத்துவம் பற்றிய பகுதி அது. வழக்கம் போல உரையாடலை ஆரம்பித்தோம். பெண் குழந்தைகளிடம், “பள்ளி விட்டதும் வீட்டில் என்னென்ன வேலைகள் செய்வீர்கள்?’’ என கேட்டேன். மடமடவென வேலைகளைப் பட்டியலிட ஆரம்பித்தனர். அதே கேள்வியை பசங்களிடம் கேட்டேன். சில வேலைகளைச் சொன்னார்கள். அதெல் லாமே வெளி வேலைகளாக இருந்தன. மாணவிகள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படையாக கொட்டினர்.
ஆண் பிம்பத்தை உடைக்க... பசங்க மாணவிகளின் பேச்சைக்கவனமாக கேட்டுக் கொண்டிருந் தனர். "வீட்டு வேலை செய்யறதுல எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கு தெரியுமா?" எனக் கேட்டேன். மாணவர்கள் கண்களில் தெரிந்த ஆர்வம் தொடர்ந்து என்னைப் பேச வைத்தது. இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கும் "ஆண்பிம்பத்தை" உடைக்க சரியான தருணம்" என எண்ணி பேச்சைத் தொடர்ந்தேன். "வீட்டு வேலையில ஆம்பள, பொம்பள வேலைனு எதுவும் இல்லை. சொல்லப்போனா இது ஒரு Multi tasking skill. பல திறன்கள் ஒரு நேரத்தில் செய்யறதுக்கு இதுஒரு பயிற்சி. இப்போ சமைக்கி றோம்னு வைங்க. என்ன பண்ணுவோம்? ஒரே நேரத்துல ஒரு பக்கம் காய் நறுக்குவோம், அடுப்புல சாம்பார் வைப்போம், சைடுல பாத்திரம் விளக்குவோம், வீடு கூட்டுவோம், ரோட்ல எதுவும் காய்கறி வித்துப்போனா அதையும் ஓடிப்போய் வாங்குவோம், குழாய்ல தண்ணி வந்தா பிடிப்போம். இப்படி பல வேலைகளைச் செய்யறதுனால கவனம் சிதறாம இருக்கும். அடுத்தடுத்து என்ன பண்ணனும்னு மூளை உத்தரவு போட்டுட்டே இருக்கும்" என்றேன்.
மாணவர் மனதில் மாற்றம்: இந்த உரையாடல் என்ன மாற்றத் தைக் கொண்டு வரப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும். ஆண் குழந்தைகள் வீட்டில் வேலை செய்யும் விஷயத்தில், சில வீடுகளில் ஆதரவும், சில வீடுகளில் எதிர்ப்பும் இருந்தது தெரியவந்தது. "தான் வாழும் சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஒரு மாணவன் பெறுவதே உண்மையான கல்வி" என்கிறார் பிரெய்ரே. தயக்கமின்றி பேசும் சூழலை உருவாக்கும் சுதந்திர வகுப்பறைதான் மாணவர்கள் மனதில் மாற்றங்களைக் கொண்டு வரும். - கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியை விடத்தாக்குளம், விருதுநகர்