

கள்ளக்குறிச்சி: அரசு பள்ளி மாணவ, மாணவியரின் குறைபாடுகளைக் களைவதற்காக வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசுப்பெட்டியை மாணவர்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல் ஆசிரியர்களால், பள்ளிக்கூட நிர்வாகிகளால்,விளையாட்டு பயிற்சியாளர்களால் இழைக்கப்படுகிறது என்ற புகார்களும், இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசுகிறார்கள் என்றபுகார்களும் ஏராளமாக வருகிறது. இதனால் மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிலர் உயிரைமாய்த்துக்கொள்வது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன்.
பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் மாணவிகள் சிலர் தங்கள் எதிர்கால படிப்பு பாதிக்கப்பட்டு விடுமே என்ற பயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஆசிரியர்கள், பள்ளிக்கூட நிர்வாகத்தின் மீது புகார் தெரிவிப்பதை தவிர்க்கிறார்கள். இதையொட்டி பள்ளிக்கூடங்களில் இதுகுறித்து ஒரு குழு அமைக்க நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. மேலும் மாணவர்கள் தங்கள் புகாரை தெரிவிப்பதற்கு ஒரு புகார் பெட்டி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப் பள்ளிக் கூடங்களிலும், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப் பள்ளிகளிலும் புகார் பெட்டி வைப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.1,000 நிதி ஒதுக்கியுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் மனசுப் பெட்டி வைக்கப்பட்டிருந்தாலும், அதை பெரும்பாலான மாணவர்கள் பயன்படுத்துவதில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அரசுமாணவர்களின் நலன் கருதிஇத்திட்டத்தை செயல்படுத்தினால், மாணவர்கள் எண்ணமோ வேறு மாதிரியாக உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், காதல் கடிதம் எழுதி பெட்டிக்குள் போட்டுள்ளனர். அதை அப்பள்ளி ஆசிரியர்கள் எடுத்து படித்துவிட்டு, கையெழுத்தைக் கொண்டு மாணவனிடம் விசாரித்தபோது, அந்த மாணவர் மிகவும் ஜாலியாக சார் என் மனதில் உள்ளதைத் தான் கூறியிருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார். அதற்கு ஏன் உன் பெயரை பதிவிடாமல், மற்றொரு மாணவர் பெயரை பதிவிட்டாய் எனக் கேட்டபோது, சார் அடிப்பீங்க என நினைத்துத்தான் பெயரை மாற்றி எழுதினேன் என்று அந்த மாணவர் பதிலளித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியரிடம் விசாரித்தபோது, எங்கள் பள்ளியில் மாணவிகள் கிடையாது. ஒரு சிலர் பெட்டியில் கடிதம் போட்டிருந்தனர். அதில் எங்கள் பள்ளிக்கு கூடுதல் கழிப்பறை வசதி தேவை எனக் குறிப்பிட்டிருந்தனர் என்றார். இதுதொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூறுகையில், மாணவர் மனசுப் பெட்டி திட்டத்தில் ஆரோக்கியமும் இருக்கிறது, அபத்தமும் இருக்கிறது. நகர்ப் புற மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற பள்ளி மாணவர்கள் மாற்றி யோசித்து செய்யும் செயல்களை ஜாலியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்கள் பயிலும் பள்ளிகளில் சச்சரவுகளும் கடிதங்களும் வரப்பெற்றது. அதையும் பெற்றோரை வரவழைத்து சரி செய்தோம் என்றனர். மாணவர் மனசுப் பெட்டியை மாணவர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க பள்ளிக் கல்வித்துறை தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளது.