

கல்வியின் அடிப்படை, அறம் சார்ந்த ஆளுமை வளர்ச்சியாகும். அறம் என்பதை அறிய, உணர கூர்மையான அறிவும் விழிப்பும் தேவை. எனவே தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கை அறிவு, அறம் இரண்டையும் இன்னும் வளமாக்கும் நோக்கத்தைக் கொண்டதாக அமைவது நலம்.
இன்று பலவித வர்த்தக நோக்கங்களுக்காக மக்களின் வாழ்க்கைச் சூழல் கட்டமைக்கப் படுகின்றன. போலித் தேவைகள் திணிக்கப்படு கின்றன. ஓய்வு நேரங்களும் திருடப்படுகின்றன. சுயம் என்பது ஒளிரத் தடைகள் குவிகின்றன. இவற்றை புறம் தள்ளி ஒரு ஆளுமை மலர வேண்டும்.
அதற்குத் தேவை சரியான புரிதல்களை உருவாக்கும் கல்வியே. ஆனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாகவே பயிற்றுவிக்கின்றனர். போட்டி போட்டு மதிப்பெண்கள் பெற்று புகழ்பெற்ற தொழிற்கல்விக் கூடத்தில் நுழைவதையே கல்வியின் உச்சகட்ட வெற்றியாகக் கருதும் சமூக சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலை மாறவேண்டும்.
அதற்கான கல்வித்திட்டங்களை முன்வைப்பதை அரசு தன் கல்விக் கொள்கையில் பிரதான நோக்கமாக கொள்ளுமானால் நன்று.
பாடத் திட்டங்கள் குறைப்பு
இதற்கு முதல் கட்டமாக தயக்கமின்றி பாடத்திட்டங்களைக் குறைத்தே ஆக வேண்டும். பாடங்கள் சுவாரஸ்யமான மொழி நடையில் எழுதப்படவேண்டும். இதற்குப் பாட வல்லுனருடன் தகுதியான எழுத்தாளர்களை, ஓவியர்களை, கலைஞர்களை இணைத்து எழுத வைக்கலாம். கல்வியாளர்கள் மட்டும் பாடங்களை எழுதும்போது பாடங்கள் சற்று வறண்டு இருப்பதற்கான வாய்ப்பை இது தவிர்க்கும். மாணவர்களை ஈர்க்கவும் செய்யும்.
பாடங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டுமா என்பதும் யோசிக்கத்தக்கது. சில பகுதிகளின் பண்பாடு, வரலாறு, சில சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை அந்தந்தப் பகுதிகளில் இணைத்து அவற்றை ஒரு வல்லுனருடனான களப் பயிற்சியாக அமைத்தால் சிறப்பாக அமையும். அப்பகுதி மாணவர்கள் தங்கள் பகுதி பண்பாட்டுச் சிறப்புகளையும், வரலாற்றையும் அறிவதற்கு இது உதவும். பள்ளிகளில் நூலகங்கள் விஸ்தரிக்கப்பட வேண்டும். அவை மாணவ, மாணவியர் தொடர்ந்து பயன்படுத்தும் சிந்தனைக் கூடமாகவும் அமைய வேண்டும்.
ஆசிரியர்கள் மட்டுமே கல்வியின் நோக்கங்களை பூர்த்தி செய்துவிட முடியாது. அறிஞர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பல்துறை வித்தகர்களை பள்ளி, கல்லூரிகளில் சில நாட்கள் தங்கவைத்து மாணவர்களுடன் உரையாட செய்தல் வேண்டும். இந்த நிகழ்வுக்கான பிரத்யேக தலைப்புகளும், செயல் திட்டங்களும் அவசியம்.
வாசிப்பு குழுக்கள்
ஆசிரியர்- மாணவர்கள் தொடர் உரையாடல்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான பயிற்சியும், ஊக்கமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நிறைய வாசிப்புக் குழுக்கள் ஒரு கல்வியகத்திற்குள் ஏற்படுத்தப்படலாம். இவற்றின் மூலம் நல்ல நூல்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.
மன நலன் காக்க தனியாக மன நல ஆற்றுப்படுத்துனர்களை வரவழைப்பதை விட கற்றல் களத்திலேயே அதற்கான ஜனநாயகச் சூழல்களை உருவாக்க வேண்டும். வாழ்க்கையின் வெற்றி தோல்வி என்பது நொடிக்கு நொடி மாறக்கூடியது என்பதையும், வாழ்க்கை பல வாய்ப்புகளை வழங்க வல்லது. நம் செயல்பாட்டிற்காக பல வாயில்கள் திறந்துள்ளன என்ற புரிதலையும், நம்பிக்கையையும் ஆழமாக உண்டாக்கும் வகையில் மாணவர்கள் பங்கேற்கும் புதிய வழிகளை கண்டறிய வேண்டும்.
மாணவர்கள் அமைப்புக்களை உருவாக்கி, ஜனநாயகப் பண்புகளை, பல நிலைகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்வதினால் அவர்கள் ஆளுமைகளை செழுமைப்படுத்த முடியும்.
டிஜிட்டல் தொழில் நுட்பங்களுக்கு அடிமையாகாமல் அவற்றை எப்படி தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்பை உண்டாக்க கல்வித் திட்டங்கள் மிகவும் அவசியம். இவற்றை நடைமுறைப்படுத்த அரசியல் உறுதி தேவை. கல்விக்காக குறைந்தபட்சமாக இருபது சதவிகித நிதி ஒதுக்கீடு செய்ய அரசு உறுதியேற்க வேண்டும். கல்விப் பரப்பை வளமாக்கிவிட்டால் தமிழகத்தின் எதிர்காலம் உலகத்தரம் மிக்கதாக கண்டிப்பாக மாறும்.
கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற பேராசிரியர், முன்னாள் கல்லூரி முதல்வர், கல்வி செயற்பாட்டாளர்