

ஒருகாலத்தில், கர்ஜனை செய்யாத சிங்கம் ஒன்று வாழ்ந்தது. ஒருபோதும் அதனால் கர்ஜனை செய்யவே இயலவில்லை. ஆனால், சமவெளிப் பகுதியில் வாழ்ந்த யாருக்கும் இது தெரியாது.
தன்னால் கர்ஜிக்க இயலாது என்பது சிறு வயதிலிருந்தே சிங்கத்துக்கும் தெரியும். எனவே, ஒவ்வொருவரிடம் மென்மையாகப் பேசவும் அவர்கள் பேசுவதைக் கவனிக்கவும் பழகியிருந்தது.
தன் குரலை உயர்த்தாமலேயே, தன்னுடைய கருத்தை மற்றவர்கள் ஏற்கும்படிச் சொல்லவும் கற்றிருந்தது. இப்பண்பு, சமவெளிப் பகுதியில் வாழ்ந்தஎல்லோருடைய நம்பிக்கையை யும், பாசத்தையும் பெற்றுக் கொடுத்தது.
ஒருநாள், பிடிவாதமும் முட்டாள்தனமும் மிகுந்திருந்த பன்றியிடம் சிங்கம் பேசியது. எப்படி பேசியும், தான் சொல்வதை சிங்கத்தால் பன்றிக்கு புரிய வைக்கவே முடியவில்லை. கர்ஜித்தே ஆகவேண்டும் என்கிற வேகம் சிங்கத்துக்குள் எழுந்தது. ஆனால் கர்ஜிக்க முடியவில்லை.
கர்ஜிக்க இயலாதது தனக்கு பாதகமாக இருப்பதாக சிங்கம் நினைத்தது. இச்சிக்கலைத் தீர்க்கவும் தேவைப்படும்போது பயன்படுத்தவும், சில மாதங்கள் செலவழித்து கர்ஜிக்கும் கருவியை சிங்கம் கண்டுபிடித்தது.
விரைவிலேயே, முட்டாள் தனமும், பிடிவாதமும் நிறைந்தபன்றி மறுபடியும் வந்தது. சிங்கத்தைத் தொந்தரவு செய்தது. எனவே, கர்ஜிக்கும்கருவியை சிங்கம் பயன்படுத்தியது. உண்மையிலேயே, படு பயங்கரமான கர்ஜனையை அக்கருவி எழுப்பியது.
“கிர்ர்ரஓஓஊர்ர்ர்ர்ர்உர்ர்!”
இச்சத்தம், பன்றிக்கு பயங்கரமான பயத்தை அளித்தது மட்டுமல்லாமல், சமவெளிப் பகுதியில் வாழ்ந்த அனைத்து விலங்குகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எந்த அளவுக்கு என்றால், பல மாதங்களுக்கு வெளியில் வரவே யாருக்கும் தைரியம் இல்லை.
சிங்கம் தனிமையில் வருந்தியது. தன்மீது மற்றவர்களின் கவனத்தைத் திருப்புவதற்கு, தான் கர்ஜிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர நிறைய நேரம் கிடைத்தது.
தன்னால் கர்ஜிக்க முடியாவிட்டாலும், தான் மற்றவர்களிடம் நன்றாகப் பேசியதையும், தன் கருத்தைப் புரிய வைத்ததையும் நினைத்துப் பார்த்தது.
மெல்ல மெல்ல, கனிவும் அன்பும் நிறைந்த குரலை சிங்கம் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியது. இது, சிங்கத்தின் மீது விலங்குகள் வைத்திருந்த நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியது. அதன்பிறகு, கூச்சலிடவோ, கர்ஜிக்கவோ ஒருபோதும் சிங்கம் யோசிக்கவே இல்லை.
தமிழில்:
சூ.ம.ஜெயசீலன்
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com