Last Updated : 16 Sep, 2022 06:10 AM

 

Published : 16 Sep 2022 06:10 AM
Last Updated : 16 Sep 2022 06:10 AM

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணி: கற்பித்தல் பணி தொய்வடைவதால் ஆசிரியர்கள் அவதி

சென்னை: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணியை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்வதால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

நாட்டை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக ஆதார் எண்ணுடன் பான் (நிரந்தர கணக்கு எண்) நம்பர், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றின் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைஇணைக்கும் பணியை மேற்கொள் ளும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள்மூலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இப்பணியை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இப்பணியை எவ்வாறு மேற்கொள்வது என்று அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பலரும் கடந்த மாதம் 15 தேதியிலிருந்து இப்பணியைச் செய்து வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று அங்கு இருப்பவர்களின் ஆதார் எண்ணுடன் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து வருகிறார்கள். இதனால்தங்களது கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கரோனா பாதிப்பால் குழந்தைகளின் செயல்பாட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் அவர்களுக்கு கல்வி கற்பிக்க கூடுதல் நேரம் செலவிட வேண்டியுள்ளது. அத்துடன் காலாண்டு தேர்வு வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் பணியுடன் இதையும் மேற்கொள்வதால் கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து கல்வி செயற்பாட்டாளர் சு.உமா மகேஸ்வரி கூறுகையில், “ஆதார் எண்ணை கொடுத்தால் அதைக் கொண்டு உங்கள்விவரங்களை தெரிந்து கொள்வதுடன் உங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் காணாமல் போய்விடும்.

அதனால் அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்களது ஆதார் எண், பான் எண் போன்றவற்றை பகிர வேண்டாம் என்று அரசும், காவல்துறையும் எச்சரித்துள்ளன. இந்நிலையில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணியை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. மேலும், கற்பித்தல் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை" என்றார்.

சேலம் மாவட்டம், இடங்கண சாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ப.சாந்தி, அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியை வி.என்.சுஜாதா ஆகியோர் கூறுகையில், “வீடு தேடி வரும் ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இப்பணியை ஆசிரியர்கள் எளிதாக செய்ய முடியும்.

இந்தப் பணியால் ஆசிரியர் பணி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.

ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. பலரும் ஒரு மாதம் ஆகியும் 450 எண்ணை மட்டும் இணைத்துள்ளனர். பள்ளியில் ஆசிரியர் வேலையை முடித்துவிட்டு, பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை மேற்கண்ட பணியை செய்யச் சொல்கிறார்கள்.

ஆனால், அந்த நேரத்தில் மக்கள் வேலைக்கு சென்றுவிடுவதால் தினமும் இரவு 8 மணி வரை இப்பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களால் ஆசிரியர்கள் அவதிப்படுவதைக் காண முடிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x